Monday, November 15, 2010

கண்ணன் தூது - துரியோதனன் சதி

தாத்தா:  மன்னருக்கு அழகு தூது அனுப்பிக் கருத்தை அறிதல்.  எனவே யாதவகுலதிலகம் கண்ணன் துரியோதனனுக்குத் தூது அனுப்புவது நல்லது என்று தனது கருத்தைக் கூறினார்.  உடன் இருந்த கண்ணனின் அண்ணன் பலராமனோ பதிமூன்று ஆண்டுகளாக துரியோதனன் ஆளும் ஒரு நாட்டை திரும்பக் கேட்பது அழகல்ல - நாட்டை மீட்டல் கொடிது என்று தனது கருத்தைச் சொன்னான்.  உடன் இருந்த மற்றொரு பங்காளியான சாத்தகி என்பவன் உடனே பலராமனை பழித்தும் இழித்தும் கூறினான்.
சூர்யா: யார் இந்த சாத்தகி தாத்தா?
தாத்தா: வசுதேவனின் பங்காயியான சத்தியகனது மகன் இவன்.  வயதில் கண்ணனுக்கு இளையவன்.  ஒன்றாகவே வளருகிறார்கள்.  இவன் விசயனிடம் வில்வித்தை கற்றவன்.  எனவே பாண்டவர்கள் சார்பாகவே பேசுவான்.  கண்ணன் பால் மட்டற்ற மரியாதை கொண்டவன் இவன்.  சரி கதைக்கு வருவோம்.  உலூகன் என்னும் அந்தணனைத் தூது அனுப்புவது என இறுதியில் முடிவு எடுக்கப்பட்டது.  கண்ணனும் தன் குடும்பத்துடன் துவாரகைக்குத் திரும்பினான்.  உலூகன் திருதராட்டிரன் அவைக்குச் செல்கிறான்.  துரியோதனன் தக்க வரவேற்பு அளிக்கிறான்.  பின்னர் உலூகன் தான் தூது வந்த வரலாற்றைக் கூறுகிறான்.  உடனே துரியோதனன் போரில் ஆண்மை கண்டறியலாம் எனத் தன் முடிவைச் சொல்கிறான்.  ஆனால் துரோணர், விதுரன் முத-யோர் அவனுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.  வீடுமனும் திருதராட்டிரனிடம் நாளை போர் என்று வந்தால் விசயனுக்கு எதிராக யார் வில் வளைக்க முடியும் என்று விசயனின் பலத்தை எடுத்துக் கூறுகிறார்.  உடனே கன்னன் வெகுண்டு பேசுகிறான்.  போரிட்டு வெல்லலாம் என்று வீரம் பேசுகிறான்.  உடனே வீடுமன் வெகுண்டு "ஏற்கனவே திரௌபதித் திருமணத்திற்காக நடந்த திறனாய்வில் கன்னன் தோற்றதையும் - கந்தருவர் ஏற்கனவே துரியோதனனை கடத்திச் சென்ற போது மீட்டுக் கொடுக்கவில்லை - விசயன் கானகத்தில் இருந்தாலும் மீட்டான் - விராடன் நாட்டில் நடந்த போரில் தலைதெறிக்க ஓடிவந்தோம்.  இனி எந்த போரில் நீ வெல்வாய்?'' என்று கேட்கிறார்.  " தூம வெங் கனல் தோன்றிய தோகை அம் தொடையல்  சூட்டிய நாளில்,  நாம வெஞ் சிலை நாண் எடுத்தனை, அடர் நரனொடும் போர் செய்தாய்!  தாம வெண் குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல்  வீமன் வெஞ் சிறை மீட்ட நாளினும், திறல் வினை புரி   முனை வென்றாய்!   ஒரு நல் மா நெடுந் தேரினை அறிவுறா உத்தரன்   விரைந்து ஊர,  நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை,                                 நெடும் போது!  மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட, மலையும்                                 நாள், வய வாளி  வெருநர்மேல் விடா விசயனை நீ அலால், வெல்ல                                 வல்லவர் உண்டோ? ''. உடனே கன்னனுக்காகத் துரியோதனன் பரிந்து பேசி உலூகனிடம் போர் தான் இறுதி முடிவு எனத் தெரிவிக்கிறான்.  உலூகன் ஐவரிடம் இத்தகவலைத் தெரிவித்து பின்னர் கண்ணனிடமும் தெரிவிக்கிறான்.  உடனே கண்ணன் விசயனைத் தன்னிடம் வரும்படி செய்தி சொல்- அனுப்புகிறார்.  அத்தினாபுரியில் துரியோதனன் மந்திரிகளுடன் கலந்தாலோசித்து எல்லா மன்னர்களுக்கும் செய்தி அனுப்பி தனக்குத் துணை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான்.  கண்ணனைத் துணை சேர்க்கக் கருதி துரியோதனன் துவாரகைக்குச் செல்கிறான்.  துரியோதனன் துவாரகைக்கு வருவதை அறிந்தவுடனேயே கண்ணன்,"துரியோதனன் வந்தால் என்னைக் கேட்க வேண்டாம்.  உள்ளே அனுப்புங்கள்'' என்று கூறிவிட்டு மாயத்துயில் கொள்ளப் போய்விட்டான்.  துரியோதனன் வருகிறான்.  