சூர்யா: எனக்கும் ஒன்றும் புரியல்ல. தாத்தா வருணன் மகன் சுதாயு கதை என்ன? அவன் கதை என்னும் தண்டு பெற்றது எப்படி? ஏன் அதை அவன் விசயன் மேல் விட்டு கண்ணன் ஏற்க சுதாயுவே மாய்கிறான்? சொல்லுங்க தாத்தா.
தாத்தா: வருணபகவானுக்கு பன்னவாதை என்று ஒரு மனைவி. இவர்களுக்குப் பிறந்தவன் இந்த சுதாயு. வடமொழியில் பர்ணாசா என்னும் மகாநதி. இந்த பன்னவாதையைக் கூறுவார்கள். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்ததும் அவன் மரணமில்லாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறாள் பன்னவாதை. "பன்னவாதையே - உலகத்தில் யார் பிறந்தாலும் இறக்க வேண்டும் என்பது தான் விதி. அது யாரையும் விட்டு வைக்காது. அதனால் அப்படிப்பட்ட வரத்தை அருள என்னால் முடியாது. எனவே பகைவரால் வெல்ல முடியாதபடி வரம் தருகிறேன். நான் அளிக்கும் இந்த கதை இவனை எதிர்த்து யார் போர் புரிந்தாலும் அழிக்கும். யாரும் இந்த நிலவுலகில் தப்ப முடியாது. இது பகையை அழிக்கும். ஆனால் போர் செய்யாமல் நிற்கும் எவர் மீதாவது இது தொடுக்கப்பட்டால் அவனைக் கொல்லாது திரும்பி வந்து எய்தவன் உயிரையே எடுத்து விடும். இது சுதாயுவுக்கும் தெரியும். போர் செய்ய மாட்டேன் என்று கூறிய கண்ணன் தேரின் முன் நிற்பதை மறக்கிறான் விசயன் மேல் உள்ள சினத்தின் காரணமாக. கோபத்தில் விட்ட தண்டு கண்ணன் மேல் படுகிறது. அதனால் தான் கண்ணனை விட்டுவிட்டு எய்த சுதாயுவையே அது சிதைத்து விட்டது. இதைக் கேட்ட சுதாயுவின் இளவல் சதாயு ஓடிவருகிறான். விசயனுடன் கடும் போர் புரிகிறான். அவனும் மாள்கிறான். பின்னர் ஆயிரவாகு என்பவன் வந்து விசயனுடன் பொருது அழிகிறான். ஆயிரம் தோள் உடையவன் இந்த ஆயிரவாகு.
சூர்யா: இதற்கு முன்னால் யாராவது ஆயிரம் தோள்களுடன் இருந்திருக்கிறார்களா தாத்தா?
தாத்தா: இருவர் கண்ணனைச் சுற்றிவரும் கதைகளில் வருகிறார்கள். ஒருவன் கார்த்தவீரியார்ச்சுனன். மற்றொருவன் வாணாசுரன். வெண்ணிறமுடையவனை அர்ச்சுனன் என்பர். கார்த்தவீரியார்ச்சுனன் என்பவன் கிருதவீரிய மகாராசன் என்பவனது மகன். எனவே தான் கார்த்தவீரியார்ச்சுனன் எனப் பெயர் பெற்றான். சந்திர குலத்தில் பிறந்த யயாதி மன்னனது மூத்த குமாரனாகிய யதுவின் குலத்தவன் கிருதவீரியன். சிவன்-திருமால்-பிரமன் ஆகியோர் அம்சமாக விளங்கும் அத்திரி குமாரனாகிய தத்தாத்திரேய முனிவரைத் தொழுது ஆயிரம் தோள் பெற்று சிறந்த முறையில் நிலவுலகத்தை ஆள்கிறான். இவனுக்கு மரணம் பலரால் போற்றப்படும் ஒரு உன்னத பிறவியால் தான் நிகழும் என்ற வரமும் பெற்றவன் இவன். பல வேள்விகள் புரிந்தான். வரங்கள் பல பெற்றான். ஆனால் நிலவுலகில் சாகாவரம் தான் யாரும் பெறமுடியாதே. ஒருதடவை இவன் நர்மதை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திக்குவிசயம் செய்து வந்த இராவணன் இவனை எதிர்க்க இராவணனை இவன் பூச்சி போல் பிடித்து தன் சிறையில் வைத்து அடைத்து விடுகிறான். பின்னர் இராவணனின் முன்னோரான புலத்திய முனி வேண்டியதன் பேரில் அவனைச் சிறையி-ருந்து வெளியே அனுப்புகிறான். அதனால் இவனை "இராவணஜித்' என்று கூட புகழ்வார்கள். இவன் பரசுராமனது தந்தையான சமதக்கினி முனிவர் குடிலுக்குப் போனபோது விருந்துண்டு அங்கிருந்த நந்தினி என்னும் காமதேனுவின் அம்சத்தைப் பார்க்கிறான். அதனிடம் ஆசை கொண்டு அவர் அனுமதி இல்லாமல் அதைக் கொண்டு செல்ல முயல்கிறான். தடுத்த முனிவரைக் கொல்கிறான். இந்த உலகத்தில் ஆசையே எல்லாவிதமான அழிவிற்கும் காரணம். வரம் பல பெற்ற இவனுக்கு ஒரு பசு மீது ஆசை வந்தது. பரசுராமன் இதை அறிகிறான். இவனுடன் கடும் போர் செய்து தன்னந்தனியனாக அனைவரையும் கொன்று இவனது ஆயிரம் தோள்களையும் தலையையும் தனது கோடா-யால் - அதாவது பரசு என்ற ஆயுதத்தால் வெட்டி வீழ்த்துகிறான். பரசுராமன் இப்படிப்பட்ட வெற்றிகொண்டான். அவன் திருமா-ன் அம்சம் தானே.
அடுத்தவன் வாணாசுரன். இவனை வடமொழியில் பாணாசுரன் என்பார்கள். பங்களாதேசம் என்பதை நாம் வங்கதேசம் என்பது போல பாணாசுரனை வாணாசுரன் என்று அழைக்கிறோம். வாணாசுரன் கடுமையான தவம் புரிந்ததால் சிவபெருமானிடமிருந்து ஏராளமான வரங்கள் பெற்று வாழ்ந்த ஒரு அசுரன். ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிலையும் இறைவனிடம் வரமாகப் பெற்றவன். இவனுடைய பெண் உஷை என்பவள். அவள் கண்ணனுடைய பேரனான அநிருத்தனை விரும்புகிறாள். இதை அவனுக்குத் தெரிவிக்கிறாள். அவனும் அந்தப்புரத்தில் யாரும் அறியாமல் வந்து உஷையோடு வாழ்கிறான். இதை அறிந்த பாணன் நாகாத்திரத்தை பயன்படுத்தி அவனைக் கட்டிச் சிறைப்படுத்துகிறான். இதை நாரதர் மூலம் கண்ணன் அறிந்து அநிருத்தனை மீட்க கருடன் மேல் ஏறி பலராமனுடன் புறப்பட்டு வருகிறார். பாணபுரம் என்னும் சோணிதபுரத்துக்கு வர சிவபிரானது கணங்கள் கண்ணனைத் தடுக்கின்றன. அவர்களை எல்லாம் வதைத்து முன்னேறுகிறார். சிவபெருமானால் ஏவப்பட்ட சுரதேவதை வருகிறது. கண்ணன் தானும் ஒரு சுரதேவதையை உருவாக்கி அந்த தேவதையை விரட்டுகிறார். தீக்கடவுள் எதிர்த்து வர அவனையும் நாசஞ்செய்கிறார் கண்ணன். பின்னர் வாணாசுரனே வந்து போரிடுகிறான். அவனுக்குத் துணையாக சிவபெருமானும் கணபதியும் கந்தனும் வந்து போரிடுகிறார்கள். பின்னர் சக்கராயுதத்தை விடுகிறார் கண்ணன். அது அவனது தோள்களை அறுத்துக் கொண்டே போகிறது. சிவபெருமான் கண்ணனை வெகுவாகத் துதித்து பாணனைக் காப்பாற்றும்படி வேண்ட நான்கு தோள்களோடு விடுகிறார் கண்ணன். இப்படி ஆயிரம் தோள் உடையவர்கள் கதை எனக்குத் தெரிந்தவரை இந்த மூன்று பேர் தான். இன்னும் தெரிந்தால் பின்னர் கூறுகிறேன். சரியா. கதைக்கு வருவோம். போர் நடந்த இடத்தில் இருந்து சற்றே ஒதுக்குப்புறமாக தேரை நிறுத்தி கண்ணன், "குதிரைகளுக்குத் தாகமாக உள்ளது. இப்போதைக்கு நீர் அருந்தாமல் கிளம்பாது. எனவே பூமியி-ருந்து நீரை வரவழைக்க வேண்டும்.'' எனக் கூற தனது வாளியால் பூமியைப் பிளந்து ஒரு தடாகத்தை உண்டாக்குகிறான் விசயன். அதிலே புரவிகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன. இதற்குள் விசயனுடன் போர் செய்து