Monday, November 22, 2010

MAHABHARATH - STORY OF WAR FROM 14TH DAY TO 18TH DAY

தாத்தா: பதினான்காம் நாள் போர் "தனஞ்செயன் மொழிந்த வஞ்சினம் வழு அற முடிப்பான்' என்ற தருமரின் நம்பிக்கையுடன் துவங்குகிறது.  வஞ்சினம் விசயன் உரைத்திருந்த காரணத்தால் சயத்திரதனை இடை வைத்து, ஏனைய வீரர்களைச் சுற்றிலும் நிறுத்தி துரோணன் ஐவகை வியூகமாக வகுத்து நிற்கிறான்.  போர் துவங்கியவுடன் விசயன் துரியோதனனை நோக்கி நகர்கிறான்.  தடுக்க வந்த துச்சாதனனும் அவனை சேனையும் உடைந்து துரோணர் நின்ற இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்.  துரோணரும் விசயனுடன் போர் தொடுத்து தளர்கிறார்.  இப்படியே போனால் பொழுது சாய்ந்து விடும் என்பதை உணர்ந்த கண்ணன் தேரை வியூகத்தின் உள்ளே செலுத்துகிறார்.  கண்ணன் தேரை செலுத்தி சூசி என்னும் ஊசி வியூகத்தை அடைகிறார்.  ஊசி போல் வடிவம் அமையக் சேனையை ஒரே வரிசையாய் ஒழுங்குபட நிறுத்துவது தான் சூசி என்னும் வியூகம்.  கன்னனைப் பொருது பின் முன்னேற வேண்டும் என விசயன் தன் விருப்பத்தினைத் தெரிவிக்க, கண்ணன் தேரை அங்கு செலுத்துகிறான்.  விசயன் கன்னனைச் சூழ நின்ற மன்னர்களை அழித்து அவனுடன் பொருதுகிறான்.  கன்னன் மயங்கி வீழ்கிறான்.  சுதாயு கன்னனுக்கு உதவியாக வருகிறான்.  சுதாயு என்பவன் வருணனின் மகன்.  சுதாயு கண்ணனின் பெருமை அறியாமல் விசயனைத் தாக்க ஒரு தண்டு கொண்டு எறிகிறான்.  ஆனால் அதைக் கண்ணன் தன் மார்பில் தாங்குகிறார்.  கண்ணன் தண்டினைத் தாங்கிய மறுகணம் சுதாயு மரணமடைகிறான்.  விசயனுக்கு ஒன்றும் புரியவில்லை.
சூர்யா: எனக்கும் ஒன்றும் புரியல்ல. தாத்தா வருணன் மகன் சுதாயு கதை என்ன?  அவன் கதை என்னும் தண்டு பெற்றது எப்படி? ஏன் அதை அவன் விசயன் மேல் விட்டு கண்ணன் ஏற்க சுதாயுவே மாய்கிறான்? சொல்லுங்க தாத்தா.
தாத்தா: வருணபகவானுக்கு பன்னவாதை என்று ஒரு மனைவி. இவர்களுக்குப் பிறந்தவன் இந்த சுதாயு. வடமொழியில் பர்ணாசா என்னும் மகாநதி. இந்த பன்னவாதையைக் கூறுவார்கள். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்ததும் அவன் மரணமில்லாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறாள் பன்னவாதை. "பன்னவாதையே - உலகத்தில் யார் பிறந்தாலும் இறக்க வேண்டும் என்பது தான் விதி.  அது யாரையும் விட்டு வைக்காது.  அதனால் அப்படிப்பட்ட வரத்தை அருள என்னால் முடியாது.  எனவே பகைவரால் வெல்ல முடியாதபடி வரம் தருகிறேன்.  நான் அளிக்கும் இந்த கதை இவனை எதிர்த்து யார் போர் புரிந்தாலும் அழிக்கும்.  யாரும் இந்த நிலவுலகில் தப்ப முடியாது.  இது பகையை அழிக்கும்.  ஆனால் போர் செய்யாமல் நிற்கும் எவர் மீதாவது இது தொடுக்கப்பட்டால் அவனைக் கொல்லாது திரும்பி வந்து எய்தவன் உயிரையே எடுத்து விடும். இது சுதாயுவுக்கும் தெரியும்.  போர் செய்ய மாட்டேன் என்று கூறிய கண்ணன் தேரின் முன் நிற்பதை மறக்கிறான் விசயன் மேல் உள்ள சினத்தின் காரணமாக.  கோபத்தில் விட்ட தண்டு கண்ணன் மேல் படுகிறது.  அதனால் தான் கண்ணனை விட்டுவிட்டு எய்த சுதாயுவையே அது சிதைத்து விட்டது.  இதைக் கேட்ட சுதாயுவின் இளவல் சதாயு ஓடிவருகிறான்.  விசயனுடன் கடும் போர் புரிகிறான்.  அவனும் மாள்கிறான்.  பின்னர் ஆயிரவாகு என்பவன் வந்து விசயனுடன் பொருது அழிகிறான்.  ஆயிரம் தோள் உடையவன் இந்த ஆயிரவாகு.
சூர்யா: இதற்கு முன்னால் யாராவது ஆயிரம் தோள்களுடன் இருந்திருக்கிறார்களா தாத்தா?
தாத்தா: இருவர் கண்ணனைச் சுற்றிவரும் கதைகளில் வருகிறார்கள்.  ஒருவன் கார்த்தவீரியார்ச்சுனன்.  மற்றொருவன் வாணாசுரன்.  வெண்ணிறமுடையவனை அர்ச்சுனன் என்பர்.  கார்த்தவீரியார்ச்சுனன் என்பவன் கிருதவீரிய மகாராசன் என்பவனது மகன்.  எனவே தான் கார்த்தவீரியார்ச்சுனன் எனப் பெயர் பெற்றான்.  சந்திர குலத்தில் பிறந்த யயாதி மன்னனது மூத்த குமாரனாகிய யதுவின் குலத்தவன் கிருதவீரியன்.  சிவன்-திருமால்-பிரமன் ஆகியோர் அம்சமாக விளங்கும் அத்திரி குமாரனாகிய தத்தாத்திரேய முனிவரைத் தொழுது ஆயிரம் தோள் பெற்று சிறந்த முறையில் நிலவுலகத்தை ஆள்கிறான்.  இவனுக்கு மரணம் பலரால் போற்றப்படும் ஒரு உன்னத பிறவியால் தான் நிகழும் என்ற வரமும் பெற்றவன் இவன்.  பல வேள்விகள் புரிந்தான்.  வரங்கள் பல பெற்றான்.  ஆனால் நிலவுலகில் சாகாவரம் தான் யாரும் பெறமுடியாதே.  ஒருதடவை இவன் நர்மதை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திக்குவிசயம் செய்து வந்த இராவணன் இவனை எதிர்க்க இராவணனை இவன் பூச்சி போல் பிடித்து தன் சிறையில் வைத்து அடைத்து விடுகிறான்.  பின்னர் இராவணனின் முன்னோரான புலத்திய முனி வேண்டியதன் பேரில் அவனைச் சிறையி-ருந்து வெளியே அனுப்புகிறான்.  அதனால் இவனை "இராவணஜித்' என்று கூட புகழ்வார்கள். இவன் பரசுராமனது தந்தையான சமதக்கினி முனிவர் குடிலுக்குப் போனபோது விருந்துண்டு அங்கிருந்த நந்தினி என்னும் காமதேனுவின் அம்சத்தைப் பார்க்கிறான்.  அதனிடம் ஆசை கொண்டு அவர் அனுமதி இல்லாமல் அதைக் கொண்டு செல்ல முயல்கிறான். தடுத்த முனிவரைக் கொல்கிறான். இந்த உலகத்தில் ஆசையே எல்லாவிதமான அழிவிற்கும் காரணம்.  வரம் பல பெற்ற இவனுக்கு ஒரு பசு மீது ஆசை வந்தது.  பரசுராமன் இதை அறிகிறான்.  இவனுடன் கடும் போர் செய்து தன்னந்தனியனாக அனைவரையும் கொன்று இவனது ஆயிரம் தோள்களையும் தலையையும் தனது கோடா-யால் - அதாவது பரசு என்ற ஆயுதத்தால் வெட்டி வீழ்த்துகிறான்.  பரசுராமன் இப்படிப்பட்ட வெற்றிகொண்டான்.  அவன் திருமா-ன் அம்சம் தானே.
அடுத்தவன் வாணாசுரன்.  இவனை வடமொழியில் பாணாசுரன் என்பார்கள்.  பங்களாதேசம் என்பதை நாம் வங்கதேசம் என்பது போல பாணாசுரனை வாணாசுரன் என்று அழைக்கிறோம்.  வாணாசுரன் கடுமையான தவம் புரிந்ததால் சிவபெருமானிடமிருந்து ஏராளமான வரங்கள் பெற்று வாழ்ந்த ஒரு அசுரன்.  ஆயிரம் கைகளையும் நெருப்பு மதிலையும் இறைவனிடம் வரமாகப் பெற்றவன். இவனுடைய பெண் உஷை என்பவள்.  அவள் கண்ணனுடைய பேரனான அநிருத்தனை விரும்புகிறாள்.  இதை அவனுக்குத் தெரிவிக்கிறாள்.  அவனும் அந்தப்புரத்தில் யாரும் அறியாமல் வந்து உஷையோடு வாழ்கிறான்.  இதை அறிந்த பாணன் நாகாத்திரத்தை பயன்படுத்தி அவனைக் கட்டிச் சிறைப்படுத்துகிறான்.  இதை நாரதர் மூலம் கண்ணன் அறிந்து அநிருத்தனை மீட்க கருடன் மேல் ஏறி பலராமனுடன் புறப்பட்டு வருகிறார்.  பாணபுரம் என்னும் சோணிதபுரத்துக்கு வர சிவபிரானது கணங்கள் கண்ணனைத் தடுக்கின்றன.  அவர்களை எல்லாம் வதைத்து முன்னேறுகிறார். சிவபெருமானால் ஏவப்பட்ட சுரதேவதை வருகிறது.  கண்ணன் தானும் ஒரு சுரதேவதையை உருவாக்கி அந்த தேவதையை விரட்டுகிறார்.  தீக்கடவுள் எதிர்த்து வர அவனையும் நாசஞ்செய்கிறார் கண்ணன்.  பின்னர் வாணாசுரனே வந்து போரிடுகிறான்.  அவனுக்குத் துணையாக சிவபெருமானும் கணபதியும் கந்தனும் வந்து போரிடுகிறார்கள்.  பின்னர் சக்கராயுதத்தை விடுகிறார் கண்ணன்.  அது அவனது தோள்களை அறுத்துக் கொண்டே போகிறது.  சிவபெருமான் கண்ணனை வெகுவாகத் துதித்து பாணனைக் காப்பாற்றும்படி வேண்ட நான்கு தோள்களோடு விடுகிறார் கண்ணன்.   இப்படி ஆயிரம் தோள் உடையவர்கள் கதை எனக்குத் தெரிந்தவரை இந்த மூன்று பேர் தான்.  இன்னும் தெரிந்தால் பின்னர் கூறுகிறேன்.  சரியா.  கதைக்கு வருவோம்.  போர் நடந்த இடத்தில் இருந்து சற்றே ஒதுக்குப்புறமாக தேரை நிறுத்தி கண்ணன், "குதிரைகளுக்குத் தாகமாக உள்ளது.  இப்போதைக்கு நீர் அருந்தாமல் கிளம்பாது. எனவே பூமியி-ருந்து நீரை வரவழைக்க வேண்டும்.'' எனக் கூற தனது வாளியால் பூமியைப் பிளந்து ஒரு தடாகத்தை உண்டாக்குகிறான் விசயன்.  அதிலே புரவிகள் நீர் அருந்திக் கொண்டிருந்தன.  இதற்குள் விசயனுடன் போர் செய்து தோற்றவர்கள் ஓடோடிப் போய் துரியோதனனிடம் விசயனை எதிர்த்து யாரும் வெற்றி பெற முடியவில்லை என்று தெரிவிக்க அவன் துரோணரிடம் தன்னுடைய குறையைத் தெரிவிக்கிறான்.  உடனே துரோணர் ஓர் அழிவற்ற கவசம் ஒன்றை துரியோதனனுக்கு வழங்குகிறார்.  இந்தக் கவசம் தன் ஆசிரியரினால் தனக்கு வழங்கப்பட்ட கவசம் என்று கூறி அதன் வரலாற்றையும் கூறித் தருகிறார்..  இந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடைபெற்ற போது பிரமன் மற்றும் திருமாலுடன் சிவபெருமானைச் சரணடைய அவருடைய மேனியி-ருந்து தோன்றிய கவசத்தை அளித்தார் அவர்.  அதனைத் தரிப்பவர் எந்த ஆயுதத்தாலும் அழிக்கப்பட மாட்டார்கள் என ஆசியும் கூறினார்.   அதை உபயோகித்து இந்திரன் விருத்திராசுரனை வென்றான்.  பின்னர் அந்தக் கவசத்தை அங்கிரசு முனிவருக்குக் கொடுக்க அவர் தன் மகனான பிருகசுபதிக்குக் கொடுக்க அவர் அக்னிவேசிய முனிவருக்குக் கொடுத்தார்.  அந்த முனிவர் தன் மாணாக்கனான துரோணருக்கு ஈந்து அருளினார்.  அதை அணிந்து கொண்ட துரியோதனனுக்குத் தலைகால் புரியவில்லை. எல்லோரையும் அச்சுறுத்தலாம் என்ற தவறான நினைப்புடன் தன் படையுடன் விசயனை நோக்கி வருகிறான்.  அவன் சேனைகள் அந்தப் பொய்கை இருந்த இடத்திற்கு வந்து நீர் பருகி விடாய் தீர்த்துக் கொண்டு விசயனை வளைக்கின்றன.  இந்தப் படை தொலைவில் வரும் போதே நோட்டமிட்ட விசயன் கண்ணனிடம் கூறிவிட்டு ஒப்புதல் வாங்கித்  தரையில் நின்றபடி அம்புகளை எய்கிறான். துரியோதனன் இப்படி ஆரவாரம் செய்து கொண்டு வருவதன் காரணம் புரியாமல் கண்ணனிடம் கேட்க, கண்ணன் அந்த கவசத்தின் தன்மையைக் கூறி அதை அழிக்க வேண்டும் என்று ஆணையிடுகிறான்.  விசயன் கணைமழை பொழிந்த போதும் அந்த கவசம் அழியவில்லை.  பின்னர் வேல் கொண்டு எறிகிறான்.  அந்த வேலை அசுவத்தாமன் தன் அம்புகளால் துணிக்கிறான்.  விசயன் தளர்கிறான்.  எனவே,கண்ணன் உடன் தன் சங்கை எடுத்து முழக்குகிறான்.  பின்னர் கண்ணன் ஒரு வேலைக் கொடுத்து அதை எறியும்படி ஆணையிடுகிறான்.  அதனை எறிந்து துரியோதனன் கவசத்தைப் பிளக்கிறான் விசயன்.  படைகள் பின்னிடுகின்றன.  இந்த வேலைக் கொண்டு தான் நரகாசுரனைக் கொன்றாள் சத்தியபாமை.  நரகாசுரன் யார் என்று ஏற்கனவே கூறி உள்ளேன்.  திருமால் வராக (பன்றி) அவதாரம் செய்து நிலமடந்தையை மீட்ட போது திருமா-ன் தொடுதல் காரணமாக நிலமடந்தைக்குப் பிறந்தவன் தான்  நரகாசுரன்.  இவன் நரர் எனப்படும் மனிதர்களை வாட்டியதால் நரகாசுரன் என்று பெயர் பெற்றான்.  பின்னர் தேவர்களையும் விட்டு வைக்கவில்லை.  அவர்கள் திருமா-டம் முறையிட்டதன் பேரில் கண்ணன் அவதாரத்தின் போது நிலமடந்தை சத்தியபாமையாகப் பிறந்து கண்ணன் துணைவியாகிறாள்.  நரகாசுரனை எதிர்த்து கண்ணன் போரிடச் சென்றபோது தேரோட்டியவள் சத்தியபாமை.  அவள் தன் முற்பிறப்பை மறந்து விட்டாள்.  போரின் போது கண்ணன் மயங்கி விழுந்த மாதிரி நடிக்க, அந்தநேரம் நரகாசுரன் கண்ணனைக் கொல்ல அருகில் வர - சத்தியபாமை இந்தவேலைக் கொண்டு அவனை வதம் செய்கிறாள்.  பின்னர் மயக்கம் தெளிந்த கண்ணன் நரகாசுரன் நிலமடந்தை மகன் என்றும் நிலமடந்தையே சத்தியபாமையாக அவதாரம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.  அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வேல் கொண்டு தான் துரோணர் கொடுத்த கவசத்தைப் பிளக்கிறான் விசயன்.  இந்த வேலை வடநூல்களில் சக்கர ஆயுதம் என்று கூறப்பட்டுள்ளது.  வில்-பாரதத்தில் வேல் என்று உள்ளது.  சரியா.  கண்ணனது சங்கநாதம் கேட்ட தருமர் போர்நிலவரம் அறிந்து வர சாத்தகியை அனுப்புகிறார்.  அவன் தேர் ஏறி படைகளைக் கடந்து வருகிறான்.  எதிர்பட்ட கிருதவர்மனை வெல்கிறான்.  சாத்தகியைத் தடுக்க முயன்ற கண்ணன் புதல்வர்கள் பலர் சாத்தகியால் கொல்லப்படுகிறார்கள்.  துரோணர் தடுத்துப் பார்க்கிறார்.  முடியவில்லை.  இருவரும் களைத்துப் போகிறார்கள்.  பின்னர் துச்சாதனன் போரிட்டு தோற்கிறான்.  ஒருவழியான சாத்தகி முன்னேறி விசயன் இருந்த இடத்தை அடைகிறான்.  இதற்குள் தருமர் மிகவும் கவலைப்பட்டு சாத்தகி வராததன் காரணம் தெரியாமல் வீமனை அனுப்புகிறார்.  வீமனைத் தடுக்க முயன்ற விந்தன், விந்தரன் உட்பட துரியோதனன் தம்பியர் முப்பத்தைவரை வீமன் விண்ணுலகு அனுப்புகிறான்.  கலக்கும் இந்த வீமனும் விசயனை அடைந்து விட்டால் பின்புறம் உள்ள படை முழுவதும் அழிந்து விடும் என்று கருதிய துரோணர் வீமனைத் தடுக்கிறார்.  வீமன் துரோணரின் தேரைத் தன் கையால் தூக்கி எறிகிறான்.  சிதைந்து போகிறது துரோணரின் தேர்.  கன்னன் வந்து வீமனை வளைக்கிறான்.  அவனுடைய தேரையும் வீமன் சிதைக்க கன்னன் ஓடுகிறான்.  மீண்டும் துரியோதனனோடு திரும்பி வந்து போரிட்ட கன்னன் கடுமையாக மோதுகிறான்.  இந்தப் போரில் துரியோதனனின் தம்பியர் மேலும் இருவர் மாள்கின்றனர்.  தன் கண்ணெதிரே தலைவனின் தம்பிகள் மடிந்ததைக் கண்ட கன்னன் சினம் கொண்டு மீண்டும் வீமனோடு பொருத இந்தப் போரில் மேலும் எட்டு தம்பிகள் மாள்கின்றனர்.  விகருணனை தப்பிச் செல்லும்படி வீமன் கூறுகிறான்.  அவனோ என் அண்ணன்கள் இறந்து கிடக்க நான் தப்பிப்போவது நியாயமல்ல என்று கூறி போரைத் தொடர்கிறான்.  இறுதியில் விகருணனும் மடிகிறான்.  பின் கன்னனைத் தோற்கடித்து சாத்தகியும் வீமனும் விசயனை நெருங்குகிறார்கள்.  தடுக்க வந்த பூரிசிரவசைத் தாக்குகிறான் சாத்தகி.  மற்போரில் சாத்தகி இளைத்து தோற்கும் நிலை வருகிறது.  பூரிசிரவசைக் கொல்லுமாறு விசயனை ஆணையிடுகிறார் கண்ணன்.  விசயனை இருவர் தனித்துப் போரிடும் போது கணை தொடுப்பது போர்நீதி அல்ல என்று கருதி கணை தொடுக்கத் தயங்குகிறான். பின்னர் கண்ணனின் சினம் கண்டு கணை ஏவி ஒரு கையைத் துணிக்கிறான் விசயன். ஒரு கை இழந்த பூரிசிரவசைக் கொல்கிறான் சாத்தகி. "அறம் அன்று இப்போர்'' என்று துரியோதனன் கூற கண்ணன் புன்சிரிப்புடன் நீங்கள் சிவேதனையும் அபிமனையும் கொன்றபோது போர்நெறி தவறினீர்களே என்று சுட்டிக்காட்டுகிறான்.
'"நென்னல் நீர் அபிமன்தன்னை நேர் அற வென்ற போரும்,
முன்னமே சிவேதன்தன்னை வீடுமன் முடித்த போரும்,
மன் அறம் முறை தவாமல் மலைந்தனிர்!' என்று  என்பார் வில்-யார்.
விசயனின் நோக்கம் கதிரவன் மறைவதற்குள் சயத்திரனைக் கொல்ல வேண்டும் என்பது.  ஆனால் சயத்திரனோ எங்கு தேடியும் காணவில்லை.  மாயக் கண்ணனுக்குப் புரிந்து விட்டது.  அவனை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று.  எனவே தன் சக்கரத்தைச் சுற்றவிட்டு கதிரவனை மறைத்தார்.  உண்மையிலேயே கதிரவன் மறைந்து விட்டான் என்று கருதி துரியோதனன் மகிழ்ச்சி அடைந்தான்.  கதிரவன் மறைந்தான்.  விசயன் தான் சொன்னபடி மடிய வேண்டும் என்று கொக்கரித்தான் துரியோதனன்.  இதைக் கேட்டவுடன் மறைந்திருந்த நிலவறையில் இருந்து மன்னர் புடைசூழ சயத்திரதன் வெளியே வந்தான்.  வந்தவுடன் விசயனிடம் அவனது தலையைக் கொய்து மாலையில் மடுவின் நடுவில் கதிரவன் மறையும் நேரத்தில் கதிரவன் பூசை செய்து தருப்பிக்கும் அவனது தந்தையான முனிவர் கையில் இந்தத் தலை விழும்படி கணைமழை பொழிய வேண்டும் எனக் கட்டளையிட்டான் கண்ணன்.  அதை அப்படியே நிறைவேற்றினான் விசயன்.  பின்னர் தான் கேட்டான் ஏன் தலையை அவ்வளவு தூரம் அனுப்பச் சொன்னீர்கள் என்று.  கண்ணன் சயத்திரதன் கதையைச் சொன்னார். "இந்த சயத்திரதன் பிறந்த போது அசரீரி ஒன்று இவன் தலையைக் கீழே போடுபவன் எவனோ அவன் தலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும்'' என்று கூறியுள்ளது.  எனவே நீ கீழே விழவைத்தால் உன் தலை வெடிக்கும்.  பூசை செய்யும் வேளையில் தலை கையில் விழுந்தால் என்னவோ ஏதோ என்று பதட்டத்தில் அந்த முனிவர் அதைக் கீழே போடுவார்.  இதற்குள் சயத்திரதன் தந்தையும் இறந்து போயிருப்பார்.  இவனும் இறந்து விட்டான்.  நீயும் உன் சபதத்தை நிறைவேட்டிவிட்டாய்'' என்று கூறினார்.  "நான் எங்கே கண்ணா நிறைவேற்றினேன்?  நீ சொன்னாய்.  நான் செய்தேன்'' என்று அடக்கத்தோடு பதில் உரைத்தான் விசயன்.  இந்த மடு இன்றளவும் குருசேத்திரம் அருகில் உள்ளது.  துரியோதனன் நடந்தது அறியும் முன் மாயக் கண்ணன் தன் ஆழியை அகற்றினான்.  சூரியன் ஒளிவிட்டு ஒரு பனைமரத் தூரத்தில் தெரிந்தது.  கதிரவன் மறையவில்லை என்பதையும் கண்ணனால் தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தான் துரியோதனன்.  வெகுண்ட துரியோதனன் கண்ணனனைப் பலவாறாகப் பழித்தும் இழித்தும் பேசுகிறான்.  கண்ணனையும் விசயனையும் தாக்க வருகிறான்.  தடுக்க வருகிறான் கடோற்கசன் தன் மகன் அஞ்சனபன்மனுடன்.  இடைமறித்த அசுவத்தாமன் கடோற்கசன் மகனைக் கொல்கிறான்.  கடோற்கசனை அசுவத்தாமன் தண்டால் அடித்து மயக்கமடைய வைக்கிறான்.  இதுவே கடோற்கசனைக் கொல்ல சரியான தருணம் எனக் கருதிய துரியோதனன் கன்னனை அம்பெய்து கடோற்கசனைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறான்.  ஆனால் கன்னனோ மயங்கிக் கிடப்பவனை கொல்லக் கூடாது என்று நியாயம் பேசுகிறான்.'தளர்ந்தவன்மேல் அம்பு தொடேன்; விசயனைக் கொல்வேன்'  என்று வீரம் பேசுகிறான் கன்னன்.  பலமுறை விசயனிடம் போரிட்டு மீண்டும் மீண்டும் தோற்கிறான் கன்னன்.  பொழுது சாய்ந்தாலும் போரை நிறுத்தக் கூடாது - விளக்குகள் ஏந்திப் போரிடுக எனக் கட்டளையிடுகிறான் துரியோதனன்.  இந்த நேரத்தில் அலாயுதன் என்னும் அரக்கன் சபதம் செய்து வீமனோடு பொருதுகிறான்.  வீமனை விலக்கி கடோற்கசன் வந்து அரக்கன் அலாயுதனோடு மோதுகிறான்.  வெற்றி பெற்ற கடோற்கசன் அலாயுதனைக் கொல்கிறான்.  இரவு நேரம் என்பதால் எல்லோரும் தளர்வடைகிறார்கள்.  ஆனால் கடோற்கசன் பலமடங்கு பலம் பெறுகிறான்.  தன் மாயையால் துரியோதனன் படையைக் கலக்கி பெரும்படையை அழிக்கிறான்.  பதறிப் போகிறான் துரியோதனன்.  கன்னனை அழைத்து உடனே கடோற்கசனைக் கொல்லும்படி கட்டளையிடுகிறான்.  கன்னன் தன்னிடம் உள்ள வேல் பற்றி கூறி காலை வரை பொறுத்தால் மந்திரம் ப-க்கும் என்றும் காலையில் விசயனைக் கொல்லலாம் என்றும் கூற - துரியோதனன் "காலை வரை நாம் எல்லோரும் உயிருடன் இருந்தால் தானே நாளை போர் நடக்கும்.  இந்த இரவிலேயே கடோற்கசன் எல்லோரையும் மாய்த்து விடுவான் போ-ருக்கிறது.  எல்லோரும் அழிந்தபின் விசயனை அழித்து யார் அரசாளப் போகிறார்கள்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை கன்னா - இப்போதே இந்தக் கணமே அந்த வேலை கடோற்கசன் மேல் ஏவி அவனைக் கொல்'' என்று கட்டளையிட அஞ்ஞனமே செய்கிறான் நன்றிமறவா கன்னன்.  கடோற்கசன் என்னும் புயல் ஓய்கிறது.  சாய்கிறான் கடோற்கசன்.  அடுத்து துரியோதனன் ஏவலால் துரோணர் விராடனையும் துருபதனையும் சரங்களால் சல்லடையாக்கி கொல்கிறார்.  தன் கண் எதிரே தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட  தளபதி திட்டத்துய்மன் பழி வாங்கியே தீருவேன் எனச் சபதம் எடுத்து வெளியேறுகிறான்.  வெற்றி மகிழ்ச்சியோடு போரை முடித்துக் கொண்டு பாடிவீட்டிற்குப் போகிறான் துரியோதனன்.  பாண்டவர்கள் அசகாய சூரர்களில் முதல் நாள் அபமன் இறந்து பட்டதும் - இன்றைய தினம் கடோற்கசன் இறந்ததும் நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.  ஆனால் கண்ணன் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.  காரணத்தை அறிய தருமன் ஆவல் கொண்டு கேட்கிறான்.  அப்போது "கடோற்கசன் இந்த வேலால் இன்று சாகாதிருந்தால் நாளை விசயன் அல்லவா மடிந்திருப்பான்.  இவன் இறந்து விசயனைக் காப்பாற்றி விட்டான்.  நானும் விசயனைக் காக்க முடிந்தது'' என்று பதில் கூறுகிறான் கண்ணன். "உரக அம்பினுக்கு உயிர் உய்ந்தால், அந்த வேலையில், மற்று எறிவதற்கு இருந்தான், ஆற்றலால்  கூற்றினும் கொடியோன்.''  குந்திக்கு வாக்கு கொடுத்திருந்தான் ஒருமுறை தான் நாகக் கணையை விடுப்பேன் என்று.  ஆனால் குறி தவறினால் கேவலம் என்று அன்று வீரம் பேசிய கன்னன் மனதில் ஓருவேளை கண்ணன் மாயத்தால் ஏதாவது நடந்து விசயன் தப்பினால் இந்த வேல் பயன்படும் என்று கருதியிருந்தான்.  ஆனால் கடோற்கசன் வந்து கெடுத்துவிட்டான்.  இப்படியாக பதினான்காம் நாள் போர் முடிவடைந்தது.  மீதிக் கதையை நாளை பார்ப்போம் சூரியா.