கண்ணன் துயின்று கொண்டிருப்பதைக் கண்டான்.  உடனே கண்ணன் தலைமாட்டில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.  பின்னாலேயே விசயனும் வந்து விடுகிறான்.  அவன் கண்ணன் காலடியில் சென்று நிற்கிறான். துயில் கலைந்ததும் முத-ல் கண்ணன் விசயனைப் பார்க்கிறான்.  நலம் விசாரித்து வந்த காரியத்தைக் கேட்கிறான்.  ஆனால் விசயனோ எனக்கு முன்னமே துரியோதனன் வந்து உன் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறான் எனத் தகவல் தருகிறான்.  எனவே துரியோதனனிடம் வந்த காரியத்தைக் கேட்கிறான் கண்ணன்.  இருவரும் போர்த்துணை கேட்க வந்தது அறிந்து நான் ஏற்கனவே தருமரிடம் துணை புரிவதாக வாக்களித்துள்ளேன்.  எனவே வாக்கு தவற முடியாது என்று கூறி தன் படைபலம் முழுவதையும் துரியோதனன் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். "உதிட்டிரன்தனக்கு முன்னே சொற்றனம், ஆங்கண்; இங்கும், துயில் உணர் பொழுதத்து, இன்று, வில்-திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான்' என்று, பற்று அறத் துணிந்து சொன்னான்-பாண்டவர் சகாயன் ஆனான்.''   இப்போது துரியோதனன் கண்ணன் ஆயுதத்தைப் பிரயோகிக்கக் கூடாது என வேண்டுதல் ஒன்று விடுக்கிறான்.  உடனே கண்ணன் விசயனைப் பார்த்து அப்படியென்றால் நான் என்ன பணி செய்ய முடியும்? என்று கேட்கிறார்.  உடனே விசயன், "கண்ணா - நீ எனக்குத் தேர் ஓட்டினால் இந்த உலகத்தில் எவர் என்னை எதிர்த்தாலும் நான் வெற்றி பெறுவேன்'' என்று கூறுகிறான்.  கண்ணனும் ஒத்துக்கொண்டு ஆயுதம் ஏந்துவதில்லை என உத்தரவாதம் வழங்குகிறான்.  துரியோதனன் பலராமனிடம் தகவலைக் கூறி அத்தினாபுரி திரும்புகிறான்.  பின்னர் கண்ணனும் விசயனும் உபப்பிலாவியத்தை அடைகிறார்கள்.  திருதராட்டிரன் துரியோதனனிடம் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு ஐவருக்கும் நாடு தராமலும்  போரைத் தவிர்க்கவும் எண்ணம் கொண்டு சஞ்சயன் என்பவரைத் தூது அனுப்பி அறத்தை எடுத்துச் சொல்லும்படி பணிக்கிறார்.  சஞ்சயனும் ஐவர் இருந்த இடத்திற்குப் போனார்.  பாண்டவர்கள் அவரை வரவேற்று தக்க ஆசனம் கொடுத்து வந்த காரியம் குறித்து வினவுகிறார்கள்.  அவரோ, " நீங்கள் இந்த புடவி (நிலவுலகத்தை) ஆள்வதை விட்டு விட்டு அடவி(காடு) ஆளவும் வல்லவர்கள் ஆகிவிட்டீர்கள்.  இது நன்மையான காரியமே.  நிலையற்ற செல்வத்தைப் பெறுவதை விட வனத்தில் தவம் புரிந்து நிலையான  செல்வத்தைப் பெறத் தகுதி படைத்து வீட்டீர்கள்.  எழுவகைப் பிறப்பில் மீண்டும் வந்து உழலாமல் இருக்கும் வழிவகையைப் புரிந்து கொண்டீர்கள்.  தத்துவஞானிகள் ஆகிவிட்டீர்கள்.  இந்த மானிடப் பிறப்பு மூலம் இம்மை - மறுமை - வீடுபேறு மூன்றில் எதையும் அடையலாம்.  மற்ற பிறப்புகளில் அவ்வாறு நினைத்ததை அடைய முடியாது.  அப்படிப்பட்ட பிறவிப்பயன் என்ன என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள்.  நீங்கள் நிலையில்லாத அரசாட்சியை விரும்பி ஆளக் கருதினாலும் துரியோதனன் விட்டுத் தரமாட்டான்.  செருக்கு கொண்ட அவன் உங்களுடன் கூடி வாழ உடன்படமாட்டான்.  பராசரன் என்னும் பரமமுனிவன் குலத்திலே வந்திருந்தாலும் நல்ல எண்ணங்கள் துரியோதனனிடம் இல்லை. எனவே நீங்கள் போரைத் தவித்து நிலையான வீடுபேற்றை அடையவேண்டும்.  நீங்களும் வியாசமுனிவர் பரம்பரையில் வந்தவர்கள் தாம்.  எனவே வியாசமுனிவரின் மகன் சுகன் போல உலகப்பற்றை ஒழித்து உயர்பதம் பெறவேண்டும்.  அதுவே நல்லது.  மண் - பெண் - பொன் மீதுள்ள பற்றை ஒழித்துவிடுங்கள்.
பாரிலாசையுநின்னிராசபதத்திலாசையுமன்னுவெம் போரிலாசையுநேயமங்கையர்போகமன்பொடுபுதிதுணுஞ் சீரிலாசையும்விட்டுநன்னெறிசேரவுன்னுதிநீயெனத் தூரிலாசையறத்துறந்தருள்சுருதிமாமுனிசொல்லவே.