தோற்றவர்கள் ஓடோடிப் போய் துரியோதனனிடம் விசயனை எதிர்த்து யாரும் வெற்றி பெற முடியவில்லை என்று தெரிவிக்க அவன் துரோணரிடம் தன்னுடைய குறையைத் தெரிவிக்கிறான். உடனே துரோணர் ஓர் அழிவற்ற கவசம் ஒன்றை துரியோதனனுக்கு வழங்குகிறார். இந்தக் கவசம் தன் ஆசிரியரினால் தனக்கு வழங்கப்பட்ட கவசம் என்று கூறி அதன் வரலாற்றையும் கூறித் தருகிறார்.. இந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடைபெற்ற போது பிரமன் மற்றும் திருமாலுடன் சிவபெருமானைச் சரணடைய அவருடைய மேனியி-ருந்து தோன்றிய கவசத்தை அளித்தார் அவர். அதனைத் தரிப்பவர் எந்த ஆயுதத்தாலும் அழிக்கப்பட மாட்டார்கள் என ஆசியும் கூறினார். அதை உபயோகித்து இந்திரன் விருத்திராசுரனை வென்றான். பின்னர் அந்தக் கவசத்தை அங்கிரசு முனிவருக்குக் கொடுக்க அவர் தன் மகனான பிருகசுபதிக்குக் கொடுக்க அவர் அக்னிவேசிய முனிவருக்குக் கொடுத்தார். அந்த முனிவர் தன் மாணாக்கனான துரோணருக்கு ஈந்து அருளினார். அதை அணிந்து கொண்ட துரியோதனனுக்குத் தலைகால் புரியவில்லை. எல்லோரையும் அச்சுறுத்தலாம் என்ற தவறான நினைப்புடன் தன் படையுடன் விசயனை நோக்கி வருகிறான். அவன் சேனைகள் அந்தப் பொய்கை இருந்த இடத்திற்கு வந்து நீர் பருகி விடாய் தீர்த்துக் கொண்டு விசயனை வளைக்கின்றன. இந்தப் படை தொலைவில் வரும் போதே நோட்டமிட்ட விசயன் கண்ணனிடம் கூறிவிட்டு ஒப்புதல் வாங்கித் தரையில் நின்றபடி அம்புகளை எய்கிறான். துரியோதனன் இப்படி ஆரவாரம் செய்து கொண்டு வருவதன் காரணம் புரியாமல் கண்ணனிடம் கேட்க, கண்ணன் அந்த கவசத்தின் தன்மையைக் கூறி அதை அழிக்க வேண்டும் என்று ஆணையிடுகிறான். விசயன் கணைமழை பொழிந்த போதும் அந்த கவசம் அழியவில்லை. பின்னர் வேல் கொண்டு எறிகிறான். அந்த வேலை அசுவத்தாமன் தன் அம்புகளால் துணிக்கிறான். விசயன் தளர்கிறான். எனவே,கண்ணன் உடன் தன் சங்கை எடுத்து முழக்குகிறான். பின்னர் கண்ணன் ஒரு வேலைக் கொடுத்து அதை எறியும்படி ஆணையிடுகிறான். அதனை எறிந்து துரியோதனன் கவசத்தைப் பிளக்கிறான் விசயன். படைகள் பின்னிடுகின்றன. இந்த வேலைக் கொண்டு தான் நரகாசுரனைக் கொன்றாள் சத்தியபாமை. நரகாசுரன் யார் என்று ஏற்கனவே கூறி உள்ளேன். திருமால் வராக (பன்றி) அவதாரம் செய்து நிலமடந்தையை மீட்ட போது திருமா-ன் தொடுதல் காரணமாக நிலமடந்தைக்குப் பிறந்தவன் தான் நரகாசுரன். இவன் நரர் எனப்படும் மனிதர்களை வாட்டியதால் நரகாசுரன் என்று பெயர் பெற்றான். பின்னர் தேவர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் திருமா-டம் முறையிட்டதன் பேரில் கண்ணன் அவதாரத்தின் போது நிலமடந்தை சத்தியபாமையாகப் பிறந்து கண்ணன் துணைவியாகிறாள். நரகாசுரனை எதிர்த்து கண்ணன் போரிடச் சென்றபோது தேரோட்டியவள் சத்தியபாமை. அவள் தன் முற்பிறப்பை மறந்து விட்டாள். போரின் போது கண்ணன் மயங்கி விழுந்த மாதிரி நடிக்க, அந்தநேரம் நரகாசுரன் கண்ணனைக் கொல்ல அருகில் வர - சத்தியபாமை இந்தவேலைக் கொண்டு அவனை வதம் செய்கிறாள். பின்னர் மயக்கம் தெளிந்த கண்ணன் நரகாசுரன் நிலமடந்தை மகன் என்றும் நிலமடந்தையே சத்தியபாமையாக அவதாரம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வேல் கொண்டு தான் துரோணர் கொடுத்த கவசத்தைப் பிளக்கிறான் விசயன். இந்த வேலை வடநூல்களில் சக்கர ஆயுதம் என்று கூறப்பட்டுள்ளது. வில்-பாரதத்தில் வேல் என்று உள்ளது. சரியா. கண்ணனது சங்கநாதம் கேட்ட தருமர் போர்நிலவரம் அறிந்து வர சாத்தகியை அனுப்புகிறார். அவன் தேர் ஏறி படைகளைக் கடந்து வருகிறான். எதிர்பட்ட கிருதவர்மனை வெல்கிறான். சாத்தகியைத் தடுக்க முயன்ற கண்ணன் புதல்வர்கள் பலர் சாத்தகியால் கொல்லப்படுகிறார்கள். துரோணர் தடுத்துப் பார்க்கிறார். முடியவில்லை. இருவரும் களைத்துப் போகிறார்கள். பின்னர் துச்சாதனன் போரிட்டு தோற்கிறான். ஒருவழியான சாத்தகி முன்னேறி விசயன் இருந்த இடத்தை அடைகிறான். இதற்குள் தருமர் மிகவும் கவலைப்பட்டு சாத்தகி வராததன் காரணம் தெரியாமல் வீமனை அனுப்புகிறார். வீமனைத் தடுக்க முயன்ற விந்தன், விந்தரன் உட்பட துரியோதனன் தம்பியர் முப்பத்தைவரை வீமன் விண்ணுலகு அனுப்புகிறான். கலக்கும் இந்த வீமனும் விசயனை அடைந்து விட்டால் பின்புறம் உள்ள படை முழுவதும் அழிந்து விடும் என்று கருதிய துரோணர் வீமனைத் தடுக்கிறார். வீமன் துரோணரின் தேரைத் தன் கையால் தூக்கி எறிகிறான். சிதைந்து போகிறது துரோணரின் தேர். கன்னன் வந்து வீமனை வளைக்கிறான். அவனுடைய தேரையும் வீமன் சிதைக்க கன்னன் ஓடுகிறான். மீண்டும் துரியோதனனோடு திரும்பி வந்து போரிட்ட கன்னன் கடுமையாக மோதுகிறான். இந்தப் போரில் துரியோதனனின் தம்பியர் மேலும் இருவர் மாள்கின்றனர். தன் கண்ணெதிரே தலைவனின் தம்பிகள் மடிந்ததைக் கண்ட கன்னன் சினம் கொண்டு மீண்டும் வீமனோடு பொருத இந்தப் போரில் மேலும் எட்டு தம்பிகள் மாள்கின்றனர். விகருணனை தப்பிச் செல்லும்படி வீமன் கூறுகிறான். அவனோ என் அண்ணன்கள் இறந்து கிடக்க நான் தப்பிப்போவது நியாயமல்ல என்று கூறி போரைத் தொடர்கிறான். இறுதியில் விகருணனும் மடிகிறான். பின் கன்னனைத் தோற்கடித்து சாத்தகியும் வீமனும் விசயனை நெருங்குகிறார்கள். தடுக்க வந்த பூரிசிரவசைத் தாக்குகிறான் சாத்தகி. மற்போரில் சாத்தகி இளைத்து தோற்கும் நிலை வருகிறது. பூரிசிரவசைக் கொல்லுமாறு விசயனை ஆணையிடுகிறார் கண்ணன். விசயனை இருவர் தனித்துப் போரிடும் போது கணை தொடுப்பது போர்நீதி அல்ல என்று கருதி கணை தொடுக்கத் தயங்குகிறான். பின்னர் கண்ணனின் சினம் கண்டு கணை ஏவி ஒரு கையைத் துணிக்கிறான் விசயன். ஒரு கை இழந்த பூரிசிரவசைக் கொல்கிறான் சாத்தகி. "அறம் அன்று இப்போர்'' என்று துரியோதனன் கூற கண்ணன் புன்சிரிப்புடன் நீங்கள் சிவேதனையும் அபிமனையும் கொன்றபோது போர்நெறி தவறினீர்களே என்று சுட்டிக்காட்டுகிறான்.
'"நென்னல் நீர் அபிமன்தன்னை நேர் அற வென்ற போரும்,
முன்னமே சிவேதன்தன்னை வீடுமன் முடித்த போரும்,
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர்!' என்று என்பார் வில்-யார்.