தாத்தா: பதினைந்தாம் நாள் போர் தொடங்குகிறது.  விசயன் கணைகளால் வாலவீமனும் சோமதத்தனும் மாள்கிறார்கள். துரோணர் இன்று தான் கற்ற வித்தை முழுவதையும் பயன்படுத்தி களத்தில் தருமர் படையை உண்டு இல்லை என்று கலக்குகிறார்.  யாரும் அவரைப் பொருது தடுக்கமுடியவில்லை.  இதைக் கண்ட பல முனிவர்கள் போர்க்களத்திற்கு விரைகிறார்கள்.  அகத்தியர், மரீசு, வசிட்டர், அத்திரி, விசுவாமித்திரர், கௌதமர், பரத்துவாசர் போன்ற போன்றோர் துரோணரைக் கண்டு உபதேசம் செய்கிறார்கள்.
'தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்;''
என்று கூறுகிறார்கள்.  முனிவர்கள் உபதேசத்தால் துரோணன் அமைதியடைந்தான்.  இதைப்புரிந்து கொண்ட கண்ணன் துரோணன் மாளவேண்டிய நாள் இன்றே.  தொடு கணையை என்று விசயனுக்கு ஆணையிட்டார்.  தருமரிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினார்.  தருமர் பொய் சொல்லமாட்டேன் என மறுத்தபோது கண்ணன் நியாயம் என்ன என்பதைப் பகர்கிறார்.
'உம்மையில் மறுமைதன்னில் உறு பயன் இரண்டும் பார்க்கின்,
இம்மையில் விளங்கும் யார்க்கும் அவர் அவர் இயற்கையாலே
மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற விபத்தினை மீட்கும் ஆகின்,
பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்கும் மாதோ!
ஒரு நல்ல செயலைகி கருதி பொய் கூறுவது தவறாகாது என்கிறார் கண்ணன்.  உடனே தருமன் துரோணர் இருக்கும் இடம் சென்று "அசுவத்தாமா என்னும் வாணத்துக்கு வீமன் சிங்கமானான்'' என்கிறார்.  வாணம் என்பது யானை.  வீமன் யானையைக் கொன்றான் என்பது தான் பொருள்.  தவறாக வீமன் அசுவத்தாமனைக் கொன்றான் என்று கருதிய துரோணர் படைக்கலத்தைக் கீழே போட்டுவிட்டு அமைதியாக மரணத்தை எதிர்நோக்கி நிற்கிறார்.
'அத்தனே அடு வல் ஆண்மை அச்சுவத்தாமா என்னும்
மத்த வாரணத்துக்கு, ஐயோ! மாருதி சிங்கம் ஆனான்;
எத்தனை கோடி சேனை இக் களத்து இறந்தது! அந்த
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது!' என்றான் தருமன் என்கிறார் வில்-யார்.  இந்த நேரத்தைப் பயன்படுத்தி திட்டத்துய்மன் கணை விடுகிறான் துரோணரை நோக்கி.  துரோணர் மாள்கிறார்.  செய்தி எட்டுகிறது அசுவத்தாமனுக்கு.  ஓடோடிக் கதறிக் கொண்டு வருகிறான்.  இறந்த தன் தந்தையைக் கண்டு வருந்துகிறான்.
கண்டான், வீழ்ந்தான்; அம் முனி பாதம் கமழ் சென்னி
கொண்டான் மோதி, கண் பொழி நீரில் குளித்திட்டான்;
வண் தார் சோர, மண் உடல் கூர, வல் நஞ்சம்
உண்டார் போல, எண்ணம் அழிந்தான், உளம் நொந்தான்.

'வில்லாய் நீ; வெம் போர் முனை வெல்லும் விறலாய் நீ;
சொல்லாய் நீ; தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ;
வல்லார் வல்ல கலைகள் அனைத்தும் வல்லானே!
எல்லாம் இன்றே பொன்றின, உன்னோடு; எந்தாயே!
யாராலும் வெல்லமுடியாத எந்தையே இப்படி பொய்ச்செய்தி கேட்டு மடிந்தனையே என்கிறான் அசுவத்தாமன்.  துரியோதனன் ஓடோடி வந்து தேற்றுகிறான் அசுவத்தாமனை.  யாவரையும் வெல்வேன் என வில்லை வளைக்கிறன் அசுவத்தாமன்.  கண்ணன் உடனே எல்லோரையும் தத்தம் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு நிற்கக் கட்டளை இடுகிறார்.  எல்லோரும் கண்ணன் சொல்லுக்குக் கட்டுப்படுகிறார்கள்.  அசுவத்தாமன் நாராயணக் கணையை விடுக்கிறான்.  அனைவரும் வணங்கியதால் அது யாரும் கொல்லவில்லை.  நேரே வீமனை சென்றடைகிறது.  இதைக் கண்ட கண்ணன் ஓடிப்போய் வீமன் கையில் இருந்த வில்லைப் பிடுங்கி வெறும் கையுடன் நிற்க வைக்கிறார்.  வீமனை நோக்கி வந்த நாராயணக் கணை நாணித் திரும்புகிறது.  அசுவத்தாமன் பாசுபதம் விட எண்ணி அந்த வாளியை எடுக்கிறான்.  வியாத முனிவரும் பிற முனிவர்களும் வந்து அசுவத்தாமனை அமைதிப்படுத்தி அந்த அத்திரத்தை உபயோகிக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார்கள்.  கண்ணனின் மாய வேலை தான் அது.  அந்த அத்திரம் யாருக்காக என்று உள்ளதோ?  எப்போது பயன்படப் போகிறதோ?  பார்ப்போம்.  துரியோதனன் சஞ்சயனை அழைத்து துரோணர் இறந்த விபரத்தை திருதராட்டிரனுக்குத் தெரிவித்து வரும்படி அனுப்புகிறான்.  கன்னன் சேனைத்தலைவன் ஆகிறான்.
பதினாறாம் நாள் போர் துவங்குகிறது.  கன்னன் சேனைத்தலைவன்.  பெரிய எதிர்பார்ப்புகளோடு வருகிறான்.  வில்முனையால் யாரையும் வெல்லலாம் என்ற அகந்தை நிறைந்த உள்ளம்.  கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரம்.  கன்னன் மகர வியூகத்தை வகுக்கிறான்.  திட்டத்துய்மன் சக்கர வியூகம் வகுக்கிறான்.  காசி அரசனும் வீமனும் களிறு மீது ஏறி பொருதுகிறார்கள். காசி மன்னன் கேமதூர்த்தி வேல் எறிகிறான்.  வீமனின் யானை மடிகிறது.  வீமனும் அவன் யானையை வீழ்த்துகிறான்.  இருவரும் தண்டு கொண்டு பொருதுகிறார்கள்.  கடுமையான போர் நடக்கிறது.  இறுதியில் கேமனை வீமன் கொல்லுகிறான்.  இதனால் கௌரவர் சேனை சிதறுகிறது.  கன்னன் மீண்டும் ஒன்றுசேர்த்து பொருதுகிறான். கன்னனும் நகுலனும் பரி மீது அமர்ந்து பொருதுகிறார்கள்.
சூர்யா: பரி என்றால் என்னங்க தாத்தா?
தாத்தா: பரி என்றால் குதிரை.  மதுரைக்கு அழகர் எதன் மேல் வருகிறார்.  பரிமேல் வருகிறார்.  பரிமேல்அழகர்.  திருக்குறளுக்கு பரிமேலழகர் என்பவர் உரை எழுதியிருக்கிறார்.  நடைமுறையில் உள்ள சொல்.  நாம் பயன்படுத்தாததால் சொற்கள் மறைந்து விடுகின்றன.  தெரியாமல் போய் விடுகிறது.  தமிழ் அகராதி வைத்துக் கொண்டு தினம் பத்து தமிழ் சொற்களையாவது நீ கற்க வேண்டும் புரிகிறதா?  தமிழ்பேப்பர்.நெட் என்று ஒரு வலைத்தளம் உள்ளது.  அதிலே கொத்தனார் நோட்" என்று கோனார் நோட்ஸ் போல வருகிறது.  இலக்கணத்தை புதுமுறையில் கற்றுக் கொடுக்கிறார் ஒரு ஆசிரியர்.  மிக நன்றாக உள்ளது.  படித்துப் பார்.  இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும்.  திரைப்படங்களை வைத்து தமிழ் கற்றுக் கொடுக்கிறார் அந்த ஆசான். அதைப் படித்துப் புரிந்து கொண்டால் தமிழில் பிழைகளைத் தவிர்க்கலாம்.  கதைக்கு வருவோம்.  நகுலன் கணைகளால் கன்னன் குதிரை இழந்து தேரில் ஏறுகிறான்.  நகுலனும் தேரில் ஏறிப் போர் புரிகிறான்.  இம்முறை கடுமையான போர் புரியும் கன்னன் நகுலனை பின்னடையச் செய்கிறான்.  பின்னர் விசயனை எதிர்க்கப் புறப்படுகிறான்.  விசயன் அம்பினால் கன்னன் வ- இழந்து மீள்கிறான்.  மறுபுறம் அசுவத்தாமனும் வீமனும் வெம்போர் புரிகிறார்கள்.  திட்டத்துய்மனை சஞ்சத்தகரும் நாராயணகோபாலரும் எதிர்க்கிறார்கள்.  அந்த இடத்திற்குக் கண்ணனுடன் விசயன் வருகிறான் .  சஞ்சத்தகரும் நாராயணகோபாலரும் முற்றிலும் அழிகிறார்கள்.  கண்ணனின் வாரிசுகள் இந்த நாராயணகோபாலர்கள்.  ஆனால் தாம் எந்த படைக்காகப் போரிட்டார்களோ அவர்களுக்காக தங்கள் தந்தை எதிர்புறம் தேர் ஓட்டும் போதே மடிகிறார்கள்.  சேனை முதுகிடுகிறது. இதை அறிந்த துரியோதனன் பெரும் படையுடன் வந்து தருமனை எதிர்க்கிறான்.  ஆனால் தருமர் தன் திறமை முழுவதையும் காட்டி வில் கொண்டு கணை தொடுக்கிறார்.  துரியோதனன் தளர்வுறுகிறான்.  தருமர் நகைத்து "உன்னைக் கொல்வதாக என் தம்பி வீமன் சபதம் எடுத்திருக்கிறான்.  எனவே இன்று தப்பிப் போ.  நாளை போருக்கு வா.  இன்று போய் நாளை வா'' என்கிறார்.
அனிலன் குமாரனரசரசனியெ னனுசன் சொல் வாய்மை பழுது படுமென,
வுனையின்று கோறலொழிவதலது நினுரமென்கொலாகு மெனதுகணையெதிர்,
புனை தும்பைமாலை சருகுபட வெழு பொடிமண்டவோடி மறைகவிரைவுட,
னினியெங்க  ளாண்மையுரை செய்தெது  பயனெதிர்வந்து நாளை யணிக விகலியே
இன்று போய் நாளை வா என்று தருமர் உரைத்தவுடன் சினமுறுகிறான் துரியோதனன்.  தன் கதையை எடுத்து தருமன் மேல் எறிகிறான்.  தருமர் தன் வேலால் அதை தடுக்கிறார்.  அந்த வேல் கதையைத் தடுத்தது மட்டுமல்ல சீறிப்பாய்ந்து துரியோதனனைத் தாக்குகிறது.  துரியோதனன் தரையில் வீழ்கிறான்.  கன்னன் மற்றும் அசுவத்தாமன் அங்கு விரைகிறார்கள்.  சினத்துடன் அனைவரும் தருமரை வளைக்கிறார்கள்.  உடன் விசயன் அங்கு வந்து தருமருக்கு உதவுகிறான். மேற்கே சூரியன் மறைகிறான்.  பதினாறாம் நாள் போர் முடிகிறது.  துயருடன் துரியோதனன் படைகள் பாடிவீட்டிற்குத் திரும்ப பாண்டவர் படை மகிழ்ச்சியுடன் திரும்புகிறது.
கதிரவன் கிழக்கே உதிக்க பதினேழாம் நாள் போர் துவங்க உள்ளது.  கன்னன் துரியோதனனோடு களம் புக - தம்பியர் சூழ வந்த தர்மன் கண்ணனிடம் வந்து "இன்றைய போரில் கன்னன் இறப்பானோ?''என்று கேட்கிறார்.  கண்ணன், "இன்று கன்னனும் நாளை துரியோதனனும் மடிவார்கள்.  நீ அரசாளப் போவது உறுதி'' என்று பதில் கூறுகிறார்.'கன்னன் இன்றும், துரியோதனன் நாளையும், மடிய அவனி நின்னதாம்' என்பது கண்ணன் வாக்கு.  தருமனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.  நன்றியைத் தெரிவிக்கும் விதமாகக் கண்ணனின் பாதங்களில் பணிந்து போற்றுகிறான் கண்ணனனை.  கண்ணன் செய்த உதவிகளை எல்லாம் பட்டிய-டுகிறான் தருமன்.  கேட்கத் திகட்டாத பகுதி இது.  மலரும் நினைவுகள் போல் கண்ணன் செய்த உதவிகள் ஒவ்வொன்றாகக் கூறும் பகுதி இது 'எங்கள் மானமும்' தொல் ஆண்மையும் புகழும் நீ அலால், யார் நிலையிடுவார்?