என்றெல்லாம் கூறி அவர்கள் நாடாளுவதற்குப் பதிலாக காடாண்டு வீடுபேற்றினை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சூர்யா:  தாத்தா நானும் ஒரு திரைப்படத்திலே கேட்டுள்ளேன். "அரியது கேட்கின் வரிவடிவேலோய - அரிது அரிது மானிடர் ஆதல் அரிது - மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது - பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது - ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்  தான் செயல் அரிது - தானமும் தவமும் தான் செய்வாராயின் - வானவர் நாடு வழி திறந்திடுமே என்று அந்தத் திரைப்படத்தில் ஔவையார் பாடுவார் தாத்தா.  அதைத் தான் இந்த சஞ்சயர் சொல்கிறாரா?
தாத்தா:  ஆமாம்டா. பற்றை விடச் சொல்- பல பெரியோர்கள் கூறி உள்ளார்கள்.  அற்றது பற்று எனில் உற்றது வீடு என்பார் ஒருவர். "பற்றற்றகண்ணே பிறப்பறுக்கும்'' "அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை'' என்றும் கூறுவார்கள்.  யார் கேட்கிறார்கள். தருமரும் கேட்டார்.  அவர் அறக்கடவுளின் மகன்.  அவருக்கு அறம் பற்றித் தெரியாதா?  குறுநகை புரிகிறார் சஞ்சயரின் பேச்சுகளைக் கேட்டு.  "நான் ஒரு அரச குலத்தில் வந்தவன்.  அரசகுலத்திற்கென ஒரு நீதி உள்ளது.  அதைத் தான் நான் பின்பற்ற வேண்டும்.  போர்புரிய நான் அஞ்சக்கூடாது.  போரில் இருந்தாலும் புகழ்.  இறந்தாலும் புகழ்.  போரில் நான் எதிரிகளை வென்றாலும் அவர்கள் வீரசுவர்கம் புகுவார்கள்.  நான் வெல்லப்பட்டாலும் நானும் வீரசுவர்கம் புகுவேன்.  போரின் மூலம் சுவர்கம் என்பது உறுதி.  எனவே ஏழ்நரகு கிடைக்கும் என்று அச்சுறுத்தினாலும் போரில் வெற்றி பெற்று நல்லாட்சி நடத்துவதைத் தான் நான் விரும்புகிறேன்.
சூர்யா: ஏழ்நரகு என்றால் என்னங்க தாத்தா?
தாத்தா: சிலர் அள்ளல், ரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி என்று சொல்லுவார்கள்.  ஒன்றும் விளங்காது.  சிலர் தமப்பிரபை, இமப்பிரபை, தூமப்பிரபை, வாலுகப்பிரபை, சாகரப்பிரபை, இரத்தப்பிரபை, அழற்பிரபை என்று கூறுவார்கள்.  ஆனால் நல்ல தமிழில் இருள், குளிர், புகை, மணல், துயிலாமை, குருதி, தீ என்று கூறுவார்கள்.  இப்படி ஏழு வகை இடங்களில் தவறு செய்தவர்கள் இறப்பின் பின்னால் வருந்தவேண்டி வரும் என்று சொல்கிறார்கள்.  கதைக்கு வருவோம். வீமனும் போரே தனகு உரிய தவம் என்று உரைக்கிறான்.  கண்ணன் இடைமறித்து இவர்கள் இந்த நிலவுலகத்தை ஆளுதலும் அவர்கள் அமரர் உலகம் ஏறுதலும் நடக்கப் போகிற செயல் என்று முன்கூட்டியே தெரிவிக்கிறார்.  சஞ்சயன் திரும்ப வந்து திருதராட்டிரனிடம் நடந்ததை உரைக்கிறான்.  இதன்பின் தருமர் கண்ணனைத் துரியோதனிடம் தூது அனுப்ப வேண்டும் எனத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார்.  உடனே கண்ணன் பிறர் கருத்தையும் கேட்கிறார்.  வீமன் உடனே "பாஞ்சா- துரியோதனன் சபையில் அவமானப்படுத்தப்பட்ட போது அமைதியாக இருக்கச் சொன்னீர்கள்.  உங்கள் பேச்சைக் கேட்டு அமைதி காத்து - நம் மரபுக்கே தீராத களங்கத்தை உண்டாக்கி விட்டோம்.  பின்னர் காட்டுக்குப் போனோம் - மறைந்திருந்து ஓர் ஆண்டும் கழித்தோம்.  இன்னும் பகையை ஒடுக்க நீங்கள் எண்ண மாட்டேன் என்கிறீர்களே? அண்ணனே துரியோதனன் கொடுமையில் உன் செயல் பெருங்கொடுமை.  உன் அருளைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம்'' என்றான்.
விரி குழல் பைந்தொடி நாணி வேத்தவையில் முறையிடுநாள், 'வெகுளேல்!' என்று,
மரபினுக்கும் நமக்கும், உலகு உள்ள அளவும், தீராத வசையே கண்டாய்!
எரி தழல் கானகம் அகன்றும், இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய்!
அரவு உயர்த்தோன் கொடுமையினும், முரசு உயர்த்தோய்! உனது அருளுக்கு அஞ்சினேனே!