விசயனின் நோக்கம் கதிரவன் மறைவதற்குள் சயத்திரனைக் கொல்ல வேண்டும் என்பது. ஆனால் சயத்திரனோ எங்கு தேடியும் காணவில்லை. மாயக் கண்ணனுக்குப் புரிந்து விட்டது. அவனை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று. எனவே தன் சக்கரத்தைச் சுற்றவிட்டு கதிரவனை மறைத்தார். உண்மையிலேயே கதிரவன் மறைந்து விட்டான் என்று கருதி துரியோதனன் மகிழ்ச்சி அடைந்தான். கதிரவன் மறைந்தான். விசயன் தான் சொன்னபடி மடிய வேண்டும் என்று கொக்கரித்தான் துரியோதனன். இதைக் கேட்டவுடன் மறைந்திருந்த நிலவறையில் இருந்து மன்னர் புடைசூழ சயத்திரதன் வெளியே வந்தான். வந்தவுடன் விசயனிடம் அவனது தலையைக் கொய்து மாலையில் மடுவின் நடுவில் கதிரவன் மறையும் நேரத்தில் கதிரவன் பூசை செய்து தருப்பிக்கும் அவனது தந்தையான முனிவர் கையில் இந்தத் தலை விழும்படி கணைமழை பொழிய வேண்டும் எனக் கட்டளையிட்டான் கண்ணன். அதை அப்படியே நிறைவேற்றினான் விசயன். பின்னர் தான் கேட்டான் ஏன் தலையை அவ்வளவு தூரம் அனுப்பச் சொன்னீர்கள் என்று. கண்ணன் சயத்திரதன் கதையைச் சொன்னார். "இந்த சயத்திரதன் பிறந்த போது அசரீரி ஒன்று இவன் தலையைக் கீழே போடுபவன் எவனோ அவன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும்'' என்று கூறியுள்ளது. எனவே நீ கீழே விழவைத்தால் உன் தலை வெடிக்கும். பூசை செய்யும் வேளையில் தலை கையில் விழுந்தால் என்னவோ ஏதோ என்று பதட்டத்தில் அந்த முனிவர் அதைக் கீழே போடுவார். இதற்குள் சயத்திரதன் தந்தையும் இறந்து போயிருப்பார். இவனும் இறந்து விட்டான். நீயும் உன் சபதத்தை நிறைவேட்டிவிட்டாய்'' என்று கூறினார். "நான் எங்கே கண்ணா நிறைவேற்றினேன்? நீ சொன்னாய். நான் செய்தேன்'' என்று அடக்கத்தோடு பதில் உரைத்தான் விசயன். இந்த மடு இன்றளவும் குருசேத்திரம் அருகில் உள்ளது. துரியோதனன் நடந்தது அறியும் முன் மாயக் கண்ணன் தன் ஆழியை அகற்றினான். சூரியன் ஒளிவிட்டு ஒரு பனைமரத் தூரத்தில் தெரிந்தது. கதிரவன் மறையவில்லை என்பதையும் கண்ணனால் தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தான் துரியோதனன். வெகுண்ட துரியோதனன் கண்ணனனைப் பலவாறாகப் பழித்தும் இழித்தும் பேசுகிறான். கண்ணனையும் விசயனையும் தாக்க வருகிறான். தடுக்க வருகிறான் கடோற்கசன் தன் மகன் அஞ்சனபன்மனுடன். இடைமறித்த அசுவத்தாமன் கடோற்கசன் மகனைக் கொல்கிறான். கடோற்கசனை அசுவத்தாமன் தண்டால் அடித்து மயக்கமடைய வைக்கிறான். இதுவே கடோற்கசனைக் கொல்ல சரியான தருணம் எனக் கருதிய துரியோதனன் கன்னனை அம்பெய்து கடோற்கசனைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறான். ஆனால் கன்னனோ மயங்கிக் கிடப்பவனை கொல்லக் கூடாது என்று நியாயம் பேசுகிறான்.'தளர்ந்தவன்மேல் அம்பு தொடேன்; விசயனைக் கொல்வேன்' என்று வீரம் பேசுகிறான் கன்னன். பலமுறை விசயனிடம் போரிட்டு மீண்டும் மீண்டும் தோற்கிறான் கன்னன். பொழுது சாய்ந்தாலும் போரை நிறுத்தக் கூடாது - விளக்குகள் ஏந்திப் போரிடுக எனக் கட்டளையிடுகிறான் துரியோதனன். இந்த நேரத்தில் அலாயுதன் என்னும் அரக்கன் சபதம் செய்து வீமனோடு பொருதுகிறான். வீமனை விலக்கி கடோற்கசன் வந்து அரக்கன் அலாயுதனோடு மோதுகிறான். வெற்றி பெற்ற கடோற்கசன் அலாயுதனைக் கொல்கிறான். இரவு நேரம் என்பதால் எல்லோரும் தளர்வடைகிறார்கள். ஆனால் கடோற்கசன் பலமடங்கு பலம் பெறுகிறான். தன் மாயையால் துரியோதனன் படையைக் கலக்கி பெரும்படையை அழிக்கிறான். பதறிப் போகிறான் துரியோதனன். கன்னனை அழைத்து உடனே கடோற்கசனைக் கொல்லும்படி கட்டளையிடுகிறான். கன்னன் தன்னிடம் உள்ள வேல் பற்றி கூறி காலை வரை பொறுத்தால் மந்திரம் ப-க்கும் என்றும் காலையில் விசயனைக் கொல்லலாம் என்றும் கூற - துரியோதனன் "காலை வரை நாம் எல்லோரும் உயிருடன் இருந்தால் தானே நாளை போர் நடக்கும். இந்த இரவிலேயே கடோற்கசன் எல்லோரையும் மாய்த்து விடுவான் போ-ருக்கிறது. எல்லோரும் அழிந்தபின் விசயனை அழித்து யார் அரசாளப் போகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை கன்னா - இப்போதே இந்தக் கணமே அந்த வேலை கடோற்கசன் மேல் ஏவி அவனைக் கொல்'' என்று கட்டளையிட அஞ்ஞனமே செய்கிறான் நன்றிமறவா கன்னன். கடோற்கசன் என்னும் புயல் ஓய்கிறது. சாய்கிறான் கடோற்கசன். அடுத்து துரியோதனன் ஏவலால் துரோணர் விராடனையும் துருபதனையும் சரங்களால் சல்லடையாக்கி கொல்கிறார். தன் கண் எதிரே தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட தளபதி திட்டத்துய்மன் பழி வாங்கியே தீருவேன் எனச் சபதம் எடுத்து வெளியேறுகிறான். வெற்றி மகிழ்ச்சியோடு போரை முடித்துக் கொண்டு பாடிவீட்டிற்குப் போகிறான் துரியோதனன். பாண்டவர்கள் அசகாய சூரர்களில் முதல் நாள் அபமன் இறந்து பட்டதும் - இன்றைய தினம் கடோற்கசன் இறந்ததும் நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள். ஆனால் கண்ணன் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறான். காரணத்தை அறிய தருமன் ஆவல் கொண்டு கேட்கிறான். அப்போது "கடோற்கசன் இந்த வேலால் இன்று சாகாதிருந்தால் நாளை விசயன் அல்லவா மடிந்திருப்பான். இவன் இறந்து விசயனைக் காப்பாற்றி விட்டான். நானும் விசயனைக் காக்க முடிந்தது'' என்று பதில் கூறுகிறான் கண்ணன். "உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால், அந்த வேலையில், மற்று எறிவதற்கு இருந்தான், ஆற்றலால் கூற்றினும் கொடியோன்.'' குந்திக்கு வாக்கு கொடுத்திருந்தான் ஒருமுறை தான் நாகக் கணையை விடுப்பேன் என்று. ஆனால் குறி தவறினால் கேவலம் என்று அன்று வீரம் பேசிய கன்னன் மனதில் ஓருவேளை கண்ணன் மாயத்தால் ஏதாவது நடந்து விசயன் தப்பினால் இந்த வேல் பயன்படும் என்று கருதியிருந்தான். ஆனால் கடோற்கசன் வந்து கெடுத்துவிட்டான். இப்படியாக பதினான்காம் நாள் போர் முடிவடைந்தது. மீதிக் கதையை நாளை பார்ப்போம் சூரியா.
தாத்தா: பதினைந்தாம் நாள் போர் தொடங்குகிறது. விசயன் கணைகளால் வாலவீமனும் சோமதத்தனும் மாள்கிறார்கள். துரோணர் இன்று தான் கற்ற வித்தை முழுவதையும் பயன்படுத்தி களத்தில் தருமர் படையை உண்டு இல்லை என்று கலக்குகிறார். யாரும் அவரைப் பொருது தடுக்கமுடியவில்லை. இதைக் கண்ட பல முனிவர்கள் போர்க்களத்திற்கு விரைகிறார்கள். அகத்தியர், மரீசு, வசிட்டர், அத்திரி, விசுவாமித்திரர், கௌதமர், பரத்துவாசர் போன்ற போன்றோர் துரோணரைக் கண்டு உபதேசம் செய்கிறார்கள்.
'தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்;''
என்று கூறுகிறார்கள். முனிவர்கள் உபதேசத்தால் துரோணன் அமைதியடைந்தான். இதைப்புரிந்து கொண்ட கண்ணன் துரோணன் மாளவேண்டிய நாள் இன்றே. தொடு கணையை என்று விசயனுக்கு ஆணையிட்டார். தருமரிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினார். தருமர் பொய் சொல்லமாட்டேன் என மறுத்தபோது கண்ணன் நியாயம் என்ன என்பதைப் பகர்கிறார்.
'உம்மையில் மறுமைதன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின்,
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவர் அவர் இயற்கையாலே
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்கும் ஆகின்,
பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்கும் மாதோ!
ஒரு நல்ல செயலைகி கருதி பொய் கூறுவது தவறாகாது என்கிறார் கண்ணன். உடனே தருமன் துரோணர் இருக்கும் இடம் சென்று "அசுவத்தாமா என்னும் வாணத்துக்கு வீமன் சிங்கமானான்'' என்கிறார். வாணம் என்பது யானை. வீமன் யானையைக் கொன்றான் என்பது தான் பொருள். தவறாக வீமன் அசுவத்தாமனைக் கொன்றான் என்று கருதிய துரோணர் படைக்கலத்தைக் கீழே போட்டுவிட்டு அமைதியாக மரணத்தை எதிர்நோக்கி நிற்கிறார்.
'அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும்
மத்த வாரணத்துக்கு, ஐயோ! மாருதி சிங்கம் ஆனான்;
எத்தனை கோடி சேனை இக் களத்து இறந்தது! அந்த
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது!' என்றான் தருமன் என்கிறார் வில்-யார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி திட்டத்துய்மன் கணை விடுகிறான் துரோணரை நோக்கி. துரோணர் மாள்கிறார். செய்தி எட்டுகிறது அசுவத்தாமனுக்கு. ஓடோடிக் கதறிக் கொண்டு வருகிறான். இறந்த தன் தந்தையைக் கண்டு வருந்துகிறான்.
கண்டான், வீழ்ந்தான்; அம் முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் மோதி, கண் பொழி நீரில் குளித்திட்டான்;
வண் தார் சோர, மண் உடல் கூர, வல் நஞ்சம்
உண்டார் போல, எண்ணம் அழிந்தான், உளம் நொந்தான்.
'வில்லாய் நீ; வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ;
சொல்லாய் நீ; தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ;
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே!
எல்லாம் இன்றே பொன்றின, உன்னோடு; எந்தாயே!