வெங் கண் மாசுணத்தோன் வஞ்சனைக் கடலின் வீழ்ந்து                                     அழுந்தாவகை எடுத்து, இன்று  அம் கண் மா நிலமும் தந்தனை!' எனப் பேர் அறத்தின் மா மகன்                                     இவை உரைப்பான்:
 'பொங்கு அழல் சிந்தைச் சுயோதனன் கங்கைப் புனல்                                 விளையாட்டிடைப் புதைத்த  வெங் கழு முனையில் விழாமல், ஓர் அளி ஆய், வீமனுக்கு                                 ஆர் உயிர் அளித்தாய்;  பைங் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர,                                 பயந்த நுங்கு அழல் அனையாள்  நாணமும் துகிலும் நோக்கினை-காக்கும் நாயகனே!
 'கானக மருங்கில், மேவலன் பணியால், கடும் பசியுடன் வரும் கடவுள்                                     மானவ முனிவன் தாபமும்  சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய்;  யான் ஒரு பொருளாத் தூது சென்றருளி, எதிர் இலா விதுரன்                                     வெஞ் சிலையும்,  பானுவின் மதலை கவசமும், அகற்றி, பரிந்து பல் வினைகளும்                                     புரிந்தாய்;
 'களப் பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்தனக்கு நேர்ந்திடவும்,  கிளப்ப அருந் திதியை மயக்கி, வான் மதியம் கிளர் ஒளி                                     அருக்கனைக் கேட்ப,  வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி,  உளப் பொலிவுடனே விசயனுக்கு அருளால், உருளுடைக் கொடி                                     கொள் தேர் ஊர்ந்தாய்;
 'அஞ்சியோ, அன்றி அருள்கொலோ, அறியேன்; ஆகவத்து                                     அடுதொழில் மறந்த  வெஞ் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி, மீளவும்                                     பொரும்படி விதித்தாய்;  வஞ்சினம் மறந்து, நேமியும் தரித்து, வலம்புரி குறித்து, மூதாதை  துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன்                                     வழாவகை துரந்தாய்;
 'ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெங்                                     கடத்து ஒருத்தலின்மேல்  வரு பகதத்தன் எறிந்த வேல் உன்தன் வண் துழாய்                                     மார்பகத்து ஏற்றாய்;  பொரு பகை அரசர் பலர் பட, அபிமன் பொன்றிய பொழுது,                                     செந் தழலின்  நிருபனை முனியால் விழாவகை விலக்கி, நிசியில் வெங்                                     கயிலையும் கண்டாய்;
 'வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த                                     வெங் கதையைக்  கருணையால் மருமம் புதைய ஏற்று, அந்தக் காளை                                     கையறும்படி கண்டாய்;  தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண்-சங்கமும் முழக்கி,                                     நேமியினால்  அருணன் ஆதபத்தை மறைத்து, இரவு அழைத்து, ஆங்கு அபிமனுக்கு                                     அரும் பழி கொண்டாய்;
 'ஏ வருஞ் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள்  வீ வரும் தன்மை அறிந்து, வாகனமும் விறல் படைகளும்                                     ஒழித்திட்டாய்;  மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே! பார்த்திவர் பலரும்  தேவரும் உணரார், நின் செயல்!'
இப்படி தருமர் போற்றியவுடன் உளமகிழ்ந்த கண்ணன் படைகளை அணிவகுக்க திட்டத்துய்மனுக்கு கட்டளையிடுகிறார்.  படையணிவகுப்பைக் கண்ட கன்னன் துரியோதனனிடம், "சல்-யன் மட்டும் இன்று எனது தேரைச் செலுத்தினால் இன்று நான் யாவரையும் வெல்வேன்.  எல்லாம் வல்ல கண்ணன் அங்கே விசயனுக்குத் தேர் ஓட்டுகிறான்.  அதனால் அவனை வெல்ல முடியவில்லை.  இங்கே தேர் செலுத்துவதில் வல்லவன் சல்-யனே. அவன் இன்று தேர் கடவுமாகில் வெற்றி பெறலாம்.  அப்படித் தேரைச் செலுத்தினால் கண்ணன் என்ன சிவனே வந்து விசயனுக்குத் தேரோட்டினாலும் விசயனை நான் வெல்வேன்.'' என்று மிக்க அகந்தையோடு தன் ஆசையைத் தெரிவிக்கிறான்.  ஆனால் விதி அவன் நாக்கில் மீண்டும் விளையாடுகிறது.  வில்-யார் மிக அழகாகச் சொல்வார். "இன்றே செஞ்சோற்றுக் கடனை நான் கழியேனாகில் - உற்ற போரில் யார்க்கு இனி என் உயிர் அளிப்பது? இயம்புவாயே'' என்கிறான்.  அவன் நாவே நமக்கு உரைக்கிறது அவன் இன்று இறக்கப் போகிறான் என்று.  சிறிது நேரம் யோசிக்கிறான் துரியோதனன்.  பின்னர் ஒருவாறு தைரியத்துடன் போய் சல்-யனிடம் தன் வேண்டுகோளை விடுக்கிறான்.  சல்-யனுக்கோ கோபம் கொந்தளிக்கிறது.  வாய்ப்பினால் மன்னன் ஆனவனுக்கு மன்னவன் குலத்தில் வந்த நான் தேரோட்டுவதா?  இதை வேறு யாராவது கூறியிருந்தால் நாக்கை அறுத்திருப்பேன்.'' என்று பதில் உரைக்கிறான்.  பின்னர் துரியோதனன் வெகுவாக அவனைச் சமாதானப்படுத்தி ஒருப்பட வைக்கிறான்.  மகிழ்ச்சி அடைந்த கன்னன் தானம் பல புரிகிறான்.  பின்னர் தேர்ப்பாகனாக அமர்ந்த சல்-யனிடம் தன்னைத் தானே பலவாறு புகழ்ந்து-பாராட்டிப் பேசுகிறான்.  சல்-யன் இளநகை புரிந்து கன்னனது தருக்கு அடங்கும் வண்ணம், 'நீ நின் வென்றியும், வலியும், கற்ற வின்மையும், விளம்ப வேண்டா; ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து, சென்று எதிர் முனைந்தபோது, உன் சேவகம் தெரியும் மாதோ! '' என்று பதில் சொல்கிறான்.  உடனே கன்னன் சல்-யனைக் கடிந்து கொள்கிறான்.  தேரில் இருந்து சல்-யன் இறங்கி கன்னனை சண்டைக்கு அழைக்கிறான்.  துரியோதனன் ஓடோடி வந்து இருவரையும் சமாதானப்படுத்தி தேரில் ஏற்றிப் போருக்கு அனுப்புகிறான்.  போர் துவங்குகிறது.  திட்டத்துய்மன் வீரர்களோடு வந்து கன்னனோடு போரிட்டுத் தோற்கிறான்.  வீமன் உதவிக்கு வந்து கன்னனோடு போரிடுகிறான். வீமனோடு மோதித் தோற்கிறான் கன்னன்.  "உன்னை விசயன் கொல்வதாகச் சபதம் செய்திருக்கிறான்.  அவன் வஞ்சினம் அழியும்.  எனவே தப்பிப்போ'' என்று கூறிச் செல்கிறான் வீமன்.  சோழ மன்னன் போரில் பாண்டவருக்காகப் போரிடுகிறான்.  மாகதனுடன் போரிட்டு அவனைக் கொல்கிறான் சோழன்.  வில்-யார் தமிழ்நாட்டு வீரத்தை மிக அழகாக பதினேழாம் நாள் மற்றும் பதினெட்டாம் நாள் போரில் வர்ணிப்பார்.
"மிண்டு முது புலி ஏறு பதாகையன், வென்றி வளவனை யார் நிகர் வீரரே?''.  பு-க்கொடி உடைய பு-கள் அன்றோ நம் தமிழர்கள்.  அன்றும் சரி இன்றும் சரி பு-களை ஒழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்று அன்றே சொன்னார் வில்-யார்.  அசுவத்தாமன் தகவலைக் கேட்டு மிக்க சினத்துடன் சோழ மன்னனுடன் போர் புரிய வருகிறான்.  அசுவத்தாமனை சோழ மன்னன் வென்று வெறும் காலுடன் உயிரோடு போகும்படி அனுப்பி வைக்கிறான்.  மறுபுறம் துரியோதனன் தம்பி சுதக்கணன் நகுலனோடு மோதி தோற்று ஓடுகிறான்.  கன்னன் ஒருபுறம் தருமரோடு போர் புரிகிறான்.  கடுமையான போர் நடக்கிறது.  க-ங்கர் முத-ய பல மன்னர்களை தருமர் வென்று விண்புகச் செய்கிறார்.  தருமன் சங்கு ஊத கன்னனும் சங்கை முழக்குகிறான்.  கன்னன் மிகச் சினத்துடன் கணை தொடுக்கிறான்.  தருமர் புறம்கொடுத்து ஓடப் பார்க்கிறார்.  கன்னனோ தருமரிடம் புறமிடுதல் தகாது என்று கூறி போரிட அழைக்கிறார்.  இதைக் கண்ட வீமன் அங்கு வருகிறான் தருமரின் துணையாக்.  தேரோட்டி சல்-யன் வீமனை வெல்ல முடியாது.  அரிதான விடயம். என்று கூற கன்னன் வீரம் பேசி வீமனோடு மோதுகிறான்.  வீமன் அம்பால் கன்னன் அயர்ந்து வீழ்கிறான்.  சல்-யன் பின்னர் கன்னனைத் தேற்றி போரிடுமாறு கூறுகிறான்.  இப்போது கன்னன் மிக்க சினத்துடன் போரிட்டதால் வீமன் பின்னடைய நேரிடுகிறது.  இதைக் கேட்ட விசயன் போர்க்களத்திற்கு தானே வருகிறான்.  கன்னனுக்கு உதவியாக அசுவத்தாமன் வந்து நிற்கிறான்.  கடும்போர் நிகழ்கிறது.  கண்ணன் உரைப்படி பிறைமுக அம்பைத் தொடுக்கிறான் விசயன்.  அசுவத்தாமன் மயங்கி அவனது தேரில் சாய்கிறான்.  துச்சாதனன் ஓடோடி வந்து தேரோடும் அசுவத்தாமனை அழைத்துச் செல்கிறான்.  அசுவத்தாமன் மீண்டும் திரும்புகிறான் போர்க்களத்திற்கு.  இப்போது சித்திரவாக பாண்டியன் அசுவத்தாமனோடு மோதுகிறான். வியக்கத்தக்க வீரச்செயல் ஆற்றுகிறான் இந்த பாண்டிய மன்னன்.
"அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே!
வைகை  ஆறு உடையவனை அஞ்ச, அருஞ் சமர் உடற்றினானே.
அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ் அவ் அம்பால்
முந்துற விலக்கி, தங்கள் மூவகைத் தமிழும் போல,
சிந்தையில் குளிக்குமாறு, சிலணிமுகம் மூன்று விட்டான்;-
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான்?"

சூர்யா: தாத்தா - தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோ என்று சொல்றாரே இந்தப் புலவர்.  இந்தப் பாண்டிய மன்னன் துரோணரையே வென்றவனா?
தாத்தா: அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் சிவபிரான் பிட்டுக்கு மண்சுமந்த கதையில் முதுகில் பாண்டியனிடம் அடிபடுகிறார்.  அப்போது பாண்டியன் சிவபெருமானின் முதுகையே கண்டவன் என்ற பொருளில் வருகிறது என்று என்னுடைய ஆசிரியர் எனக்குச் சொன்னார்.  சரியா.  கதைக்கு வருவோம்.  கடுமையான போரில் இறுதியில் பாண்டியன் இறந்துபடுகிறான்.  தருமரும் பின்னிடுகிறார்.  தகவல் சோழ மன்னனுக்குத் தெரிகிறது.  ஓடோடி வருகிறான்.  தென்னவன் மாண்டான் என்று அறிந்தவுடன்.  அசுவத்தாமன் முன் வந்த சோழன் அவனை இகழ்கிறான்.  "பாண்டியன் தரையில் இருந்த போது நீ தேரில் நின்று அம்பெய்து அவனைக் கொன்றது அறமா'' என்று பேசி போரிடுகிறான்.
'தேரின்மேல் நின்று, நீ சிறு கண் செம்புகர்க்
காரின்மேல் வீரனைக் கணையின் காய்வதே?
பாரின்மேல் ஆர்கொல் இப் பாதகம் செய்தார்?-
நீரின்மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய்!
'ஆர்ப்பன மறை மொழிந்து, அனைவர் பாவமும்
தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே,
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய,
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ?
சோழமன்னன் அந்தணனின் தொழில் என்ன என்பதை மிக அழகாக எடுத்தியம்பி அசுவத்தாமனை இகழும் இந்தப் பாடல் கருத்து இன்று வரை தொடரத் தான் செய்கிறது.  சோழன் எறிந்த வேலால் அசுவத்தாமன் கலங்கி கீழே விழுகிறான்.  சகுனி முத-யோர் ஓடிவந்து அவனைத் தேற்றுகின்றனர்.  பல மன்னர் வந்து அசுவத்தாமனுடன் அணி சேர்ந்து சோழனுடன் போர் செய்து அனைத்து மன்னர்களும் அழிகிறார்கள்.  அசுவத்தாமன் தோல்வியோடு துவண்டு திரும்புகிறான்.  துச்சாதனன் ஒன்பது தம்பியருடன் வந்து வீமனை எதிர்க்கிறான்.  வீமன் துச்சாதனனின் வீரத்தையும் முந்தைய செய்கைகளை இகழ்கிறான்.  துச்சாதனன் வாய்பேசாது நிற்கிறான். மற்ற தம்பிமார்கள் பொருதுகிறார்கள்.  ஒன்பது தம்பிமார்களும் மாள்கிறார்கள். துச்சாதனன் வெகுண்டு வீமனுடன் விற்போர் புரிகிறான்.  பின்னர் கதை போர் புரிகிறார்கள்.  இறுதியில் மற்போர் புரிகிறார்கள்.  வீமன் துச்சாதனன் உடலைப் பிளக்கிறான்.  அவனுடைய குருதியைக் கொள்பளிக்கிறான்.  அந்தக் குருதி வெள்ளத்தில் குளிக்கிறான்.  விபரம் அறிந்து விசயனும் கண்ணனும் அந்த இடத்திற்கு விரைகிறார்கள்.  வீமன் துச்சாதனன் விரல் பத்தையும் தனித்தனியாகத் துணிக்கிறான்.  மீண்டும் குருதியை எடுத்துக் கொப்பளித்து - கூத்தாடி மகிழ்ந்து அண்ணன் தருமனை அடைந்து தகவலைச் சொல்- மகிழ்கிறான்.  கன்னன் இந்தத் தகவல் அறிந்து துயருற்று போரில் சற்றே ஓய்ந்திருக்கிறான்.  சல்-யன் இடித்துரைக்கிறான்.  அச்சப்படவில்லை - துச்சாதனன் மரணத்தால் சிறிது துயரடைந்தேன் என்று கூறுகிறான் கன்னன். வெருவுமோ, பாந்தள் எதிர் செல்லப் பறவைக்கு அரசு?' என்றான்.  இதற்குள் விசயன் விடசேனனோடு பொருது அவனை மாய்க்கிறான்.  விடசேனன் என்பவன் கன்னனது மகன்.  இது கேட்ட கன்னன் கருத்தழிகிறான்.  சல்-யன் தேற்றுகிறான்.  இத்தருணத்தில் அசுவத்தாமன் துரியோதனனை அடுத்து, "இப்பொழுதாவது பாண்டவருடன் கூடி வாழ முற்படு' என அறிவுரை கூறுகிறான்.  மறுக்கிறான் துரியோதனன்.  அசுவத்தாமன் மற்றும் துரியோதனன் கன்னனை அடைந்து விசயனது உயிரைக் கொள்ளுமாறு தூண்டுகிறார்கள். "விசயன் தலையை இன்றே கொய்வேன்' என்று கொக்கரித்து கன்னன் விசயனை நோக்கி விரைகிறான்.  கடும்போர் நிகழ்கிறது.  விசயன் தேவதத்தம் என்னும் சங்கை முழக்குகிறான்.  கன்னன் பராபரம் என்னும் சங்கை ஊதுகிறான்.  மாயன் தேரை நகர்த்த முடியாதபடி சரக்கூடம் அமைக்கிறான் கன்னன்.  கண்ணனும் தன் மாயத்தால் எதிர்புறம் இவ்வாறே சரக்கூடம் அமையுமாறு செய்து, விசயனை நோக்கி கன்னனுடன் போரிடத் தயங்குவதேன் என்று கேட்கிறான்.'கன்னன் தருமன்போல் தோன்றுதலின் எனக்கு அமர் செய்தல் அரிது; தேரினை மீளவிடு' எனக் கூறி தருமன் இருந்த பக்கம் விரைகிறார்கள்.  தருமன் கன்னனுடன் போரிடாது திரும்பியது கண்டு -விசயனையும் அவனது வில்லையும் பழிக்கிறான் தருமன்.  விசயனுக்குத் தன் வில்லைப் பழித்தால் பிடிக்காது.  போர் தொடுத்துக் கொன்று விடுவான்.  இப்போதும் அண்ணன் என்றும் பாராமல் கொல்லத் துணிகிறான்.  கண்ணன் விலக்கி விட்டு அமைதியடையச் செய்து அண்ணன் தர்மனை மிகக் கீழ்த்தரமாக இகழும் படியும் அப்படிச் செய்தால் அது கொன்றதற்குச் சமானம் என்றும் வழி ஒன்றையும் கூறுகிறான்.
"கூர் ஆர் முனை வாளி கொள் இச் சிலையைக் குறை என் எதிர் கூறினர், அம் புவிமேல் யார் ஆயினும், ஆவி செகுத்திடுமால்; இது வஞ்சினம் ஆதலின், இப்பொழுதே
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனைத் தலை கொய்வன்'  என்ற விசயனையும் பின்னர் தருமனையும் சமாதானப்படுத்தி மீண்டும் கன்னனுடன் பொருதச் செல்கிறான் விசயன்.  இம்முறை கன்னன் நாகக்கணையைத் தொடுக்கிறான் விசயனை வெல்லும் நோக்கத்துடன்.  கண்ணன் தேரை அழுத்தி அந்தக் கணை விசயன் கழுத்தைச் சீவாதவாறு பார்த்துக் கொள்கிறான்.  அக்கணையை விசயன் இருகூறாக்குகிறான்.  அந்தக் கணை மீண்டும் கன்னனை வந்து மறுமுறை தன்னை எய்யும்படி வேண்டுகிறது.  மறுக்கிறான் கன்னன்.  அந்த நாகம் நொந்து உயிர் துறக்கிறது.  துறக்கும் முன் அந்நாகக்கணை கூறிய வாசகம்,
'எரியிடை வெந்து, உடல் வாலும் முன் தறிதலின், இடர் அற உய்ந்திட,  நீ பெரும் புகல் என
விரைவொடும் வந்து, "எனை வாளி கொண்டிடுக!" என விசயனை வென்றிடுமாறு உளம் கருதவும்,
ஒரு தனி வெஞ் சிலை கால் வளைந்திலதுகொல்? ஒரு படியும் பிழைபோனது உன் தொடை' என
வரி கழல் அங்கர் பிரானை நொந்து, உரைசெய்து, மறலியிடம்தனில் ஆனது அன்று, உரகமே.
சல்-யனும் மறுமுறை கணையைத் தொடுக்கும்படி கூறியும் கன்னன் மறுக்கிறான்.  கோபம் மே-ட சல்-யன் தேரி-ருந்து இறங்கித் தன் தேருக்குச் செல்கிறான்.  பின்னர் கன்னன் விசயனுடன் போரிடுகிறான்.  கன்னனின் வ- இப்போது குறைந்துள்ளதால் கன்னனது உயிர்க்காற்று அவியுமாறு கணை தொடுக்கக் கட்டளையிடுகிறான் கண்ணன்.  அவ்வாறே விசயன் கணை தொடுக்க வீழ்கிறான் கன்னன்.  ஆனால் உயிர் துறக்கவில்லை.  போரை நிறுத்துமாறு கண்ணன் விசயனுக்குக் கூறி, வேதியர் வடிவு கொண்டு கன்னனை அடைந்து தருமம் தரும்படி வேண்ட, "தரத்தகு பொருளை நீ சொல்லுக' என்று அந்த நிலையிலும் வேண்டுகிறான் கன்னன். அவனது புண்ணியத்தைக் கண்ணன் இரந்து நிற்க, கன்னன் மகிழ்ந்து கணையைப் பிடுங்கி தனது உதிரம் கொண்டு தான் செய்த புண்ணியம் முழுவதையும் தாரை வார்த்துக் கொடுக்கிறான்.

"ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை அகத்ததோ? புறத்ததோ? அறியேன்;
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்தன்ன வந்திலையால்;
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்; கொள்க நீ! உனக்குப்
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால், புண்ணியம் இதனினும் பெரிதோ?'
'கைப் புனலுடன் தருக' என்ன,  அன்னவன் இதயத்து அம்பின்வாய் அம்பால் அளித்தலும்,                                  அங்கையால் ஏற்றான்-முன்னம் ஓர் அவுணன் செங் கை நீர் ஏற்று மூஉலகமும்                                  உடன் கவர்ந்தோன்."
பின்னர் வேதியர் உருவில் இருந்த கண்ணன் வேண்டிய வரத்தைக் கேட்கும்படி கூற, அப்போதும் வெற்றியை வேண்டவில்லை கொடுத்துச் சிவந்த கரத்தை உடைய கன்னன். "எப்பிறப்பினும் இல்லை என்று கூறி வருபவருக்கு மறுத்து உரையா இதயம் அளி' என்று தான் கேட்டான்.  கன்னன் வேண்டிய வரம் மட்டுமல்ல முத்தியும் கொடுத்தான் கண்ணன்.  கன்னன் அகம் மகிழ்கிறான்.  உடன் கண்ணன் தன் மெய்யுருவைக் காட்டுகிறார்.  பெருந்தவம் புரிந்தவருக்கும் காணக் கிடைக்காத பேருருவைக் கண்டான் கன்னன்.  பரந்தாமனைக் கண்ட கண்கள் பனித்தன.  களித்தன.  பின்னர் கண்ணன் விசயனிடம் போய் தேரோட்டியாக அமர்ந்து அஞ்சரீகம் எனும் கணையைத் தொடுக்கும்படி விசயனுக்குக் கட்டளையிட்டான்.  கண்ணன் சொற்படி விசயன் கணை தொடுக்க கன்னன் வீழ்கிறான்.  குற்றுயிருடன் கிடக்கிறான் கன்னன்.  அசரீரி மூலம் கன்னன் மாண்ட செய்தி குந்திக்குத் தெரிய ஓடோடி வருகிறாள் போர்க்களத்திற்கு.  அள்ளி எடுத்து அணைக்கிறாள்.  மகனே என்று கதறுகிறாள்.






 "என்றே என் தாதையுழைக் கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால்                            ஈன்றேன், ஈன்ற  அன்றே பொற் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால்,                            உனை விடுத்தேன், அருள் இலாதேன்; வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு,     உன் வீரம் கேட்டு, நன்றே என் தவப் பயன் என்று உன்னி வாழ்ந்தேன்; நாகமும் நீ                            அரசாள நடக்கின்றாயோ? அந்தோ அந்தோ, கடவுளர்தம் மாயையினால் கழிவுற்றாயே!"                    குந்திதேவி கன்னனை நேயமோடு மடியில் வைத்து அமுதூட்டுகிறாள். அமுது குடித்த வாயோடு விண்ணகரம் நோக்கிச் செல்கிறான் கன்னன்.  தாயின குரல் போர்க்குரல் கேட்டு விசயனுக்கு என்ன ஆனதோ என்று ஐவரும் தத்தம் இடத்தி-ருந்து ஓடோடி வருகிறார்கள்.  ஆனால் தங்கள் தாய் கன்னனை மடியில் வைத்துக்கொண்டு மகனே-மகனே என்று கதறுவதைக் கண்டு ஒன்றும் புரியாமல் நிற்க மாயக்கண்ணன் நடந்த கதை முழுவதையும் சுருக்கமாக எடுத்துரைக்கிறான்.
உற்ற தோழன் கன்னன் மடிந்தான் என்று கேட்டவுடனேயே துரியோதனன் பதட்டத்துடன் ஓடோடி வருகிறான். "உனை ஒழிந்தும் - தம்பியரை ஒழிந்தும் - இனித் தனித்து நானே வாழ்வேனோ? என் வாழ்வே - மனவ-யே - வருகின்றேன் உன்னுடன் நான்'' என்று கதறுகிறான்.  துரியோதனன் கன்னனை நம்பித் தான் போரைத் தொடங்கினான் என்பது அவனது கூற்றி-ருந்து தெரிகிறது.  வேறு யார் மாண்ட போதும் இப்படி துயரப்படவில்லை கொடிய நெஞ்சு கொண்ட துரியோதனன்.  இரு தரப்பினரும் நெஞ்சடைக்க - துயரம் மே-ட தங்கள் பாடிவீடு திரும்புகின்றனர்.
பதினெட்டாம் போர் துவங்க உள்ளது.  சல்-யனைத் துரியோதனன் சேனாபதி ஆக்குகிறான்.  சல்-யன் அத்திர வியூகம் வகுக்க தருமன் அது கண்டு மனம் தளர்கிறான்.  கண்ணனின் ஆணைப்படி திட்டத்துய்மன் அணிவகுப்பை முறைப்படுத்துகிறான்.  சல்-யன் தருமனோடு வந்து பொருதுகிறான். சேனாதிபதி ஆனவுடன் சல்-யன் தனது வல்லமை முழுவதையும் காண்பிக்கிறான்.  எனவே தருமன் தளர்கிறான்.  வீமன் விற்போரில் அதிர்ந்து போகிறான்.  கதை கொண்டு போரிட வீமன் முயல சல்-யன் தோமரப்படை என்னும் இருப்புலக்கை கொண்டு போரிட்டு எற்றுகிறான் வீமனை.  வீமன் சல்-யனுக்கு எதிரில் நிற்க முடியவில்லை.  மறுபுறம் நகுலன் கன்னன் மகன்கள் மூவரை விண்ணுலகு ஏற்றுகிறான்.  சகுனியும் அவனது மகன்களும் நகுலனோடு பொருது தோற்கிறார்கள்.  தருமரை மீண்டும் வந்து எதிர்க்கிறான் சல்-யன்.  தடுக்க வந்த வீமன் புதையுமாறு சல்-யன் அம்பு எய்கிறான்.  நகுல சகாதேவரும் சாத்தகியும் வந்து வீமனைக் காக்க சல்-யனோடு போரிடுகிறார்கள்.  வீமனும் எழுந்து மீண்டும் போரிடுகிறான். விசயனும் அசுவத்தாமனும் கடும்போரிடுகிறார்கள்.  இறுதியில் கண்ணன் தேர் விடும் வரை விசயனை வெல்லமுடியாது எனக் கூறி அசுவத்தாமன் விலகிச் செல்கிறான்.  வீமனின் உக்கிரத் தாக்குதல் தொடங்க சல்-யன் இப்போது சமாளிக்க முடியாமல் திணறுகிறான். உதவ பெரும்படையுடன் வருகிறான் துரியோதனன். துரியோதனன் தோற்று புறமுதுகிட்டு ஓடுகிறான்.  பின்னர் தருமன் சல்-யனோடு கடும்போரிடுகிறான்.   தருமன் எய்த வேல் சல்-யன் உயிரைக் குடிக்கிறது.  சல்-யனும் மாள்கிறான்.  இதற்குள் வீமன் துரியோதன் தம்பியர் எழுவரை விண்ணுலகு அனுப்பிவிட்டான்.  தகவல் கேட்ட துரியோதனன் தன் தம்பியர் ஐவரோடும் பெருஞ்சேனையுடனும் திரும்புகிறான்.  துரியோதனன் தம்பியர் ஐவரும் மாள்கின்றனர்.  சகாதேவன் துரியோதனனைப் போரில் வெல்கிறான்.  வீமன் துரியோதன் தம்பியர் ஒன்பதின்மரை க் கொல்கிறான்.  எஞ்சியிருந்த தம்பியர் அனைவரும் பதினெட்டாம் போரில் வீமனால் கொல்லப்படுகிறார்கள்.  வீமனால் தொண்ணூற்று ஒன்பது பேரும் படிப்படியாகக் கொல்லப்பட்டது கண்டு கவலையடைந்தான் துரியோதனன்.  நிலைகுலைகிறான் துரியோதனன்.  சகுனி தேற்றுகிறான்.  பின்னர் சகுனியும் சகாதேவனும் போரிடுகிறார்கள்.  சகுனியைக் கொல்கிறான் சகாதேவன்.  சோழ மன்னன் அசுவத்தாமனுடன் போரிட்டு வேலை எறிகிறான்.  அசுவத்தாமன் நிலைகுலைந்து விழுகிறான்.  அவன் மாமன் கிருபாச்சாரியன் வந்து உதவுகிறான்.  ஆனால் அவனும் புறமுதுகிடுகிறான்.  சகுனி இறந்ததும் திகைக்கிறான் துரியோதனன்.  தனது வழிகாட்டி மறைந்தவுடன் துரியோதனன் தனியாக ஒரு குளத்திற்குச் சென்று - குளத்தில் மூழ்கி -மாண்டாரை மீண்டும உயிர்ப்பிக்கும் வேள்வியை மூச்சடக்கி நடத்துகிறான். அசுவத்தாமன் துரியோதனனைக் காணாமல் சஞ்சயனிடம் வந்து கேட்க துரியோதனன் குளத்தில் அமர்ந்து யாகம் புரிவதைச் சொல்கிறான் சஞ்சயன்.  அந்த இடம் நோக்கி ஓடுகிறான் அசுவத்தாமன்.  "பாண்டவர் தமை இன்றே ஒழிப்பேன்.  அரசினை உனக்குத் தருவேன்.  மாண்டவர் மீண்ட பின் நீ நன்றாக அரசாள வேண்டும்'' என்று சொல்கிறான்.  சொல்-ய பின் துரியோதனன் சம்மதம் பெற்றதாகக் கருதிச் செல்கிறான் ஒரு திட்டத்துடன் இந்த கொடிய எண்ணம் கொண்ட அசுவத்தாமன்.  இதற்குள் கண்ணன் தன் மனக்கண்ணில் நடப்பதைத் தெரிந்து கொள்கிறான்.  சில வேடுவர்களும் வந்து துரியோதனன் இருக்கும் இடத்தைச் சொல்கிறார்கள்.  அந்த இடம் நோக்கி வீமன் விரைந்து கடுமொழி புகன்று துரியோதனனின் தவத்தைக் கலைத்து சண்டையிடுமாறு தூண்டுகிறான். ஆயுதத்தையும் இடத்தையும் கூறும்படி துரியோதனன் கூற கண்ணன் கதை கொண்டு போரிடலாம் எனக் கூற கண்ணன் போர்க்களத்தை நிர்ணயிக்கிறான்.  இதற்குள் பலராமனும் விதுரனும் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார்கள்.  மனம் நொந்த நிலையில் துரியோதனன் நடந்தே புலம்பிக் கொண்டே போகிறான்.  தருமன் இது கண்டு மனம் பொறுக்காமல் அரசாட்சியை மீண்டும் ஏற்குமாறு துரியோதனனை வேண்டுகிறான்.  துரியோதனன் இசையவில்லை.
'எம் கிளைஞர், எம் துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக,
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர்வாழ்வின் இனிது அன்றோ-
அங்கம் எலாம் வேறுபட, ஆறுபடு குரிதியின்வாய்,
கங்கமும் காகமும் கொத்த, களத்து அவிந்தான் எனும் பெயரே'
எல்லோரும் யமுனை நதியைக் கடந்து சமந்தபஞ்சகம் என்னும் இடத்தை அடைகிறார்கள்.  கடுமையான போர் நடக்கிறது.  வீமன் தளர்கிறான்.  இது கண்டு விசயன் கண்ணனிடம் துரியோதனனை வெல்லும் உபாயத்தைக் கூறுமாறு வேண்டுகிறான். துரியோதனன் ஆருயிரைப் போக்க வேண்டும் என்றால் அவன் ஊருவை மோதி புண்பட அடித்து மோதினால் இறந்துவிடுவான் எனத் தெரிவிக்கிறான்.  அவ்வாறே செய்து வீமன் அவன் தொடையில் அடிக்கிறான்.  அது கண்ட அவனது ஆசிரியன் பலராமன் வெகுண்டு தனது ஆயுதமான கலப்பையைத் தூக்குகிறான்.  கண்ணன் பலராமனை அமைதி படுத்தி இருவரின் சாபம் அவ்வாறு உள்ளது.  எனவே சாபம் ப-க்கும்.  நியாயத்திற்கு இடமில்லை என்று கூறுகிறான் கண்ணன். "சிலையின் குரு ஆனவர்தாம் இடு சாபமும் உண்டு; திரௌபதியார் பகர் சாபமும் உண்டு; அதனால், எதிரே படுமே, இவன் வெங் கதையால் அவனே.'' என்று மைத்திரேய முனிவர் கொடுத்த சாபமும் துரௌபதியின் சாபமும் இவன் மரணத்திற்குக் காரணம் என்பதை எடுத்துச் சொல்கிறான் கண்ணன்.  மைத்திரேய முனிவர் பாண்டவருடன் சமாதானமாகப் போகச் சொன்ன போது துரியோதனன் அந்த முனிவரைக் கே- செய்ததால் அவர் சாபம் கொடுத்துள்ளார்.  பாஞ்சா- சபதம் இட்டது அனைவருக்கும் தெரிந்த விடயம்.  மைத்திரேயரும் பெரிய வில்வீரல் எனவே தான் சிலையின் குரு எனக் குறிக்கிறார் வில்-யார்.  பாசறைக்குத் திரும்புகிறார்கள் பாண்டவர்கள்.  தடுக்கிறார் கண்ணன்.  ஒரு வேலை உள்ளது எனக் கூறி ஐவரையும் போர்க்களத்திற்கு வெளியே அழைத்துச் செல்கிறார்.  அசுவத்தாமன் துரியோதன் இருக்கும் இடம் அறிந்து கொண்டு அங்கு சென்று விடிவதற்குள் பாண்டவரை அழித்து வருவேன் எனச் சபதமிட்டுச் செல்கிறேன்.  துரியோதனனும் தன் மணிமுடியை ஒப்புதலுக்கு அடையாளமாகத் தருகிறான். அசுவத்தாமன் இப்படிச் செய்வான் எனத் தெரிந்தே மாயக் கண்ணன் பாண்டவர்களை பாடிவீட்டுக்கு அழைத்துப் போகாமல் வெளியே அழைத்துச் சென்றிருக்கிறான். அசுவத்தாமன், கிருபன், கிருதவர்மன் மூவரும் ஒன்றாக இணைந்து பாண்டவரின் பாடிவீட்டிற்குச் செல்கிறார்கள். பாசறையில் புக முயலும் பொழுது ஒரு பூதம் இவர்களைத் தடுக்கிறது.  இதனால் இந்த மூவரும் அருகிலுள்ள ஆலமரத்தின் அடியில் சென்று ஆலோசனை நடத்துகிறார்கள்.  தன் முடிவில் மாற்றம் இல்லாத அசுவத்தாமன் அங்கேயே சிவபெருமானைத் தொழுது ஒரு கணையைப் பெறுகிறான்.  அந்தக் கணை எக்காரணத்தைக் கொண்டும் மாறாது குறி வைத்த இடத்தை அடைந்தே தீரும்.  இந்த ஆயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டு பாசறைக்குச் செல்கிறார்கள். இதைக் கண்ட பூதம் பயந்து ஓடுகிறது.  உடன் வந்த இருவரையும் வாயி-ல் நிறுத்தி விட்டு உள்ளே புகுந்த அசுவத்தாமன் திட்டத்துய்மனது தலையைத் துண்டிக்கிறான்.  பாஞ்சாலர் அவனை எதிர்க்கிறார்கள்.  அவர்களையும் கொல்கிறான் அசுவத்தாமன்.  ஐவரையும் தேடுகிறான்.  உள்ளே ஐவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் பாண்டவரின் புதல்வர்கள்.  அவர்களை ஒரு கனவு வந்து உசுப்புகிறது.  எழுந்து பார்த்தால் அசுவத்தாமன் கொல்வதற்குத் தயாராக நிற்கிறான்.  அவர்கள் தங்கள் படைக்கலன்களை எடுத்து எதிர்கும் முன்னரே அவர்கள் தான் பாண்டவர்கள் எனத் தவறாக நினைத்த அசுவத்தாமன் ஐவரையும் கொல்கிறான்.  இந்த நேரத்தில் சோழ மன்னன் இதைப் பார்த்து விடுகிறான்.  சோழன் அசுவத்தாமனை எதிர்க்கிறான்.  முனிமகனுடன் மோதுகிறான் சோழன்.  சிவன் கொடுத்த கணையைத் தொடுத்து சோழ மன்னனைச் சாய்க்கிறான் அசுவத்தாமன்.  நேருக்கு நேர் மோதி பல தடவை சோழ மன்னனிடம் தோற்ற அசுவத்தாமன் தற்போது சிவன் வழங்கிய கணை கொண்டு சோழனைச் சாய்க்கிறான்.  உடன் இளம்பாண்டவர் தலைகளைக் கையில் எடுத்துக் கொண்டு விடிவதன் முன்னம் இரவோடு இரவாக துரியோதனன் இருக்கும் இடத்தை அடைகிறான் அசுவத்தாமன்.  தன் வீரத்தைத் தம்பட்டம் அடித்துக்கொண்டு துரியோதனன் எதிரில் கொய்து வந்த அந்த தலைகளைக் கொண்டு போய் வைக்கிறான்.  துரியோதன் அந்த முகங்களைப் பார்க்கிறான்.  சிறுவர் தலைகள்.  சீறுகிறான் அசுவத்தாமனை. "குருகுலத்தின் கொழுந்துகளைக் கொன்றுவிட்டாயே அசுவத்தாமா  -  நீங்காத இப்பழியைப் போக்க உடன் நீ கானகம் சென்று இறைவனைத் தொழுது நீ செய்த பாபத்தைப் போக்கிக்கொள்'' என்று கட்டளையிடுகிறான். குருகுலத்தின் கொழுந்தினைக் கிள்ளினை- வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே!'தீவினை நீங்கத் தவம் செய்' என்கிறார் வில்-யார்.  அவனோடு மற்ற இரு முனி மைந்தர்களும் செல்கிறார்கள்.  சஞ்சயனை அழைத்து தன் தந்தையிடம் நடந்ததைக் கூறும்படி கட்டளையிட்டு துரியோதனன் உயிர் விடுகிறான்.  வியாத முனிவரை அடைந்து அசுவத்தாமனும் மற்ற இருவரும் நடந்ததைக் கூறுகிறார்கள்.  அவரும் கிருபனையும் அசுவத்தாமனையும் தவம் இயற்றக் கூறி கிருதவன்மாவுக்கு விடைகொடுத்து அனுப்புகிறார்.  திருதராட்டிரனுக்கும் காந்தாரிக்கும் சஞ்சயன் சென்று துரியோதனன் உட்பட அனைவரும் மாண்ட நிகழ்ச்சியைக் கூறுகிறார்.  அவர்கள் கண்ணீர் சிந்தி அழுகிறார்கள்.  இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு கண்ணன் ஐவரையும் பாடிவீட்டுக்கு அழைத்து வருகிறான்.  அகோரக் காட்சிகளைக் கண்ட ஐவரும் சீறுகிறார்கள்.  கண்ணன் வீமனையும் விசயனையும் சமாதானப் படுத்துகிறார்.  சிவன் கொடுத்த ஆயுதம் என்பதால் யாரும் தடுக்கமுடியவில்லை என்பதை விளக்கி இதை எதிர்பார்த்தே தான் ஏற்கனவே வாக்களித்தபடி ஐவரையும் காக்க வெளியே அழைத்துச் சென்ற தகவலைத் தெரிவிக்கிறார் கண்ணன். விதியை வெல்ல முடியாது என்று தத்துவமும் பேசினான் சூழ்ச்சிவல்லான் மாயக் கண்ணன்.  பின்னர் எல்லோரும் திரௌபதியை அடைந்து இளம்பாண்டவர் ஐவர் இறந்ததைத் தெரிவிக்கிறார்கள்.  ஐவரையும் தூண்டிவிட்ட திரௌபதியை நோக்கி, "விசயனும் வீமனும் சென்று ஓடிச்சென்ற அசுவத்தாமனை எதிர்த்தால் அவனிடம் உள்ள சிவன் கொடுத்த அத்திரத்தைத் தொடுத்தால் அனைவரும் அழிய வேண்டி வரும்.  எனவே அசுவத்தாமனைத் தொடர்ந்து போய் போரிட வேண்டாம் என அறிவுறுத்துகிறார் கண்ணன்.  பின்னர் தருமர் இறந்த அனைவருக்கும் கண்ணன் உரைப்படி உரிய கடன்களைச் செய்து முடிக்கிறான்.'கன்னன் முதல் யாவருக்கும் குலவும் ஈமத்து அந்தம் உறு கடன் கழித்தி' என்ற உரைப்படி இறுதிக்கடன்களை முடித்து அத்தினாபுரி அடைந்து திருதராட்டிரனையும் காந்தாரியையும் வணங்குகிறார்கள்.  கண்ணன் அங்கிருந்து தன் பணி முடிந்த மனநிறைவுடன் துவாரகைக்கு மீள்கிறார்.