விசயனும் சமாதானம் தேவையில்லை என்று கூறி ,"கற்புடைய செழுந்திருவை அரசவையில் துகில் உரிந்தபோது செயல் ஒன்றும் இன்றி நாம் அமர்ந்திருந்தோம்.  அவள் இறுதியில் "நீண்டானே - கரியானே - நிமலா - அச்சுதா - கோவிந்தா - கண்ணா' என்று முறையிட்டாள்.  அந்த அவையில் நாம் மாண்டார் போல நின்றோம்.  அந்த மாசு தீரவேண்டும் என்றால் போர் தான் வழி'' என்று முடித்தான்.  நகுலனும்  உவர்நிலத்தில் நல்விதையை நட்டால் முளைக்காது அதுபோல துரியோதனனிடம் நீதி கிடைக்காது எனவே போர் தான் சிறந்தது எனத் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.  இப்போது தான் நாம் ஒரு அதிசயத்தை - மகாபாரதக் கதையின் மையக் கருத்தைப் பார்க்கப் போகிறோம்.  இறுதியில் சகாதேவனிடம் கருத்தைக் கேட்டார் கண்ணன்.  சகாதேவன் சிரித்துக் கொண்டே, " அரசு வழங்குவானா துரியோதனன்?- யாருக்கும் தெரியாது.  பாஞ்சா- குழல் முடிப்பாளா? - யாருக்கும் தெரியாது.  ஆனால் கண்ணா உனக்கு எல்லாம் தெரியும்.  ஆதிமூர்த்தியே-துளபமுடியானே - சிறுவயதில் பல திருவிளையாடல்கள் புரிந்த உனக்கு எல்லாம் தெரியும்.  உன் கருத்து என்னவோ அது தான் என் கருத்து'' என்று சொன்னான்.  அதை வில்-யால் சொல்-லே பார்ப்போம் இப்போது. "முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று அலகை முலைப்பால் உண்டு,  மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,   பொதுவர் மனை வளர்ந்த மாலே!  ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்   அறிவேன், உண்மையாக;  திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!''  என்றான், தெய்வம் அன்னான்.''  அதிர்ந்தான் கண்ணன்.  தனியாக அழைத்துப் போனான் சகாதேவனை.  போரைத் தடுக்கும் வழியைச் சொல் சகாதேவா என்றார்.  அவனோ மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான். "நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,  பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!  கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,  மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?'' என்றான். " உன்னைக் கட்டிப்போட்டு விட்டால் இந்தப் போரை நிறுத்தலாம்'' எனத் தன் கருத்தைச் சகாதேவன் சொல்ல கண்ணன் "என்னைக் கட்டிப்போட உன்னால் இயலுமா?'' என்று கண்ணன்  கேட்கிறார்."உன் வடிவு காட்டின் இயலும்!' என்றான் சகாதேவன்.  கண்ணன் பல வடிவு கொண்டான்.  ஆனால் சகாதேவன் கருத்துடன் கண்ணனின் மூலவடிவை முடிவு செய்து பிணித்துவிடுகிறான்.  உடனே கண்ணன், " என் பாதப் பிணிப்பை விடுக'' என்று முறையிடுகிறான்.  அப்போது சகாதேவன், "நடக்கப் போகும் போரில் நாங்கள் ஐவரும் இறக்கக் கூடாது.   எங்களை நீ தான் காக்க வேண்டும் கண்ணா.  உன்னால் தான் எங்கள் ஐவரையும் காக்க முடியும்.  பூமியின் பாரத்தை நீக்க நீ அவதாரம் எடுத்து வந்துள்ளாய்.  ஆனால் எங்களையும் பூமிபாரத்தில் இணைத்து விடாதே.  நாங்கள் ஐவரும் உயிருடன் இருக்க நீ உத்தரவாதம் வழங்கவேண்டும்'' என்றான்.  சரி என்று உடன்பட்டார் கண்ணன்.  கால்கட்டை அகற்றினான் சகாதேவன்.  தனியிடத்தி-ருந்து வந்த கண்ணன் "சந்து செய்தல் இனிது' என்று முடிவைச் சொல்கிறார்.  சந்து என்றால் சமாதானம். உடனே பாஞ்சா- ஓடோடி வந்து கண்ணனிடம் முறையிட்டு போர் நடந்தே தீரவேண்டும்.  பழிவாங்கப்பட வேண்டும் என்று முறையிடுகிறாள்.
"கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன்
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்;
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி,
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?''
உடனே கண்ணன் "நானே உன் குழல் முடித்து வைப்பேன்'' என்று உறுதி கூறி பாஞ்சா-யைச் சமாதானப்படுத்துகிறான்.  இதி-ருந்து என்ன தெரிகிறது.  போர் நடக்கும் என்பது கண்ணனின் வாக்கி-ருந்து தெரிகிறது.  வெற்றி பெறப் போவது ஐவர் என்பதும் நமக்குப் புரிகிறது.  எல்லாம் இந்தக் கண்ணனின் திருவிளையாடல் தான். வில்-யார் கூறும் போது - அதைச் செந்தமிழில் படிக்கும் போது புல்லரிக்கும். "தொல் ஆண்மைப் பாண்டவர்க்குத் தூது போய் மீண்டதற்பின், நல்லாய்! உன் பைங் கூந்தல் நானே முடிக்கின்றேன்; எல்லாரும் காண'' என்றான் கண்ணன்.  கண்ணன் தூதனாக அத்தினாபுரி நோக்கிப் பயணமாகிறான்.  நாளை  தொடருவோமா?

