Friday, July 22, 2011

மதுரை சௌராஷ்ட்ர சபையின் அரும்பணிகள்- Madurai Sourashtra Lord Marriage

அடியேன்  13.07.2011 அன்று அறுபது அகவையை நிறைவு செய்தேன்.  எனவே இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற அடியேனது கருத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூறினேன்.  சிலர் திருக்கடையூருக்குச் சென்று பூசை செய்யுங்கள் என்று கூறினார்கள்.  சிலர் புரோகிதரை வைத்து மதுரையில் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்குப் பிடித்து அனைத்து உறவினர்களையும் அழைத்து ஓமம் செய்து கொள்ளலாம் எனக் கருத்து தெரிவித்தனர்.  அப்போது அடியேனது  வயது முதிர்ந்த உறவினர் மதுரை தெற்குக் கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள சௌராஷ்ட்ர சபைக்குச் சொந்தமான தெற்குக் கிருஷ்ணன் கோவிலில் இறைவனுக்குத் திருமணம் நடத்தி வைப்பதாகவும் அதை மிகச் சிறப்பான முறையில் நடத்துகிறார்கள் என்றும் தகவல் தெரிவித்தார்.
உடனே நான் தொலைபேசியில் மதுரையில் உள்ள என் நண்பரைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்துத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.  அவர் இருநாட்களுக்குப் பின்,“சபைக்கு ரூ.3000 கட்ட வேண்டும் என்றும் புரோகிதரைச் சந்தித்துப் பிற விபரங்களைக் கேட்டுத் தெரிந்து பிற பணிகளுக்கான  செலவினத்தைத் தெரிந்து கொள்ளும்படி கூறியதாகவும் கூறி, அதற்கு உத்தேசமாக மேலும் ரூ.3000 செலவாகும் என்றும் தெரிவித்தார்.  உடன் சௌராஷ்ட்ர சபைக்குச் சொந்தமான விருந்தினர் விடுதியை முன்பதிவு செய்தேன்.  சபைக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கட்டினேன்.  புரோகிதரிடம் விஷயத்தை விளக்கி 15.07.2011 அன்று நிகழ்ச்சி நடத்த தேதியும் குறித்தேன்.
திருமணம் இறைவனுக்குத் தானே என்று சட்டையுடன் கோவிலுக்குச் சென்றேன்.  புரோகிதர் சட்டையைக் கழற்றி பஞ்சகச்சம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். ஏன் எனக் கேட்டதற்கு இறைவனுக்குத் திருமணம் நடத்த பணம் கட்டியவர்கள் ஓமகுண்டத்திற்கு முன் அமர வேண்டும் எனக் கூறினார்.  உறவினர்களும் நண்பர்களும் உரிய நேரத்தில் - காலை ஒன்பதரை மணி முதல் வரத் தொடங்கினார்கள்.  வெள்ளிக்கிழமை இராகுகாலம் பத்தரை மணி முதல் பன்னிரண்டு மணிவரை.  ஆனால் இறைவனின் திருமணத்திற்கு இது பொருந்தாது எனப் புரோகிதர் தெரிவித்தார்.  பணிகள் துவங்கின.  மிக அருமையாக - அற்புதமாக இறைவனின் திருமணத்தை நடத்தி வைத்தார் அந்த புரோகிதர்.  கட்டு கட்டாக தாலிக்கயிறு இறைவன் மேல் சாத்தி இருந்தார்.  திருமணம் முடிந்தபிறகு தரப்படும் என்று தெரிவித்தார்.
இறைவனின் திருமணம் பற்றி மிக அழகாக எடுத்து விளக்கினார் அந்த புரோகிதர்.  தனிப்பட்ட முறையில் நாம் ஓமம் செய்து கொண்டால் நமக்கு மட்டுமே நன்மை என்றும் இறைவனுக்குத் திருமணம் செய்து வைத்தால் உலக மக்களுக்கே நன்மை உண்டாகும் என்றும் - எனவே சமூக மக்கள் இறைவனுக்குத் திருமணம் செய்து வைத்து பலனடைய வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.  அவரிடம் அனுமதி பெற்று என் நண்பர்கள் புகைப்படம் எடுத்தனர்.  அதை இத்துடன் பதிவு செய்துள்ளேன்.  சௌராஷ்ட்ர இனத்தைச் சேர்ந்த நண்பர்கள், பெரியோர்கள் அனைவரும் தங்கள் வீட்டு விசேஷங்களின் போது இறைவனுக்குத் திருமணம் நடத்தி இனநலத்தைப் பெருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இது குறித்த காணொளிக் காட்சிகள் யுட்யூப்பில் மதுரை லார்ட் மேரேஜ் என்ற தலைப்பில் தேடினால் மூன்று பகுதிகளாகக் கிடைக்கும். (Madurai Lord Marriage or Madurai Sourashtra Lord Marriage)