பின்னர் தருமன் அரசாள அத்தினாபுரி மக்கள் மகிழ்கிறார்கள்.

பாரதக் கதை முடிந்தது.

Wednesday, November 17, 2010

MAHABHARATH WAR - 11 DAYS WAR EXPLAINED IN TAMIL

தாத்தா: இன்று முதல் போர்க் காட்சிகள் பற்றி சொல்லப் போகிறேன்.  கண்ணனின் உததரவுப்படி தருமன் போரில் தனக்குத் துணையாக இருக்கும்படி அனைத்து அரசர்களுக்கும் ஓலைகள் அனுப்புகிறான்.  அதே போல துரியோதனும் அனுப்புகிறான். இருவர் புறமும் அரசர்கள் பலர் வந்து திரளுகிறார்கள். யாகசேனன் தன் மகன்கள் திட்டத்துய்மன், திட்டகேது, சிகண்டி ஆகியோருடன் ஓடோடி வந்தார்.  விராட மன்னனும் தான் வாக்களித்தபடி தன் மகனுடன் வந்தார்.  சேர, சோழ, பாண்டியர்களும் வந்தார்கள் - தருமரைக் கண்டார்கள்.  ஐவரின் மைந்தர்களில் கடோற்கசன், இராவான், அபிமன் ஆகியோரும் வந்து சேர்ந்தார்கள். சீனர், சாவகர், மத்திரர், மாளவர், தெலுங்கர், க-ங்கேசர், கன்னடர், மாகதர், துலுக்கர், குச்சரர், ஒட்ர் இப்படி இந்தியாவைச் சுற்றிலும் இருந்த மன்னர்கள் - இந்திய தேசத்தில் இருந்த மன்னர்கள் எல்லாம் திரண்டு வந்தார்கள் தத்தம் படையுடன்.  வந்த மன்னவர்களை வரவேற்று போரின் காரணத்தை எடுத்துரைத்தார் தருமர்.  இந்த படையின் பலம் ஏழு அக்குரோணி என்று சொல்லப்படுகிறது.   இந்த படைக்கு சிவேதனைச் சேனாதிபதி ஆக்குகிறார் தருமர்.  சிவேதன் விராட மன்னனின் மகன்.  மயிலாக மாறி பின்னர் சிவபெருமானைத் துதித்து வரங்கள் பல பெற்றவன்.  ஆயுதங்களும் பெற்றவன்.
இதேபோல துரியோதனன் பக்கம் க-ங்கர்கோன், சோமதத்தன், கௌசிகன், காம்பிலரசன், தெலுங்கர்கோன், போசன், ஆதிகேகயன், கவுடராசன், மாளவன், வளவன், சேரன், பங்களம், குகுரம், சீனம், பப்பரம், கொப்பம், வங்கம், சிங்களம், துளுவம், அங்கம், ஆரியம், திகத்தம், சேதி, கொங்கணம், கடாரம், கொங்கம், கூபகம் முத-ய நாட்டு அரசர்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.  பதினோரு அக்குரோணி சேனை கொண்டதாக அமைந்தது நூற்றுவர் படை.  இவர்கள் பக்கம் போர் புரிய வீடுமர், கிருபன், கன்னன், துரோணர், பகதத்தன் ஆகியோர் இருந்தனர்.  துரியோதனன் வீடுமனைச் சேனாதிபதியாக்கினான்.  பின்னர் போருக்கு உரிய நாளைக் குறிக்க துரியோதனன் வீடுமனிடம் கருத்து கேட்ட போது நாள் குறிப்பதில் வல்லவன் சாதேவன் - பாண்டவரில் இளையவன்.  எனவே அவனிடம் போய் நாள் குறித்து வா என்று அனுப்புகிறார் வீடுமன்.'தளப்பு இலா முகூர்த்தம் வல்லோன் சாதேவன் அல்லது இல்லை; உளப் பொலிவு உடையாய் இன்றே உற்று, அவற் கேண்மின்' என்றான்.களப்ப-க்கு இராவானை அணுகி எப்படியும் அவனிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று கூறுகிறார்.  களப் ப- கொடுக்கப்பட வேண்டியன் வீரனுக்குரிய அவ்வளவு அடையாளங்களையும் கொண்டவனாக இருக்க வேண்டும்.  இராவான் - விசயனின் மகன் அப்படிப்பட்டவன் - எனவே அவனை அணுகி அனுமதி வாங்கும்படி வீடுமன் உரைக்கிறார்.  அது மட்டுமல்ல அவன் ஒரு பகல் பொழுதில் கௌரவர் படைகள் முழுவதையும் வெல்லும் வல்லமை பெற்றவன்.  எனவே, அவர் சொன்னபடி துரியோôனன் முத-ல் சகாதேவனை அணுகி நாள் குறித்துத் தரும்படி கேட்டான்.  சகாதேவனும் அமாவாசை அன்று போரைத் துவக்க மிக நல்ல நாள் எனவும் தெரிவிக்கிறான்.
சூர்யா:  எதிரியிடம் போய் யாராவது நாளைக் குறிப்பார்களா?
தாத்தா: அந்தகாலத்தில் தான் கற்ற வித்தையை முறையாகப் பயன்படுத்துவதில் எல்லோரும் அக்கறை கொண்டிருந்தார்கள்.  எனவே துரியோதனன் அணுகி கேட்டவுடன், நாள் குறித்துக் கொடுத்தான்.  உடனே இராவானை அணுகினான் துரியோதனன்.  தந்தை முறை அல்லவா.  போனவுடன் இராவான் வணங்குகிறான் துரியோதனனை.  வரம் தரவேண்டும் என்று வேண்டுகிறான் துரியோதனன்.  தவறாது தருவேன் என்று அவன் உரைக்க - அவனையே கௌரவர்களுக்காகப் ப- கொடுக்கச் சம்மதம் கேட்கிறான் துரியோதனன்.  இந்த வேண்டுகோளை மறுக்கவே இல்லை இராவான். 'எங்களில்உங்களைப்போல மறுத்து இரண்டு உரைப்பார் இல்லை
கண்டாய்' என்று கூறிஉடன்பட்டனன்.  செய்தி வந்து சேர்ந்தது கண்ணனுக்கு.  இராவான் குறித்த நாளைக்கு துரியோதனன் வரமுடியாதபடி தன் மாயையால் தடுத்து விடுகிறான் கண்ணன்.  பின்னர் இராவான் பாண்டவர்களைப் பார்த்து தகவலைச் சொல்ல வருகிறான்.  அந்த நேரத்தில் கண்ணன் தன்னைக் களப்ப- கொடுக்கும்படி கூறுகிறார்.  களப்ப- கொடுப்பதற்கு உரியவர்கள் இராவானும் கண்ணனுமே என்று கூறி இராவான் ஏற்கனவே கௌரவர்களுக்கு வாக்களித்து விட்டான் என்ற தகவலையும் கூறுகிறார்.  அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த இராவான்,  குறித்த நாளில் துரியோதனன் வரவில்லை எனவும் எனவே தன்னைக் களப்ப-யாகத் தரும்படியும் எட்டுநாட்கள் இந்த போரில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கும்படியும் கூறினான் இராவான்.  உடனே அனைவரும் ஒப்புக் கொண்டனர்.  அப்பொழுது கண்ணன் சொல்லும் வார்த்தைகள் இராவானின் பெருமையை நமக்குத் தெரிவிக்கின்றன. கண்ணன், 'நின்னை அல்லதுமண்ணில்என்னை ஒப்பவர் இல்லை - உன்னைத்தவிர உலகத்தில் என்னை யொக்குந்தன்மையார்வேறு எவரும் இல்லை; (ஆதலின்), நம்மில் ஒருவரேவேண்டும் -(ஒத்த உத்தம விலக்கணமுடைய) நம்மிருவருள் ஒருவரே பலியாகவேண்டும்,'என்றான்.  இராவான் காளி கோவில் முன் தன்னைப் ப- கொடுக்கிறான்.  பாண்டவர் பகடு முத-ய பிற ப-களையும் கொடுத்து இறைவனிடம் வரம் வேண்டி மீளுகிறார்கள்.  கண்ணன் சிவேதனை அழைத்து வஞ்சிப்பூ சூடி படையெடுத்துச் செல்லுமாறு கூறுகிறார்.  சிவேதன் பாண்டவர் சேனையை அணிவகுக்கிறான்.  இந்த நேரத்தில் துரியோதனுக்கு கதைப் பயிற்சி கொடுத்து அவன்பால் பேரன்பு கொண்ட பலராமர் இந்த போரில் தன் தம்பி கண்ணனுக்கு எதிராகப் போர் புரிய விருப்பமில்லாததால் விதுரருடன் புனித யாத்திரை புறப்படுகிறான்.

சூர்யா:  தாத்தா பலராமன் பற்றி இன்னொரு தடவை சொல்லுங்க தாத்தா.  இந்த பலராமர் எப்படி கண்ணனுக்கு அண்ணனாகிறார்?

தாத்தா:  பலராமன் திருமா-ன் எட்டாவது அவதாரம்.  கண்ணனுக்குத் தமையன்.  இவன் வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கருப்பத்தில் ஆறுமாதமும் - உரோகிணியின் கருப்பத்தில் ஆறுமாதமும் இருந்து பிறந்தவன்.  இவனிடம் தான் துரியோதனன் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறான்.  இவன் தன் தங்கை சுபத்திரையைத் துரியோதனனுக்கு திருமணம் முடிக்கக் கருதியிருந்தான்.  ஆனால் கண்ணனோ விசயனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.  இதேபோல தன்மகள் வற்சலையைத் துரியோதனன் மைந்தன் லட்சணகுமாரனுக்கு மணஞ் செய்விக்க எண்ணுகிறான்.  கண்ணன் தந்திரமாக வற்சலையை அபிமன்னனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான்.  இருந்தாலும்  துரியோதனன் மீது தனிப் பாசம் இருந்தது பலராமனுக்கு.  அதனால் தான் துவக்கத்திலேயே நாட்டைத் திரும்பக் கேட்கக் கூடாது என்று தடுத்துப் பார்க்கிறான்.  கண்ணனைப் பார்க்க மனமில்லாமல் - கண்ணனிடம் கூறாமலேயே பலராமன் விதுரனுடன் தீர்த்தமாடச் செல்கிறான்.  சரி கதைக்கு    துரியோதன் வீடுமனைப் போர்த்தளபதி ஆக்கியவுடனேயே யார்யார் எந்த இடத்தில் நின்று போர் புரிய வேண்டும் என்று திட்டமிடுகிறார் வீடுமன்.  அதில் கன்னன் படையின் பின்னணியில் இருக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.  முன்னணி வீரராகத் தன்னை மதித்து நிறுத்தவில்லை என்ற கோபத்தில் வீடுமன் மடியும் வரை இந்தப் போரில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்து வெளியேறுகிறான்.  வில்-புத்தூரார் பாண்டவர் படை எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் உயிருள்ள படை என்று நமக்கு எடுத்துச் சொல்கிறார்.  செங்கண்மால் கண்ணன் அந்தப் படையின் உயிர்.   தருமன் மார்பு.  சிவேதன் ஆனனம். (முகம்).  வீமனும் விசயனும் இரு புயங்கள்.  நகுல சகாதேவர்கள் தாள்கள்.  பிற மன்னர்கள் பிற அவயவங்கள்.  இப்படி பாண்டவர் சேனை உயிருள்ள ஒரு வடிவத்தை ஒத்திருந்தது என்கிறார்.  அங்கதேச மன்னன் கன்னன் போர்க்களத்தில் இருந்து தன்னுடைய அகந்தை காரணமாக வெளியேறியது கௌரவப் படைகளை பெரிதும் பாதிக்கத் தான் செய்தது.
சூர்யா: அது என்ன அங்க தேசம் என்ற பெயர்?

தாத்தா: சிவனின் நெற்றிக் கண்ணனின் நெருப்புக்கு இரையாகி எரிபட்ட மன்மதனின் அங்கம் விழுந்த இடம் என்பதால் அங்கதேசம் என்று பெயர்.  சரி கதைக்கு வருவோம்.  எடுத்த எடுப்பிலேயே துரியோதனன் வீடுமனிடம் எத்தனை நாளில் போர் முடியும் என்று கேட்கிறான்.  பேருந்து கிளம்பும் போது ஓட்டுநரிடம் இந்தப் பேருந்து எத்தனை மணிக்குப் போய் இன்ன இடத்திற்குச் சேரும் என்று கேட்டால் சில ஓட்டுநர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும்.  அதுபோல் வீடுமருக்கும் கோபம் பொங்கியது.  ஆனால் பதிலை அமைதியாகக் கூறினார்.  பாண்டவர் படையை ஒரு பக-ல் நான் வெல்வேன் - துரோணர் என்றால் முப்பக-ல் வெல்வார் - கன்னன் என்றால் ஒரு நாளிகையில் வெல்வான் - விசயன் ஒரு கணத்தில் இந்தப் படைகளை மட்டுமல்ல வானவர் படை வந்தாலும் அவர்களையும் சேர்த்து வெல்வான் என்று பதில் சொல்ல துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான்.  போர்க்களத்திற்கு வந்த விசயன் எப்போதும் போல முத-ல் கலங்கினான்.  தன்னுடைய உறவினர்கள் - தனக்கு வித்தை சொல்-க் கொடுத்த ஆசான்கள் - இப்படிப் பலவகையில் தனக்குத் தெரிந்த அனைவரும் எதிர்வரிசையில் இருப்பதைக் கண்டு பின்னடைந்தான்.  கண்ணன் அப்போது மிகச் சுருக்கமாக போர் ஏன் நடக்கிறது?  போரே நடக்கவில்லை என்றாலும் அவர்கள் காலத்தின் கட்டாயத்தால் மரணத்தை எதிர் கொள்ள வேண்டியவர்கள் - அரசநெறிப்படி போர் செய்வதும் போரின் போது எதிரிகளை மாய்ப்பதும் குற்றமல்ல என்றெல்லாம் எடுத்துரைக்கிறான்.  வில்-பாரதத்திலே - வியாசபாரதத்தில் கூறப்பட்ட பல நிகழ்வுகள் தவறாமல் சொல்லப்பட்டுள்ளன - ஆனால் சில நிகழ்வுகள் சொல்லப்படவில்லை - நச்சுப்பொய்கையில் அறக்கடவுள் கேட்ட கேள்விகளிலேயே பல விடயங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன.  அதேபோல வியாசபாரதத்தில் உள்ளதாகக் கூறப்படும் பகவத்கீதை என்னும் பகுதி வில்-பாரதத்தில் இல்லை.  வில்-புத்தூரார் மட்டுமல்ல ஆழ்வார்களும் பகவத்கீதை என்ற தொடரை எங்கும் பயன்படுத்தவில்லை.