==================================================================================================================================


தாத்தா: கண்ணன் தூதுவனாக ஏகி அத்தினாபுரி அடைந்தான். நகரின் தென்பாலுள்ள ஒரு சோலையில் கண்ணன் சிறிது நேரம் அமர்கிறார்.  காவலர்கள் துரியோதனிடம் போய் கண்ணன் நகர் எல்லையில் உள்ள செய்தியைக் கூறுகிறார்கள். துரியோதனன் உடனே எதிர்கொள்ளப் புறப்படுகிறான்.  சகுனி உடனே தடுத்து நிறுத்துகிறான்.  வீடுமர் முத-யோர் சென்று எதிர்கொள்கிறார்கள்.  கண்ணன் விதுரன் இல்லத்திற்குச் சென்று தங்குகிறார்.  விதுரன் கண்ணனைக் கண்டதும் மிக்க மகிழ்கிறான்.
உள்ளினான்; உணர்ந்து, உள்ளமும் உருகினான்; எழுந்து
துள்ளினான்; விழுந்து, இணை அடி சூடினான்; துயரைத்
தள்ளினான்; மலர்த் தடக் கையால் தத்துவ அமுதை
அள்ளினான் எனக் கண்களால் அருந்தினான்-அளியோன்.

கண்ணனும் ஏனையோரும் விதுரன் மனையில் விருந்துண்டு மகிழ்ச்சியோடு அமர்கிறார்கள்.  விதுரன் கண்ணன் வந்த காரணத்தை வினவுகிறான்.  தான் ஐவருக்காகத் தூதுவனாக வந்துள்ளதாகத் தெரிவிக்கிறான் கண்ணன்.  துரியோதனன் அரசு கொடான் என்கிறார் விதுரர்.   கொடாவிடின் பாண்டவர் பொருது பெறுவர் என்று நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கிறான் கண்ணன்.  மறுநாள் கண்ணன் அரசவை நோக்கிப் போகிறார். அவை புகுந்து ஆசனத்தில் அமர்கிறார்.  "நேற்நே இந்நகர் வந்தும் எங்கள் அரண்மணைக்கு ஏன் வரவில்லை? விதுரன் வீட்டில் ஏன் தங்கினீர்கள்?'' என்று கேட்டான் துரியோதனன்.  கண்ணன், "பஞ்சவருக்காக நான் தூதுவனாக வந்துள்ளேன்.  ஒருவர் மனையில் தங்கி - இன் அடிசில் உண்டு - பின்னர் அவரை வெறுக்க எண்ண முடியுமா? அது நீதியா?'' என்று கூறி அதனால் தான் அரண்மனைக்கு வரவில்லை என்று கூறுகிறார கண்ணன்.  பொருதல் உறுதி என்பது அவரது பதி-ல் வெளியாகிறது.
"என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை; இது என் இல்;
                நின் இல் அது; என்னினும்;
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன்
                வந்து எதிர் விளம்பினான்;
உன்னில், இன்னம் உளது ஒன்று; பஞ்சவர் உரைக்க
                வந்த ஒரு தூதன் யான்;
நின் இல் இன் அடிசில் உண்டு, நின்னுடன் வெறுக்க
                எண்ணுவது நீதியோ?
ஒருவர் வாழ் மனையில் உண்டு, பின்னும், அவருடன்
                அழன்று பொர உன்னினும்,
இரவி உள்ளளவும், மதியம் உள்ளளவும், இவர்களே
                நரகில் எய்துவார்.''
தூதனாக வந்த காரியத்தை விளம்பும்படி துரியோதனன் கேட்க, ஐவருக்கும் உரிய நாட்டைக் கொடுக்கும்படி கேட்கிறான் கண்ணன்.  "ஈ இருக்கும் இடம் கூட தரமுடியாது' என்று இரக்கமில்லாமல் பதில் சொல்கிறான் துரியோதனன்.  "ஐந்து ஊர்களையாவது கொடு' என்கிறார் கண்ணன். மறுக்கிறான் துரியோதனன்.  "உன் முன்னவன் தந்தை ஒரு பெண்ணை காத-க்கிறார் என்பதற்காக தனக்கு அரசாளும் உரிமையே வேண்டாம் என்று கூறினார்.  அவ்வளவு பெருந்தன்மை அவருக்கு இருந்தது. (ஆம் வீடுமர் தான் அவர்)  நீயோ முறை உள்ளவனுக்கு ஐந்து மாநகரங்களைக் கூட கொடுக்க மறுக்கிறாயே.'' என்றார் கண்ணன். துரியோதனன் சுடுமொழி பேசுகிறான்.  கண்ணன் போர் தான் இறுதி முடிவு என எச்சரிக்கிறார்.  சரி என்கிறான் துரியோதனன்.  அப்படியானால் போருக்கு ஒப்புக்கொண்டதாகச் சத்தியம் செய் என்கிறார் கண்ணன். "வெஞ் சமர் விளைக்கவே கை வழங்குக!' என, துரியோதனன் சினந்து தகாத வார்த்தைகள் கூறி கண்ணனைப் பழிக்கிறான்.  பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் அரசு தருவதாக ஒப்புக் கொண்டு இப்போது மறுப்பதால் போர் நடத்த ஒப்புக்கொண்டதை சத்தியம் செய்து கூறும்படி கண்ணன் கூறுகிறான்.  துரியோதனன் வெகுண்டு கூறிய வார்த்தை கேட்டு கண்ணன் அமைதியாக அவையை விட்டு வெளியேறினான்.  விதுரன் கண்ணனுக்கு விருந்து வழங்கியதைக் குத்திக் காட்டி தகாத வார்த்தைகளால் விதுரனின் தாயை பொதுமடந்தை எனக் கூறி அவமதிக்கிறான் துரியோதனன்.  