யாராலும் வெல்லமுடியாத எந்தையே இப்படி பொய்ச்செய்தி கேட்டு மடிந்தனையே என்கிறான் அசுவத்தாமன். துரியோதனன் ஓடோடி வந்து தேற்றுகிறான் அசுவத்தாமனை. யாவரையும் வெல்வேன் என வில்லை வளைக்கிறன் அசுவத்தாமன். கண்ணன் உடனே எல்லோரையும் தத்தம் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு நிற்கக் கட்டளை இடுகிறார். எல்லோரும் கண்ணன் சொல்லுக்குக் கட்டுப்படுகிறார்கள். அசுவத்தாமன் நாராயணக் கணையை விடுக்கிறான். அனைவரும் வணங்கியதால் அது யாரும் கொல்லவில்லை. நேரே வீமனை சென்றடைகிறது. இதைக் கண்ட கண்ணன் ஓடிப்போய் வீமன் கையில் இருந்த வில்லைப் பிடுங்கி வெறும் கையுடன் நிற்க வைக்கிறார். வீமனை நோக்கி வந்த நாராயணக் கணை நாணித் திரும்புகிறது. அசுவத்தாமன் பாசுபதம் விட எண்ணி அந்த வாளியை எடுக்கிறான். வியாத முனிவரும் பிற முனிவர்களும் வந்து அசுவத்தாமனை அமைதிப்படுத்தி அந்த அத்திரத்தை உபயோகிக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார்கள். கண்ணனின் மாய வேலை தான் அது. அந்த அத்திரம் யாருக்காக என்று உள்ளதோ? எப்போது பயன்படப் போகிறதோ? பார்ப்போம். துரியோதனன் சஞ்சயனை அழைத்து துரோணர் இறந்த விபரத்தை திருதராட்டிரனுக்குத் தெரிவித்து வரும்படி அனுப்புகிறான். கன்னன் சேனைத்தலைவன் ஆகிறான்.
பதினாறாம் நாள் போர் துவங்குகிறது. கன்னன் சேனைத்தலைவன். பெரிய எதிர்பார்ப்புகளோடு வருகிறான். வில்முனையால் யாரையும் வெல்லலாம் என்ற அகந்தை நிறைந்த உள்ளம். கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம். கன்னன் மகர வியூகத்தை வகுக்கிறான். திட்டத்துய்மன் சக்கர வியூகம் வகுக்கிறான். காசி அரசனும் வீமனும் களிறு மீது ஏறி பொருதுகிறார்கள். காசி மன்னன் கேமதூர்த்தி வேல் எறிகிறான். வீமனின் யானை மடிகிறது. வீமனும் அவன் யானையை வீழ்த்துகிறான். இருவரும் தண்டு கொண்டு பொருதுகிறார்கள். கடுமையான போர் நடக்கிறது. இறுதியில் கேமனை வீமன் கொல்லுகிறான். இதனால் கௌரவர் சேனை சிதறுகிறது. கன்னன் மீண்டும் ஒன்றுசேர்த்து பொருதுகிறான். கன்னனும் நகுலனும் பரி மீது அமர்ந்து பொருதுகிறார்கள்.
சூர்யா: பரி என்றால் என்னங்க தாத்தா?
தாத்தா: பரி என்றால் குதிரை. மதுரைக்கு அழகர் எதன் மேல் வருகிறார். பரிமேல் வருகிறார். பரிமேல்அழகர். திருக்குறளுக்கு பரிமேலழகர் என்பவர் உரை எழுதியிருக்கிறார். நடைமுறையில் உள்ள சொல். நாம் பயன்படுத்தாததால் சொற்கள் மறைந்து விடுகின்றன. தெரியாமல் போய் விடுகிறது. தமிழ் அகராதி வைத்துக் கொண்டு தினம் பத்து தமிழ் சொற்களையாவது நீ கற்க வேண்டும் புரிகிறதா? தமிழ்பேப்பர்.நெட் என்று ஒரு வலைத்தளம் உள்ளது. அதிலே கொத்தனார் நோட்" என்று கோனார் நோட்ஸ் போல வருகிறது. இலக்கணத்தை புதுமுறையில் கற்றுக் கொடுக்கிறார் ஒரு ஆசிரியர். மிக நன்றாக உள்ளது. படித்துப் பார். இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். திரைப்படங்களை வைத்து தமிழ் கற்றுக் கொடுக்கிறார் அந்த ஆசான். அதைப் படித்துப் புரிந்து கொண்டால் தமிழில் பிழைகளைத் தவிர்க்கலாம். கதைக்கு வருவோம். நகுலன் கணைகளால் கன்னன் குதிரை இழந்து தேரில் ஏறுகிறான். நகுலனும் தேரில் ஏறிப் போர் புரிகிறான். இம்முறை கடுமையான போர் புரியும் கன்னன் நகுலனை பின்னடையச் செய்கிறான். பின்னர் விசயனை எதிர்க்கப் புறப்படுகிறான். விசயன் அம்பினால் கன்னன் வ- இழந்து மீள்கிறான். மறுபுறம் அசுவத்தாமனும் வீமனும் வெம்போர் புரிகிறார்கள். திட்டத்துய்மனை சஞ்சத்தகரும் நாராயணகோபாலரும் எதிர்க்கிறார்கள். அந்த இடத்திற்குக் கண்ணனுடன் விசயன் வருகிறான் . சஞ்சத்தகரும் நாராயணகோபாலரும் முற்றிலும் அழிகிறார்கள். கண்ணனின் வாரிசுகள் இந்த நாராயணகோபாலர்கள். ஆனால் தாம் எந்த படைக்காகப் போரிட்டார்களோ அவர்களுக்காக தங்கள் தந்தை எதிர்புறம் தேர் ஓட்டும் போதே மடிகிறார்கள். சேனை முதுகிடுகிறது. இதை அறிந்த துரியோதனன் பெரும் படையுடன் வந்து தருமனை எதிர்க்கிறான். ஆனால் தருமர் தன் திறமை முழுவதையும் காட்டி வில் கொண்டு கணை தொடுக்கிறார். துரியோதனன் தளர்வுறுகிறான். தருமர் நகைத்து "உன்னைக் கொல்வதாக என் தம்பி வீமன் சபதம் எடுத்திருக்கிறான். எனவே இன்று தப்பிப் போ. நாளை போருக்கு வா. இன்று போய் நாளை வா'' என்கிறார்.
அனிலன் குமாரனரசரசனியெ னனுசன் சொல் வாய்மை பழுது படுமென,
வுனையின்று கோறலொழிவதலது நினுரமென்கொலாகு மெனதுகணையெதிர்,
புனை தும்பைமாலை சருகுபட வெழு பொடிமண்டவோடி மறைகவிரைவுட,
னினியெங்க ளாண்மையுரை செய்தெது பயனெதிர்வந்து நாளை யணிக விகலியே
இன்று போய் நாளை வா என்று தருமர் உரைத்தவுடன் சினமுறுகிறான் துரியோதனன். தன் கதையை எடுத்து தருமன் மேல் எறிகிறான். தருமர் தன் வேலால் அதை தடுக்கிறார். அந்த வேல் கதையைத் தடுத்தது மட்டுமல்ல சீறிப்பாய்ந்து துரியோதனனைத் தாக்குகிறது. துரியோதனன் தரையில் வீழ்கிறான். கன்னன் மற்றும் அசுவத்தாமன் அங்கு விரைகிறார்கள். சினத்துடன் அனைவரும் தருமரை வளைக்கிறார்கள். உடன் விசயன் அங்கு வந்து தருமருக்கு உதவுகிறான். மேற்கே சூரியன் மறைகிறான். பதினாறாம் நாள் போர் முடிகிறது. துயருடன் துரியோதனன் படைகள் பாடிவீட்டிற்குத் திரும்ப பாண்டவர் படை மகிழ்ச்சியுடன் திரும்புகிறது.
கதிரவன் கிழக்கே உதிக்க பதினேழாம் நாள் போர் துவங்க உள்ளது. கன்னன் துரியோதனனோடு களம் புக - தம்பியர் சூழ வந்த தர்மன் கண்ணனிடம் வந்து "இன்றைய போரில் கன்னன் இறப்பானோ?''என்று கேட்கிறார். கண்ணன், "இன்று கன்னனும் நாளை துரியோதனனும் மடிவார்கள். நீ அரசாளப் போவது உறுதி'' என்று பதில் கூறுகிறார்.'கன்னன் இன்றும், துரியோதனன் நாளையும், மடிய அவனி நின்னதாம்' என்பது கண்ணன் வாக்கு. தருமனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. நன்றியைத் தெரிவிக்கும் விதமாகக் கண்ணனின் பாதங்களில் பணிந்து போற்றுகிறான் கண்ணனனை. கண்ணன் செய்த உதவிகளை எல்லாம் பட்டிய-டுகிறான் தருமன். கேட்கத் திகட்டாத பகுதி இது. மலரும் நினைவுகள் போல் கண்ணன் செய்த உதவிகள் ஒவ்வொன்றாகக் கூறும் பகுதி இது 'எங்கள் மானமும்' தொல் ஆண்மையும் புகழும் நீ அலால், யார் நிலையிடுவார்?
வெங் கண் மாசுணத்தோன் வஞ்சனைக் கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து, இன்று அம் கண் மா நிலமும் தந்தனை!' எனப் பேர் அறத்தின் மா மகன் இவை உரைப்பான்:
'பொங்கு அழல் சிந்தைச் சுயோதனன் கங்கைப் புனல் விளையாட்டிடைப் புதைத்த வெங் கழு முனையில் விழாமல், ஓர் அளி ஆய், வீமனுக்கு ஆர் உயிர் அளித்தாய்; பைங் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர, பயந்த நுங்கு அழல் அனையாள் நாணமும் துகிலும் நோக்கினை-காக்கும் நாயகனே!