சூர்யா: ஏன் தாத்தா அப்படி?

தாத்தா: ஒன்று பகவத் கீதை என்ற தொடரே வியாசபாரதத்தில் இல்லாமல் இருந்து பின்னர் பல சமய காரணங்களைக் கருதி சேர்க்கப்பட்டிருக்கலாம்.  இப்போது நமக்கு வழங்கப்படுகிற பகவத் கீதை என்னும் புனித நூல் எவ்வளவு பாடல்கள் உள்ளது என்று கேட்டு அவ்வளவு பாடலையும் ஒரே நாளில் படித்துப் பார்க்க முடியுமா என்று யோசித்தாலே சிறிது கடினமான விடயமே.  போர்க்களத்தில் எல்லோரும் போருக்குத் துடித்தெழுந்து முரசு கொட்டும் போது இவ்வளவு பாடல்களை ஒரு தரப்பினர் கேட்டுக் கொண்டிருந்தால் எதிர்தரப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டா இருக்கும்?  உண்மையிலேயே அந்தப்பகுதி இருந்திருந்தால் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் அது அடிக்கடி சொல்லப்பட்டிருக்கும்.  ஆழ்வார்களும் வில்-புத்தூராரும் அதை சொல்லாததில் இருந்தே எனக்கு ஒரு சந்தேகம் தான்.  நான் ஏற்கனவே சில நூல்களைப் படித்துள்ளேன்.  அதில் முக்கியமானது அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய "பகவத்கீதை'' என்னும் நூல்.  அதிலே அவர் அந்ப் பகுதி பின்னால் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்ட பகுதி என்பதை மிக ஆணித்தரமாகச் சொல்-யிருப்பார்.  கருத்தை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நம்முடைய முடிவு.  சரி - கதைக்கு வருவோம்.  இந்த வில்-பாரதத்தில் ஆறு பாடல்களிலே அந்த பகவத்கீதை தத்துவம் முழுவதும் எடுத்துச் சொல்லப்படுகிறது.  எனவே ஆறு பாடல்களையும் ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.  "'யான் மலைவுறேன், இனி' எனா, அன்று வசுதேவன் மகனோடு உரைசெய்தான்; அமரில் அவனும்  இவனோடு உரை செய்வான்''.  கண்ணன் விசயனின் மயக்கத்தைத் தெளியவைக்க சொல்லும் பாடல்கள் இதோ.
'மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்;
தாயொடு, தந்தை, மக்கள், தாரம், என்று இவர்பால் வைத்த
நேயமும் அவன்தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்.
விசயா - நீ உள்ளதை இல்லாததாகவும் - இல்லாதததை உள்ளதாகவும் காட்டக்கூடிய மாயை என்னும் சக்திக்கு ஆட்பட்டு விட்டாய்.  இதனால் உன்னிடம் இயற்கையாக உள்ள தத்துவ அறிவு மறைந்துவிட்டது.  இப்பொழுது விபரீத ஞானம் தலையெடுத்துள்ளது.  எனவே தான் ஆன்மா என்பது உள்ளது என்பதை மறந்து தேகத்தின் மீது நம்பிக்கை வைத்து தாய்-உடன்பிறப்பு-நண்பன்-ஆசான் என்ற நினைவுகள் வந்துள்ளது.   இவையெல்லாம் பொய்யபிமானம்.






குயின்ற வைம்பொறிவாய் நின்று குறித்த வைம் பொருளுந்தானே அயின்றுமுக்குணங்களோடுமறுவகைப்படைகளோடும் பயின்றரசாளுமந்தமனமெனும்பகைவனாங்குத்
துயின்றபோதொளித்துநின்றதோன்றலுந்தோன்றுங் கண்டாய்.

நம் சிந்தை ஐம்புலன்களுக்கு ஆட்பட்டு - முக்குணங்களிலே மயங்கி - மனம் போன போக்கில் சிந்தனை செல்லாமல் அடக்கி வைத்தால் தத்துவ ஞானம் இருக்கும்.  அது உட்பகைகளாலும் வெளிப்பகைகளாலும் வெல்லப்பட்டால் விவேகம்  அகன்றுவிடும்.  இவைகளில் மயங்கால் சிந்தனை தெளிவாக இருந்தால் தத்துவஞானம் இருக்கும்.
ஐம்பூதங்கள் என்பவை நிலம்-நீர்-தீ-காற்று-ஆகாயம்
இதிலே ஐம்பொறிகள் மெய்-வாய்-கண்-மூக்கு-செவி
ஐம்புலன்கள் ஊறு - சுவை ஸ்ரீ ஒளி - நாற்றம் - ஓசை
முக்குணம் என்பது சத்துவம் - ரஜஸ் - தமஸ்
அறுவகைச் சேனை - கோபம், உலோபம், மோகம், மதமாற்சரியம் போன்றவை



    
அந்தநல்லறிவன்றன்னையறிந்தவரறிஞராவார் தந்தையால்வகுக்கப்பட்டசராசரப்பொருள்கடோறும். வந்தவான்றீம்பானெய்போலுயிர்க்குயிராகிவாழும் பந்தமதுணர்ந்துநேரேபார்க்குங்காற்பகையார்நண்பார்.
  

அந்த தத்துவஞானம் என்னும் தலைவனை அறிந்தவனே சிறந்த சிந்தனையாளர்கள் - அறிவாளிகள்.  இறைவனால் படைக்ப்பட்ட அசையும் அசையாப் பொருட்களிலே பா-லே நெய் உள்ளது போல் எல்லா இடத்திலும் ஆன்மாவும் நல்லறிவும் இருக்கும்.இருக்கத்தான் செய்யும். அப்படி அறிந்தால் பகையோ நட்போ இவ்வுலகில் கிடையாது

உம்பருமுனிவர்தாமும்யாவருமுணராவொன்றை இம்பரின்றுனக்குநானேயிசைவுறவுணர்த்தாநின்றேன் ஐம்பெரும்பூத்தானுமமைத்தனவுடலம்யார்க்கும் நம்பனுமொருவனுள்ளேஞானியாய்நடத்துகின்றான்.
இதை தேவர்களும் - முனிவர்களும் ஏன் எல்லோரும் முறையாக அறியாத ஒன்று தான். இருப்பினும் மாயைக்கு ஆட்பட்டு மயங்கி உள்ள உனக்கு இவ்வொழுது அதை உணர்த்துகிறேன்.  ஒப்பற்ற இறைவன் என்பவன் ஐம்பொறிகளின் உள்ளே இருக்கிறான்.  எல்லாவற்றையும் கடந்த இறைவன் உள்ளே இருப்பதால் அவன் பெயர் கடவுள்.  அவனே ஞானியாய் இருந்து நம்மை நடத்துகிறான். - ஆட்டுவிக்கிறான்.  நாம் ஆடும் பம்பரம் போன்றவர்கள் தாம்.
    
                      
என்னைநீபுகலக்கேண்மோவெங்குமாயாவுமாகி மன்னியபொருளும்யானேமறைக்கெலாமுடிவும்யானே உன்னையான்பிறிவதில்லையொருமுறைபிறிந்துமேனாள் நன்னிலாவெறிக்கும்பூணாய்நரனுநாரணனுமானோம்.
  
விசயா - எல்லா இடத்திலும் பொருந்தி - எல்லாப் பொருளுமாய் - எப்போதும் அழியாமல் உள்ள பரம்பொருள் நானே தான்.  உன்னை நான் எப்போதும் பிரிவதில்லை.  ஒரே ஒருமுறை நான் நாராயணனாகவும் நீ நரனாகவும் அவதரித்துள்ளோம்.  அப்போது நான் ஆசானாக இருந்து நீ மாணாக்கனாக இருந்தாய்.  அதே நிலை தான் இப்போதும்.  இதை திருவாய்மொழியிலே மிக நன்றாக விவரித்துள்ளார் ஆழ்வார்.
 
."செய்கின்ற கிறியெல்லாம் யானே யென்னும் செய்வானின்
றனகளும் யானே யென்னும், செய்துமுன் னிறந்தவும் யானே யென்னுஞ் செய்கைப்
பயனுண்பேனும் யானே யென்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்"
என்றும், "உற்றார்க ளெனக்கில்லை யாருமென்னும் உற்றார்க ளெனக்கிங்கெல்லாரு
மென்னும், உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும் உற்றார்களை
யழிப்பேனும் யானேயென்னும்" என்றுந் திருவாய்மொழியிற் கூறியுள்ளவற்றின்
கருத்துக்களை இங்கே யுணர்க. கொல்பவனும் கொல்லப்படுபவனும்
கொலைத்தொழிலும் கொல்விப்பவனும் எல்லாம் நானே யாதலால், நீ உன்னைக்
கொல்பவனாகவும், சுற்றத்தவரைக் கொல்லப்படுபவராகவும் மாறுபாடாக நினைத்துப்
பந்து வதத்தைப் பற்றிச் சிறிதுஞ் சிந்திக்கவேண்டா'' என்று சொல்வதாக அந்தப் பாடல் உள்ளது.
  
பின்னொருபிறப்பின்யாமேயிராமலக்குமப்பேர்பெற்றோம் இந்நெடும்பிறப்பினீயும்யானுமாயீண்டுநின்றோம் நின்னிடைமயக்குமிந்தநேயமுமொழிகவென்று தன்னிலையவற்குக்காட்டித்தத்துவந்தெளிவித்தானே.
    
மற்றொரு பிறவியிலே நான் இராமனாக - நீ இலக்குவனாக இருந்தாய். இந்த அவதாரத்திலே கண்ணனாக நான் - விசயனாக நீ என உள்ளோம்.  எனவே நான் உரைத்தரைப் புரிந்து கொண்டு நண்பர் - உறவினர் என்ற மயக்கத்தி-ருந்து விடுபடுவாயாக எனக் கூறி தெளிவித்தான் கண்ணன்.  ஒருவாறு தெளிந்தபின் கண்ணன் பாண்டவர்களுடன் வீடுமனைச் சந்தித்து வணங்கி - "நீங்களே இங்கு வந்து போர் புரிந்தால் உங்களை நாங்கள் வெல்லமுடியுமா? என்று கேட்க அவர் தன்னை வெல்லும் உபாயத்தை - சிகண்டியை வைத்துத் தன்னை வெல்லமுடியும் என்று கூறுகிறார்.  பின்னர் ஐவருடனும் துரோணரை வணங்கி "நீங்கள் மனது வைத்தால் தான் இந்த ஐவரும் வென்று அரசாள முடியும் - உண்மை வெல்லும் - உங்கள் மாணவன் விசயன் வெல்ல முடியும்'' என்று கூறியவுடன் அவரும் தான் மாளும் வகையை உரைக்கிறார்.
"என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று, வானில்
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின், சூரன்
தன் மகன் மகனே! பின்னைச் சாபம் ஒன்று எடுக்கிலேனே.''
துசாபம் என்றால் வில்.  என் கையில் வில் இருக்கும் வரை என்னை யாராலும் வெல்லமுடியாது.  ஆனால் என் மகன் எனக்கு முன்னே இறந்தான் என்று உண்மைக்குப் பெயர்போன ஒருவன் கூறினால் அடுத்த நொடியே நான் வில்லை எடுக்க மாட்டேன்.  அந்த நேரத்தில் என்னைக் கொல்ல முடியும் என்று தன் முடிவை தானே உரைக்கிறான்.  வேள்வி ஒன்றில் என்னைக் கொல்வதற்கென்றே திட்டத்துய்மன் உதித்துள்ளான்.  இந்த நேரத்தில் - என் கையில் வில் இல்லாத நேரத்தில் - அவன் என்னைக் கொல்ல முடியும் என்கிறார் துரோணர். " சமரிடைத் திட்டத்துய்மன் வன்புடன் எனக்குக் கூற்றாய் மலைகுவன்; மலைந்த அன்றே, நின் பெருங் கருத்து முற்றும்; ஏகுவீர், நீவிர்!' ''. இவ்வளவும் முடிந்த பிறகு மாயோன் வியூகம் அமைத்து நிற்கும்படி பாண்டவசேனைக்குக் கட்டளையிடுகிறான்.  போர் தொடங்குகிறது.  தேர்ப்படையும் தேர்ப்படையும் மோதின.  வேழப்படையும் வேழப்படையும் மோதின.  வாள்வீரர்களும் வாள்வீரர்களும் மோதினார்கள். வேல்கள் வைத்துக் கொண்டிருந்தவர்கள் வேல் வைத்துக் கொண்டிருந்தவர்களுடன் மோதினார்கள்.  மன்னர்கள் மன்னர்களோடு மோதினார்கள்.  அமைச்சர்கள் அமைச்சர்களோடு மோதினார்கள்.

கொங்கர், போசலர், போசர், சிங்களர், குகுதர், ஆரியர், துளுவரும்,
கங்கர், சோனகர், யவனர், சீனர், கலிங்கர், தத்தர், தெலுங்கரும்,
வங்கர், கோசலர், தமிழர், குண்டலர், ஒட்டர், மாளவர், மகதரும்,
இங்கும் அங்கும் அணிந்து நின்றவர், எதிர் முனைந்தனர் இகலியே.
விசயன் வீடுமனுக்கு எதிராகப் போரிடுகிறான்.  வீடுமன் ச-க்கும் அளவுக்கு அவனுடன் வந்தவர்களை வீமனும் அபிமன்னும் கணைகளால் தாக்குகிறார்கள்.  சல்-யன் வீசிய வேலால் விராட மன்னன் மகன் உத்தரன் மடிகிறான்.  உடனே வீமன் வெகுண்டு துரியோதனனுடன் பொருது அவனது வில்லை ஒடித்து தாக்குகிறான்.  விராடனின் மகன் சிவேதன் ஈசன் வழங்கிய வில்லோடு தோன்றி சல்-யனைத் தாக்குகிறான்.  உடனே துரியோதனன் வீடுமனையும் பல மன்னர்களையும் அனுப்பி சல்-யனைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்கிறான்.   சிவேதனை எதிர்த்து நிற்க யாராலும் முடியவில்லை.  இந்த நேரத்தில் வீடுமன் சிவேதனைப் பார்த்து அவன் சிவன் வழங்கிய வில் வைத்திருப்பதால் தோற்கடிக்கமுடியவில்லை என்பதைப் புரிந்து கொண்டு "உனக்கு வில் தவிர வேறு ஆயுதம் வைத்து போர் புரியத் தெரியாதா?'' என்று கே-யாகப் பேசுகிறார்.  உண்மையைப் புரிந்து கொள்ளாத சிவேதன் வாள் கொண்டு பொருத வருகிறான்.  அதற்குள் வீடுமர் அவனது கையைத் துண்டித்து உயிரையும் போக்குகிறார்.  முதன்முத-ல் போர்நியதி மீறப்படுகிறது.  அழகாக வில்-புத்தூரார் கூறுகிறார். " வாளின் எதிர் வெஞ் சிலை வளைத்து, வய வீரன் தோள் இணையில் ஒன்று துணியக் கணை தொடுத்தான்''.  மகன்களை இழந்த விராடனுக்கு கண்ணனும் தருமனும் சமாதானம் சொல்கிறார்கள்.  விராடனோ தன் உயிரும் தருமனுக்காக உள்ளதே என மறுமொழி கூறுகிறான்.  அடுத்த நாள் போருக்கு கண்ணன் திட்டத்துய்மனைச் சேனாதிபதியாக நியமிக்கிறார்.  முதல் சேனாதிபதி சிவேதன் களத்தில் ப-யாகி வீரசுவர்க்கம் அடைந்து விட்டாரே.
இரண்டாம் நாள் போர் துவங்குகிறது.  தருமர் தன் தம்பியரோடு திட்டத்துய்மனைத் தளபதி ஆக்கி களத்திலே நிற்கிறார்.  வீடுமன் அணிவகுத்து துரியோதனனோடு நிற்கிறார். திட்டததுய்மன் துரோணரோடு பொருது தோற்று தப்பித்தால் போதும் பிழைத்தால் போதும் என்று ஓடுகிறான்.  சேனைத் தலைவன் நிலைகண்டு வீமன் உடனே விரைகிறான் அந்த இடம் நோக்கி.  அப்போது வடக-ங்கத்து மன்னன் சக்கரதேவன் என்னும் மன்னன் வீமனைத் தடுத்துப் போரிடுகிறான். வீமன் தன் வில் கொண்டு சக்கரதேவனையும் அவனது மைந்தர்களையும் துவம்சமாக்கி கொல்கிறான்.
சூர்யா:  தாத்தா வீமன் என்றால் கதையோடு தானே வருவார்? நீங்க வில்லால் தாக்கினார் என்றல்லவா கூறுகிறீர்கள்?