விதுரன் சினந்து மறுமொழி கூறியதோடு நில்லாமல் தன் வில்லை முறித்து இனி போர் செய்ய மாட்டேன் வெங்கணை தொடுக்க மாட்டேன் என்ற சபதத்தோடு வெளியேறுகிறான்.  வீடுமன் விதுரனுடைய வில்வித்தையின் பெருமையைக் கூறி இவன் இல்லாமல் எப்படி விசயனை எதிர்க்க முடியும்.  விதுரனின் வில் சிறப்பு மிக்கது.  அரன் வில்லைப் போல - அரியின் வில்லைப் போல சிறப்பான வில் அது.  வில்வித்தையில் விதுரன் மிகச் சிறப்பானவன்.  அவனை இழந்து விசயனை எப்படி வெல்லப் போகிறோம் என்று தன் கவலையை வீடுமன் தெரிவிக்க வெகுண்டு எழுகிறான் கன்னன். "விசயன் வந்து அமரில் முடுகினால், எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி, இனி!'' என்பது வில்-யாரின் வாக்கு.  உடனே துரியோதனன் கன்னன் இருக்க பயமேன் என்று பதிலுரைக்கிறான்."உதார சீலன், உயர் அங்கர் கோன், வரி வில் ஒன்றுமே அமையும், உற்று எழும் பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட,  பரணி பாடவே.''.  கன்னனும் உடன் எழுந்து தன் வீரப்பிரதாபத்தை எடுத்துரைக்கிறான்.  ஏற்கனவே தோற்ற கதைகளை வீடுமன் எடுத்துரைத்து வீண்வார்த்தை வேண்டாம் என்று எச்சரிக்கிறார் கன்னனை.  கன்னனோ "இப்போது என்னிடம் நாகக்கணை உள்ளது.  நச்சென்று அடித்து வீழ்த்துவேன் அந்த விசயனை.  நாகக் கணையி-ருந்து விசயனால் தப்ப முடியாது.  விசயனை வீழ்த்தவே நாகக்கணை'' என்று கொக்கரிக்கிறான்.  விதுரன் வீடு திரும்பியதும் அங்கே அமர்ந்திருந்த கண்ணன் ஏன் சிறப்பு மிக்க தங்கள்வில்-னை ஒடித்தீர்கள் என்று கேட்கிறார். அப்போது விதுரன் "என்ன நடக்கும் என்ப்து யோசிக்கத் தெரியவில்லை துரியோதனனுக்கு.  அமைச்சர்கள் சொன்னாலும் கேட்பதில்லை.  அவர்களை மதிப்பதில்லை.  நாவடக்கமும் இல்லை.  இப்படிப்பட்டவனுக்காக போர் புரிந்து அதில் மாள்வது மடத்தனம்'' என்று முத்தாய்ப்பு வைக்கிறான் விதுரன்.  இதற்காகத் தானே கண்ணன் இவனது வீட்டில் வந்து தங்கி திருவிளையாடலை நடத்தி முடித்துள்ளார். "ஆவது கருதான் ஆகில், அமைச்சர் சொல் கேளான் ஆகில், வீவது குறியான் ஆகில், விளைவதும் உணரான் ஆகில், நாவது காவான் ஆகில், அவனுக்கா நடந்து போரில் சாவது, பழுது!' என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார்? செல்வம் வந்து உற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்; சொல்வன அறிந்து, சொல்லார்; சுற்றமும் துணையும் நோக்கார்; வெல்வதே நினைவது அல்லால், 'வெம் பகை வலிது" என்று எண்ணார்; வல் வினை விளைவும் ஓரார்'' என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறான் விதுரன்.  பின்னர் அங்கிருந்து குந்தி தங்கியிருந்த இடத்திற்குச் சென்ற கண்ணன் குந்தியின் முதல் மைந்தனைப் பற்றித் தனக்குத் தெரியும் என்று தகவல் தருகிறார்.  மிரள்கிறாள் குந்திதேவி.  பின்னர் நடந்த கதை முழுவதையும் கூறிய கண்ணன், "காதல் நின் புதல்வன்தன்னைக் கண் இலா அரசன்  பொன்-தேர்ச் சூதன் வந்து எடுத்துக்கொண்டு, சுதன் என வளர்த்த காலை,
ஆதபன், 'இவனை யாரும் கன்னன் என்று  அழைக்க' என்றான்; தாதையும், 'விசும்பில் சொன்ன நாமமே  தக்கது'  எனக் கூறி தேர்ப்பாகன் கன்னனைக் கண்டெடுத்து வளர்த்து வரும் கதையை விபரமாகக் கூறுகிறான் கண்ணன்.  தான் வந்துள்ள காரணத்தை விளக்கி விட்டு தூது வந்ததால் பயனில்லை எனவும் போர் உறுதி எனவும் சொல்- "எப்படியாவது கன்னனை ஐவருடன் கூட்ட வேண்டும் - ஒருவேளை கன்னன் மறுத்தால் அவனிடம் நாகக் கணையை ஒரு முறைக்கு மேல் மறுமுறை தொடுக்கக்கூடாது என உத்தரவாதம் பெற வேண்டும்'' என்று புகலுகிறான்.
இதற்குள் துரியோதனன் ஒரு திட்டம் தீட்டுகிறான்.  தனியாக வந்த கண்ணனைப் பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறான் துரியோதனன்.  அவன் தந்தை திருதராட்டிரனோ கண்ணனைக் கொல்லவேண்டும் என்று வழிகாட்டுகிறார்.  இதைக் கேட்ட நூற்றுவரில் ஒருவனான விகருணன் தூதனைக் கொல்வது பாவம் என்கிறான்.  கொல்லத்தகாதோர் யார் யார் என்று பட்டிய-டுகிறான்.