'கானக மருங்கில், மேவலன் பணியால், கடும் பசியுடன் வரும் கடவுள் மானவ முனிவன் தாபமும் சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய்; யான் ஒரு பொருளாத் தூது சென்றருளி, எதிர் இலா விதுரன் வெஞ் சிலையும், பானுவின் மதலை கவசமும், அகற்றி, பரிந்து பல் வினைகளும் புரிந்தாய்;
'களப் பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்தனக்கு நேர்ந்திடவும், கிளப்ப அருந் திதியை மயக்கி, வான் மதியம் கிளர் ஒளி அருக்கனைக் கேட்ப, வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி, உளப் பொலிவுடனே விசயனுக்கு அருளால், உருளுடைக் கொடி கொள் தேர் ஊர்ந்தாய்;
'அஞ்சியோ, அன்றி அருள்கொலோ, அறியேன்; ஆகவத்து அடுதொழில் மறந்த வெஞ் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி, மீளவும் பொரும்படி விதித்தாய்; வஞ்சினம் மறந்து, நேமியும் தரித்து, வலம்புரி குறித்து, மூதாதை துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன் வழாவகை துரந்தாய்;
'ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெங் கடத்து ஒருத்தலின்மேல் வரு பகதத்தன் எறிந்த வேல் உன்தன் வண் துழாய் மார்பகத்து ஏற்றாய்; பொரு பகை அரசர் பலர் பட, அபிமன் பொன்றிய பொழுது, செந் தழலின் நிருபனை முனியால் விழாவகை விலக்கி, நிசியில் வெங் கயிலையும் கண்டாய்;
'வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த வெங் கதையைக் கருணையால் மருமம் புதைய ஏற்று, அந்தக் காளை கையறும்படி கண்டாய்; தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண்-சங்கமும் முழக்கி, நேமியினால் அருணன் ஆதபத்தை மறைத்து, இரவு அழைத்து, ஆங்கு அபிமனுக்கு அரும் பழி கொண்டாய்;
'ஏ வருஞ் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள் வீ வரும் தன்மை அறிந்து, வாகனமும் விறல் படைகளும் ஒழித்திட்டாய்; மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே! பார்த்திவர் பலரும் தேவரும் உணரார், நின் செயல்!'
இப்படி தருமர் போற்றியவுடன் உளமகிழ்ந்த கண்ணன் படைகளை அணிவகுக்க திட்டத்துய்மனுக்கு கட்டளையிடுகிறார். படையணிவகுப்பைக் கண்ட கன்னன் துரியோதனனிடம், "சல்-யன் மட்டும் இன்று எனது தேரைச் செலுத்தினால் இன்று நான் யாவரையும் வெல்வேன். எல்லாம் வல்ல கண்ணன் அங்கே விசயனுக்குத் தேர் ஓட்டுகிறான். அதனால் அவனை வெல்ல முடியவில்லை. இங்கே தேர் செலுத்துவதில் வல்லவன் சல்-யனே. அவன் இன்று தேர் கடவுமாகில் வெற்றி பெறலாம். அப்படித் தேரைச் செலுத்தினால் கண்ணன் என்ன சிவனே வந்து விசயனுக்குத் தேரோட்டினாலும் விசயனை நான் வெல்வேன்.'' என்று மிக்க அகந்தையோடு தன் ஆசையைத் தெரிவிக்கிறான். ஆனால் விதி அவன் நாக்கில் மீண்டும் விளையாடுகிறது. வில்-யார் மிக அழகாகச் சொல்வார். "இன்றே செஞ்சோற்றுக் கடனை நான் கழியேனாகில் - உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது? இயம்புவாயே'' என்கிறான். அவன் நாவே நமக்கு உரைக்கிறது அவன் இன்று இறக்கப் போகிறான் என்று. சிறிது நேரம் யோசிக்கிறான் துரியோதனன். பின்னர் ஒருவாறு தைரியத்துடன் போய் சல்-யனிடம் தன் வேண்டுகோளை விடுக்கிறான். சல்-யனுக்கோ கோபம் கொந்தளிக்கிறது. வாய்ப்பினால் மன்னன் ஆனவனுக்கு மன்னவன் குலத்தில் வந்த நான் தேரோட்டுவதா? இதை வேறு யாராவது கூறியிருந்தால் நாக்கை அறுத்திருப்பேன்.'' என்று பதில் உரைக்கிறான். பின்னர் துரியோதனன் வெகுவாக அவனைச் சமாதானப்படுத்தி ஒருப்பட வைக்கிறான். மகிழ்ச்சி அடைந்த கன்னன் தானம் பல புரிகிறான். பின்னர் தேர்ப்பாகனாக அமர்ந்த சல்-யனிடம் தன்னைத் தானே பலவாறு புகழ்ந்து-பாராட்டிப் பேசுகிறான். சல்-யன் இளநகை புரிந்து கன்னனது தருக்கு அடங்கும் வண்ணம், 'நீ நின் வென்றியும், வலியும், கற்ற வின்மையும், விளம்ப வேண்டா; ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து, சென்று எதிர் முனைந்தபோது, உன் சேவகம் தெரியும் மாதோ! '' என்று பதில் சொல்கிறான். உடனே கன்னன் சல்-யனைக் கடிந்து கொள்கிறான். தேரில் இருந்து சல்-யன் இறங்கி கன்னனை சண்டைக்கு அழைக்கிறான். துரியோதனன் ஓடோடி வந்து இருவரையும் சமாதானப்படுத்தி தேரில் ஏற்றிப் போருக்கு அனுப்புகிறான். போர் துவங்குகிறது. திட்டத்துய்மன் வீரர்களோடு வந்து கன்னனோடு போரிட்டுத் தோற்கிறான். வீமன் உதவிக்கு வந்து கன்னனோடு போரிடுகிறான். வீமனோடு மோதித் தோற்கிறான் கன்னன். "உன்னை விசயன் கொல்வதாகச் சபதம் செய்திருக்கிறான். அவன் வஞ்சினம் அழியும். எனவே தப்பிப்போ'' என்று கூறிச் செல்கிறான் வீமன். சோழ மன்னன் போரில் பாண்டவருக்காகப் போரிடுகிறான். மாகதனுடன் போரிட்டு அவனைக் கொல்கிறான் சோழன். வில்-யார் தமிழ்நாட்டு வீரத்தை மிக அழகாக பதினேழாம் நாள் மற்றும் பதினெட்டாம் நாள் போரில் வர்ணிப்பார்.
"மிண்டு முது புலி ஏறு பதாகையன், வென்றி வளவனை யார் நிகர் வீரரே?''. பு-க்கொடி உடைய பு-கள் அன்றோ நம் தமிழர்கள். அன்றும் சரி இன்றும் சரி பு-களை ஒழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்று அன்றே சொன்னார் வில்-யார். அசுவத்தாமன் தகவலைக் கேட்டு மிக்க சினத்துடன் சோழ மன்னனுடன் போர் புரிய வருகிறான். அசுவத்தாமனை சோழ மன்னன் வென்று வெறும் காலுடன் உயிரோடு போகும்படி அனுப்பி வைக்கிறான். மறுபுறம் துரியோதனன் தம்பி சுதக்கணன் நகுலனோடு மோதி தோற்று ஓடுகிறான். கன்னன் ஒருபுறம் தருமரோடு போர் புரிகிறான். கடுமையான போர் நடக்கிறது. க-ங்கர் முத-ய பல மன்னர்களை தருமர் வென்று விண்புகச் செய்கிறார். தருமன் சங்கு ஊத கன்னனும் சங்கை முழக்குகிறான். கன்னன் மிகச் சினத்துடன் கணை தொடுக்கிறான். தருமர் புறம்கொடுத்து ஓடப் பார்க்கிறார். கன்னனோ தருமரிடம் புறமிடுதல் தகாது என்று கூறி போரிட அழைக்கிறார். இதைக் கண்ட வீமன் அங்கு வருகிறான் தருமரின் துணையாக். தேரோட்டி சல்-யன் வீமனை வெல்ல முடியாது. அரிதான விடயம். என்று கூற கன்னன் வீரம் பேசி வீமனோடு மோதுகிறான். வீமன் அம்பால் கன்னன் அயர்ந்து வீழ்கிறான். சல்-யன் பின்னர் கன்னனைத் தேற்றி போரிடுமாறு கூறுகிறான். இப்போது கன்னன் மிக்க சினத்துடன் போரிட்டதால் வீமன் பின்னடைய நேரிடுகிறது. இதைக் கேட்ட விசயன் போர்க்களத்திற்கு தானே வருகிறான். கன்னனுக்கு உதவியாக அசுவத்தாமன் வந்து நிற்கிறான். கடும்போர் நிகழ்கிறது. கண்ணன் உரைப்படி பிறைமுக அம்பைத் தொடுக்கிறான் விசயன். அசுவத்தாமன் மயங்கி அவனது தேரில் சாய்கிறான். துச்சாதனன் ஓடோடி வந்து தேரோடும் அசுவத்தாமனை அழைத்துச் செல்கிறான். அசுவத்தாமன் மீண்டும் திரும்புகிறான் போர்க்களத்திற்கு. இப்போது சித்திரவாக பாண்டியன் அசுவத்தாமனோடு மோதுகிறான். வியக்கத்தக்க வீரச்செயல் ஆற்றுகிறான் இந்த பாண்டிய மன்னன்.
"அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே!
வைகை ஆறு உடையவனை அஞ்ச, அருஞ் சமர் உடற்றினானே.
அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ் அவ் அம்பால்
முந்துற விலக்கி, தங்கள் மூவகைத் தமிழும் போல,
சிந்தையில் குளிக்குமாறு, சிலணிமுகம் மூன்று விட்டான்;-
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான்?"
சூர்யா: தாத்தா - தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோ என்று சொல்றாரே இந்தப் புலவர். இந்தப் பாண்டிய மன்னன் துரோணரையே வென்றவனா?
