உடல்நலம் இல்லாத காரணத்தால் என் பணியினைத் தொடர முடியவில்லை. உடல்நலம் சீராகிவிட்ட படியால் மீண்டும் நான் கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
என் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று யாரையும் நான் கூறவில்லை. நான் படித்ததை - என் மனதில் பட்ட கருத்தினை எழுதியுள்ளேன்.
மாறுபட்ட கருத்து உள்ளவர்கள் இத்தொடரினைப் புறந்தள்ளிவிடலாம். தங்களுக்குச் சரியெனப் பட்டதை அடுத்தவர் மீது திணிக்க முயலவேண்டாம்.
நான் தாயகம் திரும்பியவுடன் நண்பர் ஒருவர் பல அருமையான நூல்களை எனக்குத் தந்தார். அவற்றிலே ஒன்று சொளராட்டிர மொழியின் அடிப்படை எழுத்துக்கள் என்ற அருமையான நூல். மொழி அழியாமல் இருக்க வேண்டும் - எளிதில் உலகெங்கும் உள்ளவர்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் - கணினிக்கு ஏற்ற முறையில் கணியில் ஆதிக்கம் உள்ள ஒரு மொழியின் எழுத்தையே நடைமுறையில் வைத்து - மிக எளிமையாக பேராசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அந்த நூல் எழுந்த வரலாறு - அதை ஏற்றுக் கொண்ட அமைப்புகள் - தலைவர்கள் - இயக்கங்கள் பற்றி எல்லாம் மிகத் தெளிவாக அந்த நூ-ல் கூறப்பட்டுள்ளது. இந்த நூலை பி.டி.எப். எனப்படும் பிரதியாக மாற்றி அமெரிக்காவில் வாழும் குசராத்தி நண்பருக்கு அனுப்பினேன். அவர் உடனே "இப்போது உங்கள் மொழியை என்னால் எளிதில் படிக்க முடிகிறது. தமிழில் உள்ள பொருளை மட்டும் இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார். நானும் மின்னஞ்சல் மூலமாகப் பொருளை ஆங்கிலத்தில் கொடுத்தேன். இப்பொழுதெல்லாம் அந்தக் குடும்பத்தினர் தங்கள் குடும்ப விழாக்களில் என் மகன் குடும்பத்தையும் அழைக்கின்றனர். இவ்வளவு நாள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஒதுக்கிய குசராத்திகள் இப்பொழுது இவர்கள் எங்கள் உறவினர்கள். எங்களைப் பிரிந்து தமிழகத்தில் வாழ்பவர்கள் என்று சொல்லத் தலைப்பட்டுவிட்டார்கள். எனவே பேராசியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் சொராஷ்ட்ரா மொழியின் அடிப்படைஎழுத்துக்கள் நூலை ஏற்றுக் கொண்ட அமைப்புகளுக்கும் நிர்வாகிகளுக்கும் - அதை வெளியிட உதவிபுரிந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.