"மூத்தவர் - இளையோர் - வேதமுனிவரர் - பிணியின் மிக்கோர்
தோத்திரம் மொழிவோர் - மாதர் - தூதர் என்று இவரைக் கொல்-ற்
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனின் இல்லை''
அப்படி கொன்றால் நரகம் நிச்சயம் என்றும் எச்சரிக்கிறான் விகருணன்.  துச்சாதனன் விகருணன் புகன்றதைக் கேட்டு வெகுண்டு விகருணனை போருக்கு அழைக்கிறான்.  கன்னனோ அம்பால் கொன்று விடுவேன் என்று அச்சுறுத்துகிறான்.  சகுனியோ சூழ்ச்சியால் கண்ணனை சிறைப்படுத்தலாம் என்று தன் உபாயத்தைக் கூறுகிறான்.  சகுனியின் பேச்சைத் தட்டமாட்டானே துரியோதனன்.  இதற்கு ஒப்புதல் வழங்குகிறான். உடனே ஒரு நிலவறை அமைக்கப்படுகிறது.  அதில் அரக்கர் முத-யோரை மறைத்து வைக்கின்றனர்.  அதன் மேல் ஒரு இருக்கையைப் பொருத்தி அதில் கண்ணனை அமர வைப்பது எனத் திட்டமிடுகின்றனர்.  தூதன் மூலம் கண்ணனுக்குத் தகவல் அனுப்பி போர் குறித்துப் பேச அழைப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.  உடனே கண்ணனும் அரசவைக்குச் செல்கிறார்.  இருக்கையில் அமரச் சொல்கின்றனர்.  சிரித்துக் கொண்டே அமர்கிறார்.  உடனே இருக்கை நிலவறை நோக்கி வீழ்கிறது.  உள்ளே அரக்கர்கள்.  வீரர்கள்.  கண்ணனைச் சூழ்ந்து கொல்லப் பார்க்கிறார்கள்.  உடனே பேருருவம் எடுக்கிறார் கண்ணன்.  வெகுண்டு எழுகிறார். அனைவரையும் மாய்க்கிறார்.  கண்இமைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு பதறுகிறார் வீடுமன், துரோணர், கிருபன் ஆகியோர்.  கண்ணனின் பெருவடிவு கண்டு மகிழ்ந்து கண்ணனைத் துதிக்கின்றனர்.  தங்களை அறியாமல் இது நடந்தது எனக் கூறுகின்றனர்.  தேவரும் மலர் தூவி போற்றுகின்றனர்.  பெருவடிவின் வெப்பத்தால் தகித்த தேவர்கள் வடிவைச் சுருக்கிக் கொள்ளும்படி வேண்டுகின்றனர்.  கண்ணனும் தன் வடிவைச் சுருக்கிக் கொள்கிறார்.
ஆரணனே, அரனே,
புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்  காரணனே,
கருணாகரனே, கமலாசனி காதலனே,
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே,
நாரணனே! முனியேல், முனியேல்!' என, நாகர் பணிந்தனரே

மாதவனே, முனியேல்!
எமை ஆளுடை வானவனே, முனியேல்!
யாதவனே, முனியேல்!
இதயத்தில் இருப்பவனே, முனியேல்!
ஆதவனே, முனியேல்!
மதி வெங் கனல் ஆனவனே, முனியேல்!
நீதவனே, முனியேல்! முனியேல்!' என நின்று பணிந்தனரே.

 "கண்ண, பொறுத்தருள்!
வெண்ணெய் அருந்திய கள்வ, பொறுத்தருள்!
கார்வண்ண, பொறுத்தருள்!
வாம, பொறுத்தருள்!
வரத, பொறுத்தருள், நீ!-
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை'
என்று அண்ணல் மலர்க்கழல் சென்னியில் வைத்து, துதித்தனரே.  

திருமேனி ஒடுங்கிய பின் துரியோதனை நோக்கி, "வீமன் சபதம் காரணமாக இப்போது நீ என் கையால் இறக்கவில்லை.'' என்று கூறி உடன் வந்த மன்னர்களிடம் கன்னனின் பிறப்பு வரலாற்றை உணர்த்தி அவனை ஐவருடன் சேர இணங்க வைக்கும்படி கூறுகிறார்.  ஆனால் கன்னனோ ஐவரை இன்று அடுப்பின் - அது நெய்ந்நன்றி கொன்றதாகும் என்று மறுக்கிறான்.  பின்னர் அசுவத்தாமனால் ஏற்படப் போகும் ஆபத்துகளை முன்கூட்டி உணர்ந்து துரியோதனன் வேண்டினாலும் நீ சேனாதிபதி ஆகக்கூடாது எனக்கூறி தன் மோதிரத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறார்.  அவன் அதை எடுக்கும் போது சூரியனைச் சுற்றி வளையம் இருப்பதாகக் கூற அசுவத்தாமனும் சூரியனை நோக்குகிறான்.  இதை நூற்றுவர் தவறாகப் புரிந்து கொண்டு அசுவத்தாமன் கண்ணன் பக்கம் சாய்ந்துவிட்டான் எனவும் இனி அசுவத்தாமனை நம்பக்கூடாது எனவும் முடிவெடுக்கின்றனர்.  அவனைப் போரில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுக்கின்றனர்.  கண்ணன் விரைவாகக் காய்களை நகர்த்துகிறான்.  இந்திரனை அழைக்கிறான்.  கன்னனிடம் சென்று கவச குண்டலங்களைப் பெற்றால் தான் விசயனைக் காக்க முடியும் என்ற உண்மையைக் கூறி கவச குண்டலங்களை யாசகமாகப் பெற்று வருமாறு அனுப்புகிறான்.  இந்திரன் சிறிது யோசித்தபோது,
"வல்லார் வல்ல கலைஞருக்கும், மறை நூலவர்க்கும்,
               கடவுளர்க்கும்,
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தோர்தமக்கும்,
               துறந்தவர்க்கும்,
சொல்லாதவர்க்கும், சொல்பவர்க்கும், சூழும்
               சமயாதிபர்களுக்கும்,
அல்லாதவர்க்கும், இரவி மகன் அரிய தானம்
               அளிக்கின்றான்.

அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய்' என்றால்,
               அவன் ஒன்றும்
இந்தப் புவியில் மறுத்து அறியான்; உயிரே எனினும்,
               ஈந்திடுவான்!''
என்று கூறி இந்திரனை அனுப்புகிறான்.  இந்திரன் கிழவடிவம் தாங்கி தானம் கேட்கும் போது ஓர் அசரீரி மாயவன் கண்ணன் இவனை ஏவிஉள்ளான். வழங்காதே எனத் தடுத்தது.  ஆனால் சிந்தையில் ஓர் கலக்கமற்று கவசகுண்டலங்களை தானமாகக் கொடுத்தான் கன்னன்.  இதைக் கண்டு அதிசயம் கொண்ட இந்திரன் தன் உண்மை வடிவை வெளிக்காட்டி கன்னனுக்கு வேல் ஒன்று பரிசாகக் கொடுத்தான்.  எந்தக் கணைக்கும் மாயாத கடோற்கசன் இதனால் மாய்வான் எனக் கூறி அதற்கான மறையையும் சொல்- மறைகிறான்.  கன்னன் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்கிறான்.  இந்திரன் நடந்த விபரத்தை கண்ணனிடம் கூறி அமராவதி திரும்புகிறான்.  கண்ணன் பின்னர் குந்தியைக் கண்டு கன்னனிடம் சென்று பேசி வரும்படி அனுப்புகிறான்.     கன்னனிடம் வந்து குந்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது கன்னன் ஒரு துகிலைக் கொடுத்து அதை உடுத்திக் காட்டும்படி கொடுக்கிறான். "படாமது என் கையில் தருக!' என, வருதலும், பயந்திலேன்எனில் எனை முனி' என்று, எடா, விரித்து, அலைத்து, உடல் படப் போர்த்து, எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள். குந்தி வந்து தான் தாய் என்பதை மெய்ப்பிக்கிறாள். மனம் கசிகிறார்கள் இருவரும்.  "நான் அன்றே உனை வளர்த்து எடுக்கப் பாக்கியம் செய்திலேன்'' என்று மனம் வருந்திக் கூறுகிறாள் கண்ணன்.  பின்னர் இளைஞர் ஐவருடன் சேர்ந்து அரசாளும்படி வேண்டுகிறான்.  மறுக்கிறான் கன்னன்.  "எனக்கு அரசு கிடைத்தால் உடனே துரியோதனனுக்குத் தந்து விடுவேன்.  என்னை ஆதரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவன் அவனே. எனவே நான் ஐவருடன் வருவது அவர்களுக்கும் நல்லதல்ல - எனக்கும் நல்லதல்ல'' என்று கூறுகிறான் கன்னன்.  குந்தி பின்னர் இரண்டு வரங்கள் கேட்கிறாள்.  நாகக் கணையை ஒரு தடவைக்கு மேல் தொடுக்கக் கூடாது எனவும் விசயன் தவிர மற்ற நால்வரையும் எக்காரணம் கொண்டும் கொல்லக் கூடாது என்றும்  வரம் கேட்கிறாள்.  அவனும் மனமுவந்து வழங்குகிறான்.  கொடுத்துச் சிவந்த கையாயிற்றே கன்னனின் கை. "தெறு கணை ஒன்று தொடுக்கவும், முனைந்து செருச் செய்வோன் சென்னியோடு இருந்தால் - மறு கணை தொடுப்பது ஆண்மையோ' வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ - உறு கணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் -ஒழிந்துளோர் உய்வர்'' என்று உரைத்தான்.  பின்னர் கன்னனும் குந்தியிடம் இரண்டு வரம் கேட்கிறான். விசயனால் வெல்லப்பட்டு வீழ்ந்தால் உலகறிய மகனே என்று போர்க்களத்தில் வந்து கதறி முலைப்பால் அளிக்க வேண்டும் என்று ஒரு வரமும் - போர் முடியும் வரை ஐவரிடமும் உண்மையைக் கூறக்கூடாது என்றும் ஒரு வரமும் வேண்டினான்.  குந்தியும் ஒப்புதல் அளித்தாள்.  பின்னர் குந்தி வந்து கண்ணனிடம் நடந்ததை அப்படியே கூறினாள்.  கண்ணனும் மகிழ்ந்து பாண்டவர் இருப்பிடம் சென்று நடந்த அனைத்தையும் தெரிவித்தான்.  மீதிக் கதையை நாளை பார்ப்போமா?

No comments:

Post a Comment