தாத்தா: அப்படியும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிவபிரான் பிட்டுக்கு மண்சுமந்த கதையில் முதுகில் பாண்டியனிடம் அடிபடுகிறார். அப்போது பாண்டியன் சிவபெருமானின் முதுகையே கண்டவன் என்ற பொருளில் வருகிறது என்று என்னுடைய ஆசிரியர் எனக்குச் சொன்னார். சரியா. கதைக்கு வருவோம். கடுமையான போரில் இறுதியில் பாண்டியன் இறந்துபடுகிறான். தருமரும் பின்னிடுகிறார். தகவல் சோழ மன்னனுக்குத் தெரிகிறது. ஓடோடி வருகிறான். தென்னவன் மாண்டான் என்று அறிந்தவுடன். அசுவத்தாமன் முன் வந்த சோழன் அவனை இகழ்கிறான். "பாண்டியன் தரையில் இருந்த போது நீ தேரில் நின்று அம்பெய்து அவனைக் கொன்றது அறமா'' என்று பேசி போரிடுகிறான்.
'தேரின்மேல் நின்று, நீ சிறு கண் செம்புகர்க்
காரின்மேல் வீரனைக் கணையின் காய்வதே?
பாரின்மேல் ஆர்கொல் இப் பாதகம் செய்தார்?-
நீரின்மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய்!
'ஆர்ப்பன மறை மொழிந்து, அனைவர் பாவமும்
தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே,
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய,
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ?
சோழமன்னன் அந்தணனின் தொழில் என்ன என்பதை மிக அழகாக எடுத்தியம்பி அசுவத்தாமனை இகழும் இந்தப் பாடல் கருத்து இன்று வரை தொடரத் தான் செய்கிறது. சோழன் எறிந்த வேலால் அசுவத்தாமன் கலங்கி கீழே விழுகிறான். சகுனி முத-யோர் ஓடிவந்து அவனைத் தேற்றுகின்றனர். பல மன்னர் வந்து அசுவத்தாமனுடன் அணி சேர்ந்து சோழனுடன் போர் செய்து அனைத்து மன்னர்களும் அழிகிறார்கள். அசுவத்தாமன் தோல்வியோடு துவண்டு திரும்புகிறான். துச்சாதனன் ஒன்பது தம்பியருடன் வந்து வீமனை எதிர்க்கிறான். வீமன் துச்சாதனனின் வீரத்தையும் முந்தைய செய்கைகளை இகழ்கிறான். துச்சாதனன் வாய்பேசாது நிற்கிறான். மற்ற தம்பிமார்கள் பொருதுகிறார்கள். ஒன்பது தம்பிமார்களும் மாள்கிறார்கள். துச்சாதனன் வெகுண்டு வீமனுடன் விற்போர் புரிகிறான். பின்னர் கதை போர் புரிகிறார்கள். இறுதியில் மற்போர் புரிகிறார்கள். வீமன் துச்சாதனன் உடலைப் பிளக்கிறான். அவனுடைய குருதியைக் கொள்பளிக்கிறான். அந்தக் குருதி வெள்ளத்தில் குளிக்கிறான். விபரம் அறிந்து விசயனும் கண்ணனும் அந்த இடத்திற்கு விரைகிறார்கள். வீமன் துச்சாதனன் விரல் பத்தையும் தனித்தனியாகத் துணிக்கிறான். மீண்டும் குருதியை எடுத்துக் கொப்பளித்து - கூத்தாடி மகிழ்ந்து அண்ணன் தருமனை அடைந்து தகவலைச் சொல்- மகிழ்கிறான். கன்னன் இந்தத் தகவல் அறிந்து துயருற்று போரில் சற்றே ஓய்ந்திருக்கிறான். சல்-யன் இடித்துரைக்கிறான். அச்சப்படவில்லை - துச்சாதனன் மரணத்தால் சிறிது துயரடைந்தேன் என்று கூறுகிறான் கன்னன். வெருவுமோ, பாந்தள் எதிர் செல்லப் பறவைக்கு அரசு?' என்றான். இதற்குள் விசயன் விடசேனனோடு பொருது அவனை மாய்க்கிறான். விடசேனன் என்பவன் கன்னனது மகன். இது கேட்ட கன்னன் கருத்தழிகிறான். சல்-யன் தேற்றுகிறான். இத்தருணத்தில் அசுவத்தாமன் துரியோதனனை அடுத்து, "இப்பொழுதாவது பாண்டவருடன் கூடி வாழ முற்படு' என அறிவுரை கூறுகிறான். மறுக்கிறான் துரியோதனன். அசுவத்தாமன் மற்றும் துரியோதனன் கன்னனை அடைந்து விசயனது உயிரைக் கொள்ளுமாறு தூண்டுகிறார்கள். "விசயன் தலையை இன்றே கொய்வேன்' என்று கொக்கரித்து கன்னன் விசயனை நோக்கி விரைகிறான். கடும்போர் நிகழ்கிறது. விசயன் தேவதத்தம் என்னும் சங்கை முழக்குகிறான். கன்னன் பராபரம் என்னும் சங்கை ஊதுகிறான். மாயன் தேரை நகர்த்த முடியாதபடி சரக்கூடம் அமைக்கிறான் கன்னன். கண்ணனும் தன் மாயத்தால் எதிர்புறம் இவ்வாறே சரக்கூடம் அமையுமாறு செய்து, விசயனை நோக்கி கன்னனுடன் போரிடத் தயங்குவதேன் என்று கேட்கிறான்.'கன்னன் தருமன்போல் தோன்றுதலின் எனக்கு அமர் செய்தல் அரிது; தேரினை மீளவிடு' எனக் கூறி தருமன் இருந்த பக்கம் விரைகிறார்கள். தருமன் கன்னனுடன் போரிடாது திரும்பியது கண்டு -விசயனையும் அவனது வில்லையும் பழிக்கிறான் தருமன். விசயனுக்குத் தன் வில்லைப் பழித்தால் பிடிக்காது. போர் தொடுத்துக் கொன்று விடுவான். இப்போதும் அண்ணன் என்றும் பாராமல் கொல்லத் துணிகிறான். கண்ணன் விலக்கி விட்டு அமைதியடையச் செய்து அண்ணன் தர்மனை மிகக் கீழ்த்தரமாக இகழும் படியும் அப்படிச் செய்தால் அது கொன்றதற்குச் சமானம் என்றும் வழி ஒன்றையும் கூறுகிறான்.
"கூர் ஆர் முனை வாளி கொள் இச் சிலையைக் குறை என் எதிர் கூறினர், அம் புவிமேல் யார் ஆயினும், ஆவி செகுத்திடுமால்; இது வஞ்சினம் ஆதலின், இப்பொழுதே
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனைத் தலை கொய்வன்' என்ற விசயனையும் பின்னர் தருமனையும் சமாதானப்படுத்தி மீண்டும் கன்னனுடன் பொருதச் செல்கிறான் விசயன். இம்முறை கன்னன் நாகக்கணையைத் தொடுக்கிறான் விசயனை வெல்லும் நோக்கத்துடன். கண்ணன் தேரை அழுத்தி அந்தக் கணை விசயன் கழுத்தைச் சீவாதவாறு பார்த்துக் கொள்கிறான். அக்கணையை விசயன் இருகூறாக்குகிறான். அந்தக் கணை மீண்டும் கன்னனை வந்து மறுமுறை தன்னை எய்யும்படி வேண்டுகிறது. மறுக்கிறான் கன்னன். அந்த நாகம் நொந்து உயிர் துறக்கிறது. துறக்கும் முன் அந்நாகக்கணை கூறிய வாசகம்,
'எரியிடை வெந்து, உடல் வாலும் முன் தறிதலின், இடர் அற உய்ந்திட, நீ பெரும் புகல் என
விரைவொடும் வந்து, "எனை வாளி கொண்டிடுக!" என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும்,
ஒரு தனி வெஞ் சிலை கால் வளைந்திலதுகொல்? ஒரு படியும் பிழைபோனது உன் தொடை' என
வரி கழல் அங்கர் பிரானை நொந்து, உரைசெய்து, மறலியிடம்தனில் ஆனது அன்று, உரகமே.
சல்-யனும் மறுமுறை கணையைத் தொடுக்கும்படி கூறியும் கன்னன் மறுக்கிறான். கோபம் மே-ட சல்-யன் தேரி-ருந்து இறங்கித் தன் தேருக்குச் செல்கிறான். பின்னர் கன்னன் விசயனுடன் போரிடுகிறான். கன்னனின் வ- இப்போது குறைந்துள்ளதால் கன்னனது உயிர்க்காற்று அவியுமாறு கணை தொடுக்கக் கட்டளையிடுகிறான் கண்ணன். அவ்வாறே விசயன் கணை தொடுக்க வீழ்கிறான் கன்னன். ஆனால் உயிர் துறக்கவில்லை. போரை நிறுத்துமாறு கண்ணன் விசயனுக்குக் கூறி, வேதியர் வடிவு கொண்டு கன்னனை அடைந்து தருமம் தரும்படி வேண்ட, "தரத்தகு பொருளை நீ சொல்லுக' என்று அந்த நிலையிலும் வேண்டுகிறான் கன்னன். அவனது புண்ணியத்தைக் கண்ணன் இரந்து நிற்க, கன்னன் மகிழ்ந்து கணையைப் பிடுங்கி தனது உதிரம் கொண்டு தான் செய்த புண்ணியம் முழுவதையும் தாரை வார்த்துக் கொடுக்கிறான்.
"ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை அகத்ததோ? புறத்ததோ? அறியேன்;
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்தன்ன வந்திலையால்;
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்; கொள்க நீ! உனக்குப்
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால், புண்ணியம் இதனினும் பெரிதோ?'
'கைப் புனலுடன் தருக' என்ன, அன்னவன் இதயத்து அம்பின்வாய் அம்பால் அளித்தலும், அங்கையால் ஏற்றான்-முன்னம் ஓர் அவுணன் செங் கை நீர் ஏற்று மூஉலகமும் உடன் கவர்ந்தோன்."