தாத்தா: ஆமாம்டா நானும் சிறுவனாக இருந்த போது அப்படித்தான் நினைத்தேன்.  ஆனால் வீமனும் வில்வித்தையில் தேர்ந்தவன் தான்.  துரியோதனன் தம்பிகளை வில் வளைத்தே கொல்கிறான் வீமன்.  நம்முடைய தவறான எண்ணத்தை நாம் முத-ல் கைவிடவேண்டும்.  கதைக்கு வருவோம்.  முன்னணியில் உள்ள வேழப்படையை கலக்கி பல யானைகளை வீழ்த்துகிறான் வீமன்.  நிலைமையைக் கண்ட வீடுமர் வீமனுடன் மோத விரைகிறார்.  உடனே அபிமனும் வீடுமனை வளைத்துப் போர் தொடுக்கிறான்.  வீமனுடன் போரிட பல மன்னர்களை ஏவுகிறான் துரியோதனன்.  உடனே விசயன் அவ்விடத்திற்கு வந்து வீமனோடு தோள் கொடுத்து நிற்கிறான்.  எல்லா அரசர்களும் அஞ்சி பின்னிடுகிறார்கள்.  சூரியன் மறைகிறான்.  இரண்டாம் நாள் போர் முடிகிறது.  பின்னிட்டு வந்த அரசர்களைத் துரியோதனன் அச்சுறுத்துகிறான்.
மூன்றாம் நாள் போரில் வீடுமன் கருட வியூகம் அமைக்கிறார்.  கண்ணன் தானைத் தலைவனை அழைத்து அர்த்தசந்திர வியூகம் அமைக்க உத்தரவிடுகிறார்.  விசயனையும் அபிமனையும் வீடுமனும் பிறரும் வளைத்துத் தாக்குகிறார்கள்.  வீமனை துரியோதனன் தன் துணைவர்களுடன் தாக்குகிறான்.  கடோற்கசன் தன் தந்தைக்கு உதவ வருகிறான்.  அவன் எறிந்த அம்பு துரியோதனனை காயப்படுத்துகிறது.  உணர்வு அற்று வீழ்கிறான் துரியோதனன்.  அவன் தேர்ப்பாகனை அபிமன் வேல் எறிந்து மாய்க்கிறான்.  செய்தி கேட்ட வீடுமன் விசயனை விடுத்து ஓடிவருகிறார்.  துரியோதனனை எடுத்துத் தேரில் கிடத்தி மூர்ச்சை தெளிவிக்கிறார்.  கோபமடைந்த வீடுமன் கடும்போர் செய்து அபிமனையும் கடோற்கசைனையும் விரட்டுகிறார்.  விசயன் வாளாவிருக்கிறான்.  சினம் கொண்ட கண்ணன் தேரி-ருந்து இறங்கி தன் ஆழியுடன் விரைகிறார் வீடுமனைச் சாய்க்க.  இது கண்ட வீடுமன் தன் தேரி-ருந்து இறங்கி கண்ணனைத் துதிக்கிறார்.
'ஆரண கற்பித! மாதவ! அச்சுத!
ஆழியிடைத் துயிலும்  காரண! சிற்குண ரூப!
மலர்க் கொடி காதல் மனத்து உறையும்  நாரண! அற்புத!
வானவருக்கு ஒரு நாயக! நிற் பணியும்  வாரணம் முத்தி விசாலதலத்திடை வாழ்வுற வைத்தவனே!  
'ஆவி அழித்தனை, தூணில் உதித்து,
அடல் ஆடகனைத் தலை நாள்;
மாவலியை, சிறு மாண் உருவத்துடன்,
வார் சிறை வைத்தனையால்;
ஏவில் அரக்கனை வீழ அடர்த்தனை;
யான் ஒர் இலக்கு எனவோ,  நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி                   எடுத்ததுவே    
 'வான் நரகில் புகுதாமல் எனக்கு உயர் வான் உலகைத் தருவான்,
நீ நினைவு உற்றது போன பிறப்பில் என் நீடு தவப் பயனே;
யானும் இனிப் பிறவாமல் அளித்தருள்; ஈச!'' பலவாறு துதித்தான் வீடுமன்.  விசயன் கண்ணனைத் தொழுது தான் நல்லமுறையில் போர்புரிவதாக வாக்களித்த பிறகு சினம் தணிந்து கண்ணன் தேர் ஓட்ட வருகிறான்.  விசயனின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கௌரவப் படை பின்னடைகிறது.  கதிரவன் மேற்கே மறைகிறான்.  மகிழ்ச்சியில் திளைத்து பாண்டவர் படை தூங்கவில்லை.  கொதிப்பில் உறங்கவில்லை கௌரவர் படைகள்.
நான்காம் நாள் போரில் வீமன் பழையபடி வேழப்படையைத் துவம்சம் செய்கிறான்.  துரியோதனன் தன் தம்பிகளோடு வந்து தடுக்கிறான்.  வீமன் வெகுண்டு போரிடுகிறான்.  வீமன் கணையால் துரியோதனன் தளர்கிறான்.  சகுனி மற்றும் சல்-யன் வந்து துரியோதனனை எடுத்து அணைத்து அழைத்துச் செல்கிறார்கள்.  வீமனின் கணையால் துரியோதனன் தம்பியர் ஐவர் மாளுகிறார்கள்.  இப்படியாகத் துரியோதனனின் சேனைகள் சிதறுகின்றன.  உடன் பகதத்தன் வந்து அனைவரையும் தேற்றி வீமனுடன் மோதுகிறான்.  இந்த பகதத்தன் என்பவன் நரகாசுரன் மகன்.  நரகாசுரன் மரணமடைந்த பிறகு கண்ணனால் இளமையில் வளர்க்கப்பட்டவன்.  இவன் அரக்கர்களுக்கு எதிராக இந்திரனுக்கு உதவி புரிந்தவன்.  மிக்க ஆற்றல் உடைய வீரன். திருமால் - நிலமடந்தைக்குப் பேரன் அல்லவா.  பகதத்தன் வரவால் பாண்டவ சேனை தளர்வதைக் கண்ட கடோற்கசன் அங்கு வருகிறான். பற்பல மாய வடிவம் கொண்டு பகதத்தனைத் தாக்குகிறான்.  இந்த போரில் கடோற்கசன் வெற்றி பெறுகிறான்.  பகதத்தன் தப்பி ஓடுகிறான்.  சூரியனும் மறைகிறான்.  மைந்தர் ஐவர் மாண்டதைக் கேட்ட காந்தாரி அழுது சோர்கிறாள்.  பலவகையில் புலம்புகிறாள்.
ஐந்தாம் நாள் போரில் விசயன் கண்ணனுடன் புறப்பட்டு வீடுமனை அடைகிறான்.  வழியிலேயே க-ங்க மன்னன் தடுக்கப் பார்க்கிறான்.  தன் கணையால் விசயன் அவனைப் புண்ணாக்குகிறான்.  சல்லடையாகத் துளைக்கிறான்.  தடுக்க ஓடோடி வருகிறார் வீடுமன்.  அவர் வில்லைத் துணிக்கிறான் விசயன்.  துரியோதனன் தன் தம்பிகளுடன் வந்து வீமனுடன் போரிடுகிறான்.  வீமனின் அம்பால் துச்சாதனன் தோற்று ஓடுகிறான்.  துரியோதனன் ஓர் அம்பு பட்டு அல்லற்படுகிறான்.  உடனே பூரிசவா என்னும் மன்னன் வந்து வீமன் மீது இரு கணைகளை விடுகிறான்.  உடனே சாத்தகி வந்து பூரிசவாவுடன் போர் தொடுக்கிறான்.  கதிரவன் மேற்குத் திசையில் சாய்கிறான்.  அன்றைய போர் முடிகிறது.
ஆறாம் நாளன்று திட்டத்துய்மன் மகரவியூகம் வகுத்து களத்திலே நிற்கிறான்.  வீடுமன் கிரவுஞ்ச வியூகம் வகுத்து எதிர்க்கிறார்.  துரோணர் வீமனோடு போர் புரிய வருகிறார்.  ஆசானது தேர்க்குதிரைகளையும் தேர்ப்பாகனையும் அழிக்கிறான் வீமன்.  இந்த நேரத்தில் சல்-யன் வீரம் பேசிக் கொண்டு வீமனை எதிர்க்கிறான்.  வீமன் அவனையும் தோற்கடித்து விரட்டுகிறான்.  இதைக் கண்ட துரியோதனன் தன் மாமன் சகுனியுடன் வந்து வீமனை எதிர்க்கிறான்.  வீமன் கணையால் பல மன்னர்கள் மடிய, துரியோதனன் தன் வ- இழந்து பின்னிடுகிறான்.  இந்த நேரத்தில் விகன்னன் வீரர் பலருடன் வந்து அபிமனோடு மோதுகிறான்.  தேர் இழக்கிறான்.  சித்திரசேனன் தேரில் தத்தி ஏறுகிறான்.  அபிமன் அம்பினான் விகன்னனது உடல் சிதையுமாறு கணை தொடுக்கிறான்.  கௌரவர் படை பின்வாங்குகிறது.  சூரியன் மறைகிறான்.  அன்றைய போர் முடிகிறது.  பாண்டவர் அனைவரும் அபிமன் வீரத்தைப் பாராட்டிப் புகழ்கிறார்கள்.
ஏழாம் நாள் போர்.  கண்ணன் பாம்பு வியூகம் அமைக்கக் கட்டளை இடுகிறான்.  வீடுமன் சகட வியூகம் அமைக்கிறான்.  பாண்டிய மன்னனும் துரோணரும் மோதுகிறார்கள்.  பாண்டியன் தோற்கிறான்.  உடனே பாண்டியனைக் காக்க கடோற்கசன் விரைகிறான்." மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான், மாறன், மீனவன், வழுதி, பஞ்சவன், அன்று பஞ்சவர்க்காகவே உடன்று, அந்தணற்கு உடைந்து, அஞ்சி ஓடினான'' என்கிறார் வில்-யார்.  ஏழாம் நாள் போரில் விசயனாலும் வீடுமனாலும் பல வீரர் மாள்கிறார்கள்.  சகுனி மற்றும் சல்-யனை வெல்கிறான் வீமன்.  ஏழாம் நாள் போர் நிறைவு பெறுகிறது.
எட்டாம் நாள் போரில் வீடுமர் பீடுநடை போடும் சூசி வியூகம் எனப்படும் குதிரைவியூகத்தை அமைக்கிறார்.  கண்ணன் சகட வியூகத்தை அமைக்கச் சொல்கிறார். கெட்ட எண்ணம் கொண்ட துரியோதனன் மிகப்பெரிய படையுடன் வந்து வீமனை எதிர்க்கிறான்.  சினம் கொண்ட வீமன் கணைமழை பொழிகிறான்.  துரியோதனனின் தம்பியரில் எண்மர் வானுலகம் செல்கிறார்கள்.  வீடுமன் வந்து கணைகளைத் தடுத்து துரியோதனனைத் தேற்றுகிறார்.  கடோற்கசனும் இராவானும் பல வடிவு கொண்டு போர் செய்து கௌரவர் சேனையைக் கலக்குகிறார்கள்.  பகனது தம்பி அலம்புசன் என்னும் பெருவீரன் வீமன் மேல் வெகுண்டு மோதுகிறான்.  அலம்புசன் பின்னர் இராவானுடன் போரிட்டுத் தோற்கிறான்.  இராவான் பாம்பின் மகன்.  எனவே பல பாம்புகள் வடிவெடுத்து நூற்றுவர் சேனையை மிரட்டுகிறான்.  பாம்பென்றால் படையும் நடுங்குமே. தோற்றோடிய  அலம்புசன் திரும்பவும் கருடன் வடிவெடுத்து வந்து இராவானை வாளினால் கொல்கிறான்.  துரோணரும் அசுவத்தாமனும் சேர்ந்து பாஞ்சாலர் மேல் அம்பு தொடுக்கிறார்கள்.  அபிமன் மற்றும் வீமன் வந்து இராவானைக் கொன்ற படைகள் மீது போர் தொடுக்கிறார்கள்.  துரியோதனன் தன் தம்பியருடன் வந்து தடுக்கிறான் வீமனை.  வெகுண்ட வீமன் கணைமழை தொடுத்து துரியோதன் தம்பியருள் ஏழுபேரை மாய்க்கிறான்.  எட்டாம் நாள் போர் முடிகிறது.  கண்ணன் பாண்டவரை இராவான் மறைவு குறித்து வருந்த வேண்டாம் எனவும் அவன் களப்ப-க்கு ஆளான போதே சில நாள் அதாவது எட்டு நாள் வரை போரைக் காண ஆவல் கொண்டதால் அவன் போர்க்களத்தில் இருந்ததாகவும் அது தன் மாயையால் நடந்தது என்பதையும் கூறி வருத்தப்பட வேண்டாம் என ஆறுதல் கூறுகிறான்.
"அன்றே களத்தில் பலி ஊட்டிய ஆண்மை வீரன்
இன்றே இறந்தான்; இதற்கு உன்னி, இரங்கலணிர்' என்று,
ஒன்றே மொழியும் உரவோன் முதல் ஐவருக்கும்
குன்றே கவித்த குடைக் கோவலன் கூறினானே.''
இத்துடன் எட்டாவது நாள் போர் முடிகிறது.

======================================================

சூர்யா: நேறறு இராவான் இறந்து விட்டானே தாத்தா.  ஏமாந்துட்டானே?
தாத்தா: இல்லேடா.  அவன் களப்ப-க்கு ஆளானவன்.  கண்ணனிடம் எட்டுநாள் போர்க்காட்சியைக் காண வரம் பெற்று இந்தப் போரைப் பார்த்தான்.  பங்கும் கொண்டான்.  ஆனால் சொன்ன சொல் தவறியவன் அல்லவா? துரியோதனனிடம் களப்ப-க்கு ஒப்புக்கொண்டு நேரத்துக்கு வரவில்லை என்ற காரணம் காட்டி பாண்டவர்களுக்கு களப்ப- ஆனவன் தானே.  எனவே இறைவனின் வரம் தவறாது.  ஒரு இடத்துக்கு குறித்த நேரத்துக்கு வர ஒப்புக் கொண்டால் போகவேண்டும்.  போகாதது துரியோதனன் தவறு.  அதனால் பாரதப் போரில் தோற்கிறான்.  இப்படி நியாயங்களும் நியாயங்களும் - தவறுகளும் தவறுகளும் மோதிக் கொள்ளும் களம் தான் இந்தப் பாரதப் போர்.  முதல் நாளிலேயே பார்த்தோமே?  சிவேதன் - பாண்டவர்களின் படைத் தளபதி - சிவனின் வில்லைப் பெற்றவன் - அந்த வில் இருக்கும் வரை அவனைத் தோற்கடிக்க முடியாது.  வீடுமன் உனக்கு வில்லைத் தவிர வேறு ஆயுதம் தெரியாதா? என்று கேட்டவுடன் அகந்தையும் சினமும் ஒன்று சேர வாளை எடுத்துப் போரிட வருகிறான்.  வீடுமர் உடனே தன்னுடைய வில்லால் அவனைக் கொன்று விடுகிறார்.  இப்படி அகந்தையின் காரணமாக சிவன் வில் கையில் இருந்தும் தோற்றான் சிவேதன்.  வாளுடன் வருபவனை வில் வைத்து தாக்கினார் வீடுமர்.  போர்நெறி தவறினார் முதல் நாளிலேயே.  சரி, கதைக்கு வருவோம்.  ஒன்பதாம் நாள் போர் தொடங்குகிறது.  எட்டாம் நாள் இரவிலேயே துரியோதனன் துச்சாதனனை கன்னனிடம் அனுப்பி போரில் பங்கு பெறுமாறும் படைஇழப்பு அதிகம் ஆவதாகவும் தெரிவிக்கிறான்.  "நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும்; நினையாரும் வாகை புனையார்.''ஆனால் கன்னனோ வீடுமன் மாண்ட பிறகே வருவேன் போர்க்களத்துக்கு.  வந்து வெற்றி பெற்று துரியோதனனுக்கு அரசைப் பெற்றுத் தருவேன் என்கிறான்.  "முன் உந்தை தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்கொல்? அம் பொன் முடியாய்! தன் உந்து தேரும், வரி வில்லும் உண்டு, சரம் உண்டு; நாளை அவனே உன்னும் களத்தில் அவர் வானம் ஆள, உலகு ஆளுவிப்பன் உனையே.''
தகவல் வந்து சொன்னவுடன் அதை அப்படியே போய் வீடுமரிடம் தெரிவிக்கும்படி துச்சாதனனுக்கு ஆணையிடுகிறான் துரியோதனன்.  போய்த்  தெரிவிக்கிறான் துச்சாதனன்.  நடக்கப் போவது தெரியும் வீடுமருக்கு.  எனவே ஒரு நாள் பொறுங்கள்.  பிறகு கன்னன் வந்து உங்களை வாழவைக்கட்டும் என்று பதில் உரைக்கிறார்.
"ஒரு நாளும் நீவிர் பொறுமின்கள்; உம்மை உலகு ஆளுவிக்க வருவோர்
வரு நாள் தொடங்கி அமர் செய்து, தெவ்வை மடிவிப்பர், சொன்ன வகையே;
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி, நுமரோடு இயைந்து குழுமி,
பெரு நாள் இருந்து, நனி வாழ்திர்!''
மறுநாள் வீடுமர் தன் சேனையைத் சருப்பதோபத்திர வியூகமாக வகுக்கிறார்.
சூர்யா:  தாத்தா அது என்ன சருப்பதோபத்திர வியூகம்? ஒண்ணும் புரியல்ல தாத்தா.
தாத்தா: நான்கு புறம் எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியாகத் தெரியும் வடிவம் என்று பொருள்.  உடனே கண்ணன் பற்பராகம் என்னும் செந்தாமரை மலர் போல அணிவகுக்கச் சொல்கிறார்.  வியூகம் என்றால் அணிவகுத்தல் என்று பொருள்.  பெரியா விளையாட்டு விழாக்களில் இறுதி நாளன்று பற்பல உருவங்கள் மாதிரி வீரர்கள் அணிவகுப்பதில்லையா அந்த மாதிரி.  சரியா.  எல்லோரும் வீமனைக் குறி வைக்கிறார்கள்.  அலம்புசன் வந்து வீமனோடு வாட்போர் செய்கிறான்.  வீமன் வாட்போரில் வெற்றிபெற்று ஒரு கரத்தை துணித்து விடுகிறான்.  மற்போர் துவக்குகிறான்அந்த அரக்கன்.  அதிலும் வீமனே வெற்றி கொள்கிறான்  பின் விற்போர் தொடங்குகிறது.  விற்போரிலும் வெற்றி வீமனுக்கே.  பார்க்கிறான் அந்த அரக்கன்.  ஒரு மலையை வீமன் மேல் விட்டெறிகிறான்.  தூரத்தில் நின்ற அபிமன் பார்க்கிறான்.  ஒரு கணையால் அந்த மலையையே தூள்தூளாக ஆக்குகிறான்.  வீமன் பின்னர் ஒரு வேல் எடுத்து வீசுகிறான்.  அந்த அரக்கன் மடிகிறான்.  அன்று பல அரக்கர்கள் மற்றும் மன்னர்கள் மடிகிறார்கள் வீமனின் கதையால்.  காசி மன்னனது படை மற்றும் சேதியர்கள் விசயன் வாளியால் மடிகிறார்கள்.
சூர்யா:  வாளி என்றால் என்ன தாத்தா?  வாளி என்றால் பக்கெட் என்று தான் எனக்குத் தெரியும்.
தாத்தா: வாளி என்றால் அம்பு என்று பொருளடா.  தீக்கடவுள் கொடுத்த வெண்புரவித் தேரில் வெற்றிவாகை சூடி வலம் வருகிறான் விசயன்.  வீமவிசயர்களால் துரியோதனன் படை சிதறி சின்னாபின்னமாகிறது.  வீடுமன் கோபத்துடன் வந்து பாஞ்சாலருடன் போரிடுகிறார்.  இடையில் சிகண்டி புகுந்து பாஞ்சாலரைக் காக்க வருகிறான்.  துச்சாதனன் அம்பெய்து சிகண்டியின் தேரை அழிக்கிறான்.  விசயன் வந்து பகழி வீச பகைவர்கள் புறமிடுகிறார்கள்.  இன்றைய போரிலே விராடன் இளவல் சதானிகன் மடிகிறான்.  இத்துடன் ஒன்பதாம் நாள் போர் முடிவடைகிறது.
பத்தாம் நாள் போரில் முந்தைய நாள் போலவே படை அணிவகுப்பு உள்ளது.  மாயக் கண்ணன் விசயனைப் பார்த்து இன்று வீடுமனை வானுலக அனுப்பியே ஆக வேண்டும்.  அது அவராகவே நிச்சயம் செய்து கொண்ட தினம்.  எனவே இன்று நாள் தவறாமல் அவர் கருதியே படியே நாம் அவரைக் கொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  யார் தடுத்தாலும் இன்று வீடுமரை வெல்வேன் என்று உறுதியளிக்கிறான் விசயன்.