பின்னர் வேதியர் உருவில் இருந்த கண்ணன் வேண்டிய வரத்தைக் கேட்கும்படி கூற, அப்போதும் வெற்றியை வேண்டவில்லை கொடுத்துச் சிவந்த கரத்தை உடைய கன்னன். "எப்பிறப்பினும் இல்லை என்று கூறி வருபவருக்கு மறுத்து உரையா இதயம் அளி' என்று தான் கேட்டான். கன்னன் வேண்டிய வரம் மட்டுமல்ல முத்தியும் கொடுத்தான் கண்ணன். கன்னன் அகம் மகிழ்கிறான். உடன் கண்ணன் தன் மெய்யுருவைக் காட்டுகிறார். பெருந்தவம் புரிந்தவருக்கும் காணக் கிடைக்காத பேருருவைக் கண்டான் கன்னன். பரந்தாமனைக் கண்ட கண்கள் பனித்தன. களித்தன. பின்னர் கண்ணன் விசயனிடம் போய் தேரோட்டியாக அமர்ந்து அஞ்சரீகம் எனும் கணையைத் தொடுக்கும்படி விசயனுக்குக் கட்டளையிட்டான். கண்ணன் சொற்படி விசயன் கணை தொடுக்க கன்னன் வீழ்கிறான். குற்றுயிருடன் கிடக்கிறான் கன்னன். அசரீரி மூலம் கன்னன் மாண்ட செய்தி குந்திக்குத் தெரிய ஓடோடி வருகிறாள் போர்க்களத்திற்கு. அள்ளி எடுத்து அணைக்கிறாள். மகனே என்று கதறுகிறாள்.
"என்றே என் தாதையுழைக் கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால் ஈன்றேன், ஈன்ற அன்றே பொற் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால், உனை விடுத்தேன், அருள் இலாதேன்; வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு, உன் வீரம் கேட்டு, நன்றே என் தவப் பயன் என்று உன்னி வாழ்ந்தேன்; நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ? அந்தோ அந்தோ, கடவுளர்தம் மாயையினால் கழிவுற்றாயே!" குந்திதேவி கன்னனை நேயமோடு மடியில் வைத்து அமுதூட்டுகிறாள். அமுது குடித்த வாயோடு விண்ணகரம் நோக்கிச் செல்கிறான் கன்னன். தாயின குரல் போர்க்குரல் கேட்டு விசயனுக்கு என்ன ஆனதோ என்று ஐவரும் தத்தம் இடத்தி-ருந்து ஓடோடி வருகிறார்கள். ஆனால் தங்கள் தாய் கன்னனை மடியில் வைத்துக்கொண்டு மகனே-மகனே என்று கதறுவதைக் கண்டு ஒன்றும் புரியாமல் நிற்க மாயக்கண்ணன் நடந்த கதை முழுவதையும் சுருக்கமாக எடுத்துரைக்கிறான்.
உற்ற தோழன் கன்னன் மடிந்தான் என்று கேட்டவுடனேயே துரியோதனன் பதட்டத்துடன் ஓடோடி வருகிறான். "உனை ஒழிந்தும் - தம்பியரை ஒழிந்தும் - இனித் தனித்து நானே வாழ்வேனோ? என் வாழ்வே - மனவ-யே - வருகின்றேன் உன்னுடன் நான்'' என்று கதறுகிறான். துரியோதனன் கன்னனை நம்பித் தான் போரைத் தொடங்கினான் என்பது அவனது கூற்றி-ருந்து தெரிகிறது. வேறு யார் மாண்ட போதும் இப்படி துயரப்படவில்லை கொடிய நெஞ்சு கொண்ட துரியோதனன். இரு தரப்பினரும் நெஞ்சடைக்க - துயரம் மே-ட தங்கள் பாடிவீடு திரும்புகின்றனர்.
பதினெட்டாம் போர் துவங்க உள்ளது. சல்-யனைத் துரியோதனன் சேனாபதி ஆக்குகிறான். சல்-யன் அத்திர வியூகம் வகுக்க தருமன் அது கண்டு மனம் தளர்கிறான். கண்ணனின் ஆணைப்படி திட்டத்துய்மன் அணிவகுப்பை முறைப்படுத்துகிறான். சல்-யன் தருமனோடு வந்து பொருதுகிறான். சேனாதிபதி ஆனவுடன் சல்-யன் தனது வல்லமை முழுவதையும் காண்பிக்கிறான். எனவே தருமன் தளர்கிறான். வீமன் விற்போரில் அதிர்ந்து போகிறான். கதை கொண்டு போரிட வீமன் முயல சல்-யன் தோமரப்படை என்னும் இருப்புலக்கை கொண்டு போரிட்டு எற்றுகிறான் வீமனை. வீமன் சல்-யனுக்கு எதிரில் நிற்க முடியவில்லை. மறுபுறம் நகுலன் கன்னன் மகன்கள் மூவரை விண்ணுலகு ஏற்றுகிறான். சகுனியும் அவனது மகன்களும் நகுலனோடு பொருது தோற்கிறார்கள். தருமரை மீண்டும் வந்து எதிர்க்கிறான் சல்-யன். தடுக்க வந்த வீமன் புதையுமாறு சல்-யன் அம்பு எய்கிறான். நகுல சகாதேவரும் சாத்தகியும் வந்து வீமனைக் காக்க சல்-யனோடு போரிடுகிறார்கள். வீமனும் எழுந்து மீண்டும் போரிடுகிறான். விசயனும் அசுவத்தாமனும் கடும்போரிடுகிறார்கள். இறுதியில் கண்ணன் தேர் விடும் வரை விசயனை வெல்லமுடியாது எனக் கூறி அசுவத்தாமன் விலகிச் செல்கிறான். வீமனின் உக்கிரத் தாக்குதல் தொடங்க சல்-யன் இப்போது சமாளிக்க முடியாமல் திணறுகிறான். உதவ பெரும்படையுடன் வருகிறான் துரியோதனன். துரியோதனன் தோற்று புறமுதுகிட்டு ஓடுகிறான். பின்னர் தருமன் சல்-யனோடு கடும்போரிடுகிறான். தருமன் எய்த வேல் சல்-யன் உயிரைக் குடிக்கிறது. சல்-யனும் மாள்கிறான். இதற்குள் வீமன் துரியோதன் தம்பியர் எழுவரை விண்ணுலகு அனுப்பிவிட்டான். தகவல் கேட்ட துரியோதனன் தன் தம்பியர் ஐவரோடும் பெருஞ்சேனையுடனும் திரும்புகிறான். துரியோதனன் தம்பியர் ஐவரும் மாள்கின்றனர். சகாதேவன் துரியோதனனைப் போரில் வெல்கிறான். வீமன் துரியோதன் தம்பியர் ஒன்பதின்மரை க் கொல்கிறான். எஞ்சியிருந்த தம்பியர் அனைவரும் பதினெட்டாம் போரில் வீமனால் கொல்லப்படுகிறார்கள். வீமனால் தொண்ணூற்று ஒன்பது பேரும் படிப்படியாகக் கொல்லப்பட்டது கண்டு கவலையடைந்தான் துரியோதனன். நிலைகுலைகிறான் துரியோதனன். சகுனி தேற்றுகிறான். பின்னர் சகுனியும் சகாதேவனும் போரிடுகிறார்கள். சகுனியைக் கொல்கிறான் சகாதேவன். சோழ மன்னன் அசுவத்தாமனுடன் போரிட்டு வேலை எறிகிறான். அசுவத்தாமன் நிலைகுலைந்து விழுகிறான். அவன் மாமன் கிருபாச்சாரியன் வந்து உதவுகிறான். ஆனால் அவனும் புறமுதுகிடுகிறான். சகுனி இறந்ததும் திகைக்கிறான் துரியோதனன். தனது வழிகாட்டி மறைந்தவுடன் துரியோதனன் தனியாக ஒரு குளத்திற்குச் சென்று - குளத்தில் மூழ்கி -மாண்டாரை மீண்டும உயிர்ப்பிக்கும் வேள்வியை மூச்சடக்கி நடத்துகிறான். அசுவத்தாமன் துரியோதனனைக் காணாமல் சஞ்சயனிடம் வந்து கேட்க துரியோதனன் குளத்தில் அமர்ந்து யாகம் புரிவதைச் சொல்கிறான் சஞ்சயன். அந்த இடம் நோக்கி ஓடுகிறான் அசுவத்தாமன். "பாண்டவர் தமை இன்றே ஒழிப்பேன். அரசினை உனக்குத் தருவேன். மாண்டவர் மீண்ட பின் நீ நன்றாக அரசாள வேண்டும்'' என்று சொல்கிறான். சொல்-ய பின் துரியோதனன் சம்மதம் பெற்றதாகக் கருதிச் செல்கிறான் ஒரு திட்டத்துடன் இந்த கொடிய எண்ணம் கொண்ட அசுவத்தாமன். இதற்குள் கண்ணன் தன் மனக்கண்ணில் நடப்பதைத் தெரிந்து கொள்கிறான். சில வேடுவர்களும் வந்து துரியோதனன் இருக்கும் இடத்தைச் சொல்கிறார்கள். அந்த இடம் நோக்கி வீமன் விரைந்து கடுமொழி புகன்று துரியோதனனின் தவத்தைக் கலைத்து சண்டையிடுமாறு தூண்டுகிறான். ஆயுதத்தையும் இடத்தையும் கூறும்படி துரியோதனன் கூற கண்ணன் கதை கொண்டு போரிடலாம் எனக் கூற கண்ணன் போர்க்களத்தை நிர்ணயிக்கிறான். இதற்குள் பலராமனும் விதுரனும் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். மனம் நொந்த நிலையில் துரியோதனன் நடந்தே புலம்பிக் கொண்டே போகிறான். தருமன் இது கண்டு மனம் பொறுக்காமல் அரசாட்சியை மீண்டும் ஏற்குமாறு துரியோதனனை வேண்டுகிறான். துரியோதனன் இசையவில்லை.
'எம் கிளைஞர், எம் துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக,
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ-
அங்கம் எலாம் வேறுபட, ஆறுபடு குரிதியின்வாய்,
கங்கமும் காகமும் கொத்த, களத்து அவிந்தான் எனும் பெயரே'
எல்லோரும் யமுனை நதியைக் கடந்து சமந்தபஞ்சகம் என்னும் இடத்தை அடைகிறார்கள். கடுமையான போர் நடக்கிறது. வீமன் தளர்கிறான். இது கண்டு விசயன் கண்ணனிடம் துரியோதனனை வெல்லும் உபாயத்தைக் கூறுமாறு வேண்டுகிறான். துரியோதனன் ஆருயிரைப் போக்க வேண்டும் என்றால் அவன் ஊருவை மோதி புண்பட அடித்து மோதினால் இறந்துவிடுவான் எனத் தெரிவிக்கிறான். அவ்வாறே செய்து வீமன் அவன் தொடையில் அடிக்கிறான். அது கண்ட அவனது ஆசிரியன் பலராமன் வெகுண்டு தனது ஆயுதமான கலப்பையைத் தூக்குகிறான். கண்ணன் பலராமனை அமைதி படுத்தி இருவரின் சாபம் அவ்வாறு உள்ளது. எனவே சாபம் ப-க்கும். நியாயத்திற்கு இடமில்லை என்று கூறுகிறான் கண்ணன். "சிலையின் குரு ஆனவர்தாம் இடு சாபமும் உண்டு; திரௌபதியார் பகர் சாபமும் உண்டு; அதனால், எதிரே படுமே, இவன் வெங் கதையால் அவனே.'' என்று மைத்திரேய முனிவர் கொடுத்த சாபமும் துரௌபதியின் சாபமும் இவன் மரணத்திற்குக் காரணம் என்பதை எடுத்துச் சொல்கிறான் கண்ணன். மைத்திரேய முனிவர் பாண்டவருடன் சமாதானமாகப் போகச் சொன்ன போது துரியோதனன் அந்த முனிவரைக் கே- செய்ததால் அவர் சாபம் கொடுத்துள்ளார். பாஞ்சா- சபதம் இட்டது அனைவருக்கும் தெரிந்த விடயம். மைத்திரேயரும் பெரிய வில்வீரல் எனவே தான் சிலையின் குரு எனக் குறிக்கிறார் வில்-யார். பாசறைக்குத் திரும்புகிறார்கள் பாண்டவர்கள். தடுக்கிறார் கண்ணன். ஒரு வேலை உள்ளது எனக் கூறி ஐவரையும் போர்க்களத்திற்கு வெளியே அழைத்துச் செல்கிறார். அசுவத்தாமன் துரியோதன் இருக்கும் இடம் அறிந்து கொண்டு அங்கு சென்று விடிவதற்குள் பாண்டவரை அழித்து வருவேன் எனச் சபதமிட்டுச் செல்கிறேன். துரியோதனனும் தன் மணிமுடியை ஒப்புதலுக்கு அடையாளமாகத் தருகிறான். அசுவத்தாமன் இப்படிச் செய்வான் எனத் தெரிந்தே மாயக் கண்ணன் பாண்டவர்களை பாடிவீட்டுக்கு அழைத்துப் போகாமல் வெளியே அழைத்துச் சென்றிருக்கிறான். அசுவத்தாமன், கிருபன், கிருதவர்மன் மூவரும் ஒன்றாக இணைந்து பாண்டவரின் பாடிவீட்டிற்குச் செல்கிறார்கள். பாசறையில் புக முயலும் பொழுது ஒரு பூதம் இவர்களைத் தடுக்கிறது. இதனால் இந்த மூவரும் அருகிலுள்ள ஆலமரத்தின் அடியில் சென்று ஆலோசனை நடத்துகிறார்கள். தன் முடிவில் மாற்றம் இல்லாத அசுவத்தாமன் அங்கேயே சிவபெருமானைத் தொழுது ஒரு கணையைப் பெறுகிறான். அந்தக் கணை எக்காரணத்தைக் கொண்டும் மாறாது குறி வைத்த இடத்தை அடைந்தே தீரும். இந்த ஆயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டு பாசறைக்குச் செல்கிறார்கள். இதைக் கண்ட பூதம் பயந்து ஓடுகிறது. உடன் வந்த இருவரையும் வாயி-ல் நிறுத்தி விட்டு உள்ளே புகுந்த அசுவத்தாமன் திட்டத்துய்மனது தலையைத் துண்டிக்கிறான். பாஞ்சாலர் அவனை எதிர்க்கிறார்கள். அவர்களையும் கொல்கிறான் அசுவத்தாமன். ஐவரையும் தேடுகிறான். உள்ளே ஐவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாண்டவரின் புதல்வர்கள். அவர்களை ஒரு கனவு வந்து உசுப்புகிறது. எழுந்து பார்த்தால் அசுவத்தாமன் கொல்வதற்குத் தயாராக நிற்கிறான். அவர்கள் தங்கள் படைக்கலன்களை எடுத்து எதிர்கும் முன்னரே அவர்கள் தான் பாண்டவர்கள் எனத் தவறாக நினைத்த அசுவத்தாமன் ஐவரையும் கொல்கிறான். இந்த நேரத்தில் சோழ மன்னன் இதைப் பார்த்து விடுகிறான். சோழன் அசுவத்தாமனை எதிர்க்கிறான். முனிமகனுடன் மோதுகிறான் சோழன். சிவன் கொடுத்த கணையைத் தொடுத்து சோழ மன்னனைச் சாய்க்கிறான் அசுவத்தாமன். நேருக்கு நேர் மோதி பல தடவை சோழ மன்னனிடம் தோற்ற அசுவத்தாமன் தற்போது சிவன் வழங்கிய கணை கொண்டு சோழனைச் சாய்க்கிறான். உடன் இளம்பாண்டவர் தலைகளைக் கையில் எடுத்துக் கொண்டு விடிவதன் முன்னம் இரவோடு இரவாக துரியோதனன் இருக்கும் இடத்தை அடைகிறான் அசுவத்தாமன். தன் வீரத்தைத் தம்பட்டம் அடித்துக்கொண்டு துரியோதனன் எதிரில் கொய்து வந்த அந்த தலைகளைக் கொண்டு போய் வைக்கிறான். துரியோதன் அந்த முகங்களைப் பார்க்கிறான். சிறுவர் தலைகள். சீறுகிறான் அசுவத்தாமனை. "குருகுலத்தின் கொழுந்துகளைக் கொன்றுவிட்டாயே அசுவத்தாமா - நீங்காத இப்பழியைப் போக்க உடன் நீ கானகம் சென்று இறைவனைத் தொழுது நீ செய்த பாபத்தைப் போக்கிக்கொள்'' என்று கட்டளையிடுகிறான். குருகுலத்தின் கொழுந்தினைக் கிள்ளினை- வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே!'தீவினை நீங்கத் தவம் செய்' என்கிறார் வில்-யார். அவனோடு மற்ற இரு முனி மைந்தர்களும் செல்கிறார்கள். சஞ்சயனை அழைத்து தன் தந்தையிடம் நடந்ததைக் கூறும்படி கட்டளையிட்டு துரியோதனன் உயிர் விடுகிறான். வியாத முனிவரை அடைந்து அசுவத்தாமனும் மற்ற இருவரும் நடந்ததைக் கூறுகிறார்கள். அவரும் கிருபனையும் அசுவத்தாமனையும் தவம் இயற்றக் கூறி கிருதவன்மாவுக்கு விடைகொடுத்து அனுப்புகிறார். திருதராட்டிரனுக்கும் காந்தாரிக்கும் சஞ்சயன் சென்று துரியோதனன் உட்பட அனைவரும் மாண்ட நிகழ்ச்சியைக் கூறுகிறார். அவர்கள் கண்ணீர் சிந்தி அழுகிறார்கள். இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு கண்ணன் ஐவரையும் பாடிவீட்டுக்கு அழைத்து வருகிறான். அகோரக் காட்சிகளைக் கண்ட ஐவரும் சீறுகிறார்கள். கண்ணன் வீமனையும் விசயனையும் சமாதானப் படுத்துகிறார். சிவன் கொடுத்த ஆயுதம் என்பதால் யாரும் தடுக்கமுடியவில்லை என்பதை விளக்கி இதை எதிர்பார்த்தே தான் ஏற்கனவே வாக்களித்தபடி ஐவரையும் காக்க வெளியே அழைத்துச் சென்ற தகவலைத் தெரிவிக்கிறார் கண்ணன். விதியை வெல்ல முடியாது என்று தத்துவமும் பேசினான் சூழ்ச்சிவல்லான் மாயக் கண்ணன். பின்னர் எல்லோரும் திரௌபதியை அடைந்து இளம்பாண்டவர் ஐவர் இறந்ததைத் தெரிவிக்கிறார்கள். ஐவரையும் தூண்டிவிட்ட திரௌபதியை நோக்கி, "விசயனும் வீமனும் சென்று ஓடிச்சென்ற அசுவத்தாமனை எதிர்த்தால் அவனிடம் உள்ள சிவன் கொடுத்த அத்திரத்தைத் தொடுத்தால் அனைவரும் அழிய வேண்டி வரும். எனவே அசுவத்தாமனைத் தொடர்ந்து போய் போரிட வேண்டாம் என அறிவுறுத்துகிறார் கண்ணன். பின்னர் தருமர் இறந்த அனைவருக்கும் கண்ணன் உரைப்படி உரிய கடன்களைச் செய்து முடிக்கிறான்.'கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து அந்தம் உறு கடன் கழித்தி' என்ற உரைப்படி இறுதிக்கடன்களை முடித்து அத்தினாபுரி அடைந்து திருதராட்டிரனையும் காந்தாரியையும் வணங்குகிறார்கள். கண்ணன் அங்கிருந்து தன் பணி முடிந்த மனநிறைவுடன் துவாரகைக்கு மீள்கிறார்.
பின்னர் தருமன் அரசாள அத்தினாபுரி மக்கள் மகிழ்கிறார்கள்.
பாரதக் கதை முடிந்தது.