"எந்தை ஆக; துணைவர் ஆக; தனயர் ஆக; எந்தைதன்
தந்தை ஆக; நீ உரைக்கில், யாரையும் தறிப்பன் யான்''
விசயனும் வீடுமனும் கடுமையாக மோதுகிறார்கள்.  வீடுமனுக்கு உதவியாக மன்னர் பலர் வருகிறார்கள்.  அவ்வளவு சரங்களையும் விசயன் விலக்குகிறான்.  வீமன் தண்டு (கதை) கொண்டு பலரை மாய்க்கிறான்.  இதைக் கண்ட துரியோதனன் வில்லாளிகள் பலரை அனுப்பி வீமனுடன் மோதும்படி கட்டளை இடுகிறான்.  வீடுமன் எதிரில் சிகண்டி ஒரு தேரில் வருகிறான்.  அந்த தேரில் விசயன் ஏறி போரிடுகிறான்.  ஆனால் வீடுமன் போர் செய்யவில்லை.  சிகண்டியை துச்சாதனன் தாக்குகிறான்.  சிகண்டி அஞ்சி ஓடுகிறான்.  பின் கண்ணனின் தேரில் விசயன் ஏறுகிறான்.  கண்ணனே திகைக்கும்படி பல அம்புகள் கண்ணன் மீதே பாய்கின்றன.  சிகண்டியை அழைத்து வரச் சொல்- சிகண்டியும் விசயனுமாக கணை விடுகிறார்கள் வீடுமன் மீது.  சிகண்டி வந்தவுடன் வீடுமன் போர் புரியவில்லை.  இந்நேரம் விசயனின் கணை வீடுமனின் இதயத்தைக் கிழிக்கிறது.  வீழ்கிறார் வீடுமன்.  ஆனால் பட்ட அம்பு விசயனது என்பதை உறுதி செய்து மகிழ்கிறார்.  வீடுமன் உடனே துச்சாதனனை அழைத்து துரியோதனனைக் கண்டு அவன் சொல்படி மேற்கொண்டு போர் நடத்துக எனக் கூறி வீழ்கிறார்.  வீழ்ந்தார் வீடுமர் என்றவுடன் இரு பக்கத்தினரும் போரை நிறுத்தி ஓடோடி வருகிறார்கள்.  இரு பக்கத்தினரும் நெஞ்சு உருகினார்கள். "யாரும் நெஞ்சு அழிந்தனர்கள்; யாரும் நொந்து நைந்தனர்கள்; யாரும் நின்று இரங்கினர்களே.'' .இரு பக்கத்தினரும் அழுது புலம்புகிறார்கள்.  பரிதி வடதிசை நோக்கி நகரும் போது இறந்தால் வடபுறத்தில் உள்ளமேலுலகம் போகலாம் - இல்லாவிடில் தென்புலம் போக வேண்டியிருக்கும் என்பதை உண்ர்ந்த வீடுமர் தான் பயின்ற யோகத்தின் காரணமாக உயிர் ஓடாவண்ணம் நிறுத்துகிறார்.
சூர்யா: அது என்னங்க தாத்தா சூரியன் வடக்கே போவான் என்றால் எப்படி? கிழக்கே உதிப்பான் மேற்கே மறைவான் பரிதி என்று தான் நான் கேள்விப்பட்டு உள்ளேன்.
தாத்தா: ஆமாம்டா.  ஆடிமாதம் முதல் மார்கழி வரை சூரியன் தென்திசை நோக்கிப் பயணப்படுவான்.  இதை வடமொழியினர் தட்சிணாயனம் என்று சொல்வார்கள்.  அயனம் என்றால் பாதை.  தென்பாதை என்று பொருள்.  இது தேவர்களுக்கு இரவு என்றும் அவர்கள் சொல்வார்கள்.  எனவே தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பரிதி வடதிசை நோக்கி நகரும்.  இதை உத்தராயணம் என்பார்கள்.  வடபாதை என்று பொருள்.  இது தேவர்களுக்கு பகல் பொழுது.  தேவர்களுக்கு இரவு என்று கூறப்படுகிற தென்பாதைக் காலத்தில் இறந்தால் நற்கதி இல்லை என்றும் வடபாதைக் காலத்தில் இறந்தால் உயர்கதி பெறுவர் என்றும் சொல்லப்படுகிறது.  துவக்கத்திலேயே வீடுமனின் தந்தை சந்தனு கொடுத்த வரத்தை இப்போது நினைவு படுத்திப் பார்.  நீ நினைக்கும் போது தான் உனக்கு மரணம் வரும் என்று ஒரு வரம் வழங்கியுள்ளார்.  எனவே வடபாதை வந்தபின் மரணமடையலாம் எனத் தீர்மானிக்கிறார் வீடுமர்.  சரியா?
சூர்யா: ஆமாங்க தாத்தா.  அந்த மீனவப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வீடுமன் சபதம் எடுத்த காரணத்தால் தானே அவருடைய தந்தை இந்த வரத்தைக் கொடுத்தார்.
தாத்தா: சரிதாண்டா.  கதைக்கு வருவோம்.  வீடுமர் தன்னுடைய தலை தாழ்ந்து உள்ளது அதை உயர்த்தி வைக்கும்படி வேண்டுகிறார்.  உடனே விசயன் சரங்களைத் தொடுத்து அந்த சரங்களின் மேல் அவர் தலை நிற்குமாறு வில்வித்தை காட்டுகிறான்.  வீடுமர் சரத்தின் மீது சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது என்று கூறி மகிழ்கிறார்.  பின்னர் துரியோதனனை அழைத்து "நீ விரும்பியபடி கன்னனை தானைத்தலைவன் ஆக்கி போரிடுவாய்'' எனக் கூறுகிறார்.  பின்னர் பாடிவீடு திரும்பினர் அனைவரும்.  துரியோதனன் வீடுமன் விழுந்த செய்தியைக் கூற சஞ்சயனை அனுப்புகிறார்.  செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த திருதராட்டிரன் தன் மைந்தர்களுக்கு இனி அரசு என்பது உறுதி கிடையாது என்பதை தெள்ளத்தெளிவாக உணருகிறார்.  கண்ணீர் விடுகிறார்.  போர்க்களத்தில் அடுத்த நாள் தானைத் தலைவன் யார் என்ற கேள்வி எழ கன்னன் வீடுமன் கூறியவண்ணம் தன்னைத் தானைத்தலைவனாக நியமிக்கும்படி வேண்டுகிறான்.  துரியோதனன் இக்கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து தனக்குத் துணையாக இருக்கும்படி கன்னனை வேண்டி துரோணரைத் தலைவராக்குகிறான்.  கதிரவன் குணபால் அடைந்தான்.
சூர்யா: அது என்ன குணபால் தாத்தா?
தாத்தா: குணதிசை என்றால் கிழக்குத் திசை.  குடதிசை என்றால் மேற்குத் திசை.  குடகு மலை என்றால் மேற்கே இருக்கக் கூடிய மலை என்று பொருள்.  அது கர்நாடகத்தில் உள்ளது.  விடிந்து விட்டது பதினோராம் நாள் போர் துவங்கப் போகிறது.  வீடுமன் இல்லாத படை எழுச்சி இல்லாமல் இருக்கிறது.  வில்-யார் கூறுவதைக் கேட்போம்.
நதி இலா நாடும், தக்க நரம்பு இலா நாத யாழும்,
நிதி இலா வாழ்வும், மிக்க நினைவு இலா நெஞ்சும், வேத
விதி இலா மகமும் போன்ற,-வீடுமன் இலாத சேனை.
துரோணர் சகட வியூகம் வகுக்கிறார்.  திட்டத்துய்மன் கிரவுஞ்ச வியூகம் வகுக்கிறான்.  சகுதி சகாதேவனுடன் போரிடுகிறான்.  சகாதேவனோ கதையாலும் வில்லாலும் போரிட்டு சகுனியை வெல்கிறான். துரியோதனன் வீமனோடு பொருத வந்து தோற்றோடுகிறான்.  இடைமறித்து சல்-யன் வீமன் மேல் கணை தொடுக்கிறான்.  இது கண்டு நகுலன் சல்-யனுடன் போர் புரிந்து விரட்டுகிறான்.  கன்னனும் விராடனும் விற்போர் புரிகின்றனர்.  துருபதனும் பகதத்தனும் யானைப் போர் புரிகின்றனர்.
சூர்யா: யார் இந்த பகதத்தன்.  ஏற்கனவே கூறி இருக்கிறீர்கள்.  ஆனால் நினைவில் நிற்கவில்லை தாத்தா.
தாத்தா: பகதத்தன் என்பவன் பெருவீரன். இவனைத் தோற்கடிப்பது மிகக் கடினம்.  இவன் ஒரு அரக்கன்.  நரகாசுரனின் மகன்.  நரகாசுரன் யார் என்றால் திருமால் வராகமூர்த்தியாக அவதாரம் எடுத்த போது பூமி தேவிக்கு வராகத்துக்கும் பிறந்தவன்.  நரகாசுரன் தன் தாயால் மட்டுமே தனக்கு மரணம் என்று வரம் கேட்டவன்.  அதனால் தான் கண்ணன் அவதாரத்தில் உருக்குமணி திருமகள் அவதாரம்.  சத்யபாமை என்பவர் நிலமடந்தை அவதாரம்.  சத்யபாமையைத் தேரோட்டச் சொல்- கண்ணன் நரகாசுரனைக் கொல்கிறார்.  சரியா - கதைக்கு வருவோம்.  சிகண்டி வாட்போரில் சோமதத்தன் முத-யோரை வெல்கிறான்.  சிகண்டி  பதினோராம் போரில் கலக்குகிறான்.  அனைவரையும் வெல்கிறான்.  திரும்பியபுறம் எல்லாம் சிகண்டி தென்படுகிறான்.  அபிமனும் இலக்கணகுமரனும் போரிடுகிறார்கள்.  இலக்கண குமாரன் அபிமனின் வில்லை தூளாக்கி தேரைத் தவிடுபொடியாக்குகிறான்.  சினம் கொண்ட அபிமன் அவன் தேரில் ஏறி அவனைத் தூக்கிக் கொண்டு போகிறான்.  தன் மகனை அபிமன் பற்றிக் கொண்டு போவதைக் கண்டு கலக்கடைகிறான் துரியோதனன்.  சயத்திரதன் வந்து தடுக்கிறான்.  யார் இந்த சயத்திரன் என்றால் இவன் துரியோதனனின் தங்கையான துச்சளையின் கணவன்.  சிந்துதேச மன்னன் இவன்.  கன்னன் வருகிறான் தன் நண்பனின் மகனைக் காப்பாற்ற.  ஆனால் விற்போரில் அபிமன் எல்லோரையும் வென்று ஓடஓட விரட்டுகிறான்.  கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது போர்க்களம்.  இப்போது சல்-யன் வந்து தடுக்கிறான் அபிமனை.  இடைமறித்து வீமன் சல்-யனுடன் மோதுகிறான்.  மோதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் சல்-யன் தரையில் விழுகிறான்.  அபிமன், "என்னங்க பெரியப்பா - என்னுடன் சல்-யன் மோதும் போது நீங்கள் இடைமறித்துப் போர் புரிகிறீர்களே?  எனக்கு இது அவமானமல்லவா?'' என்று கேட்கிறான்.  இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி துரியோதனனின் மகன் தப்பி ஓடுகிறான் அங்கிருந்து.  இலக்கணக் குமாரனை கிருதவர்மன் காப்பாற்றி கொண்டு செல்கிறான்.  துரியோதனனும் போர்புரிய மாட்டாமல் திகைக்கிறான்.  அருக்கன் குடபால் முந்நீர் குளிக்கிறான்.
சூர்யா:  அது என்னங்க தாத்தா முந்நீர்.  வெந்நீர் என்றால் தெரியும் - தண்ணீர் என்றால் தெரியும்.
தாத்தா: முந்நீர் என்றால் கடல்டா.  மழைநீர் - ஆறுகள் கலப்பதால் அந்த நீர் - கடந்நீர் இப்படி மூன்றுவகையான நீர் அங்கே உள்ளது.  அதனால் அதை முந்நீர் என்று கூறினார்கள் தமிழர்கள்.  காரணப்பெயர்.  இப்போ கடல் என்ற சொல்லைக் கூட நாம் மறந்து விடுகிறோமே.  என்னவோ சீஷோர் என்கிறார்கள் போக்கற்றவர்கள்.  ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்கள் போல தமிழில் ஆங்கிலம் கலந்து தமிங்கலீசு பேசும் வழக்கம் பெருகி விட்டது.  ஊடகங்களுக்குக் கூட சன்டிவீ போன்று ஆங்கிலப் பெயரே உள்ளது நம் தமிழ்நாட்டில்.  தமிழுக்கு இங்கு ஏதடா இடம்?  பெயரில் தான் தமிழ் இருக்கும்.  ஆனால் பேசுவது ஆங்கிலம்.  ஆங்கிலம் பால் அடக்கமுடியாத மோகம்.  என்று தீருமோ எந்த மோகம். புரியவில்லை.  சரி கதைக்கு வருவோம்.  பாடிவீட்டில் துரியோதனனுக்கு தாங்கொணாக் கோபம்.  தன் மகனை தூக்கிச் சென்றார்களே.  நாளை தருமனைப் பிடிக்க வேண்டும்.  அப்போது தான் என் புதல்வனைப் பற்றிச் சென்ற கோபம் அடங்கும் என்று உடன் இருந்த மன்னர்களிடம் கூறினான்.  திகத்தராசன் என்ற அரசனும் மற்றவரும் வீமனையும் விசயனையும் தருமனை நெருங்காமல் பார்த்துக் கொண்டால் மற்றவர்கள் ஒன்று சேர்ந்து தருமனை வளைத்துப் பிடித்துவிடலாம் என்று கருத்து கூறுகிறார்கள்.'சகத்துக்கு ஒருவன் எனும் விசயன் தம்முற்கு உதவி செய்யாமல் மகத்தில் சனிபோல் வளைக்குவம் யாம்!' என்றனர் அரசர்கள் அனைவரும்.  திகத்தராசன் என்பவன் இராசபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவன்.
சூர்யா: மகத்தில் சனி என்றால் என்னங்க தாத்தா?
தாத்தா: கட்டமான நேரம் என்று பொருள்.  சுந்தரமூர்த்திநாயனாருக்கு வாக்கு தவறியதால் இரு கண்களும் போய்விடும். அப்போது அவர் சொல்லுவார்
"மகத்திற்புக்கதோர்சனியெனக்கானாய் மைந்தனே மணியே மணவாளா, வகத்திற்பெண்டுகள் நானென்று சொன்னா லழையேற்போ குருடா வெனத்திரியேன், முகத்திற்கண்ணிழந் தெங்ஙனம்வாழ்கேன் முக்கணா முறையோ மறையோ தீ, யுகைக்குந்  தண்கடலோ தம்வந் துலவுமொற்றியூரெனுமூருறைவானே"அடையார்தமக்கு,மகத்திற்சனியன்னசந்திரவாணன்" என்ற தஞ்சைவாணன் கோவையிலும்  வரும்.  அதாவது மக நட்சத்திரத்தில் பிறந்தவன் சனி தசை நடக்கும் போது மரணம் வரும்.  அல்லது மரணத்திற்கு ஒப்பான இன்னல் வரும் என்று சொல்லுவார்கள்.  அது மட்டுமல்ல சனி மகத்தில் சஞ்சரிக்கும் போது சில அரசுகளுக்கு ஆகாது என்று கூட சொல்லுவார்கள்.  மகம் என்பது நட்சத்திர வரிசையில் பத்தாவது நட்சத்திரம். ஒரு நட்சத்திரத்தை நான்கு பங்காகப் பிரிப்பார்கள்.  அதை வடநூலார் பாதம் என்று கூறுவர். இப்படிக் கணக்கிட்டால் 108 பாதங்கள் மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கு.  இதை 12 இராசிகளுக்குப் பிரித்தால் ஒவ்வொரு இராசிக்கும் 9 பாதங்கள் வேண்டும்.  மகம் என்பது பத்தாவது நட்சத்திரம் என்றால் 37 வது பாதம் முதல் 40வது பாதம் வரை இதற்கான பாதங்கள்.  36 பாதம் வரை உள்ள நட்சத்திரங்கள் மேடம், ரிடபம், மிதுனம் என மூன்று இராசிகளில் வரும்.  நான்காவது இராசியான சிம்ம இராசிக்கான நட்சத்திரம் இது.  மகமும், பூரமும் உத்தரத்தில் ஒரு பாதமும் சிங்கராசியை வீடாகக் கொண்டவை. சிங்கம் என்பது சனிக்குப் பகை வீடு.  சனி என்பவன் நவக்கிரகங்களில் ஒருவன்.  உத்தர நட்சத்திரத்தில் உதித்த சூரியனது மகன். இவன்.  விசயனும் பங்குனி உத்திரத்தில் பிறந்தவன்.  அதனால் விசயனுக்கு பல்குணன் -பற்குணன் என்ற பெயரும் உண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அங்கு சனி வரும் போது ஏழரைநாட்டுச் சனி என்று ஆகிவிடும்.  அது பெருந்துன்பத்தை விளைவிக்கக்கூடிய காலம் என்று சோதிட வல்லுநர்களால் கருதப்படுகிறது. இருக்கும் இடத்தை விட்டு மாறவேண்டி இருக்கும்.  மரணம் நிகழலாம்.  அல்லது மரணத்திற்குச் சமமான அவமானங்களைச் சந்திக்க நேரிடும்.  எனவே அப்படிப்பட்ட துன்பத்தை நாம் விசயனுக்குத் தருவோம் என்று அரசர்கள் கூறுவதாக வில்-யார் கூறி தன் சோதிட வல்லமையை நமக்குப் புலப்படுத்துகிறார்.  சரியா?  எல்லோரும் உறங்கப் போகிறார்கள். அடுத்த நாள் பன்னிரண்டாம் நாள் போர் நடக்க உள்ளது.  சூர்யா நாமும் உறங்கலாமே?

Monday, November 15, 2010

கண்ணன் தூது - துரியோதனன் சதி

தாத்தா:  மன்னருக்கு அழகு தூது அனுப்பிக் கருத்தை அறிதல்.  எனவே யாதவகுலதிலகம் கண்ணன் துரியோதனனுக்குத் தூது அனுப்புவது நல்லது என்று தனது கருத்தைக் கூறினார்.  உடன் இருந்த கண்ணனின் அண்ணன் பலராமனோ பதிமூன்று ஆண்டுகளாக துரியோதனன் ஆளும் ஒரு நாட்டை திரும்பக் கேட்பது அழகல்ல - நாட்டை மீட்டல் கொடிது என்று தனது கருத்தைச் சொன்னான்.  உடன் இருந்த மற்றொரு பங்காளியான சாத்தகி என்பவன் உடனே பலராமனை பழித்தும் இழித்தும் கூறினான்.
சூர்யா: யார் இந்த சாத்தகி தாத்தா?
தாத்தா: வசுதேவனின் பங்காயியான சத்தியகனது மகன் இவன்.  வயதில் கண்ணனுக்கு இளையவன்.  ஒன்றாகவே வளருகிறார்கள்.  இவன் விசயனிடம் வில்வித்தை கற்றவன்.  எனவே பாண்டவர்கள் சார்பாகவே பேசுவான்.  கண்ணன் பால் மட்டற்ற மரியாதை கொண்டவன் இவன்.  சரி கதைக்கு வருவோம்.  உலூகன் என்னும் அந்தணனைத் தூது அனுப்புவது என இறுதியில் முடிவு எடுக்கப்பட்டது.  கண்ணனும் தன் குடும்பத்துடன் துவாரகைக்குத் திரும்பினான்.  உலூகன் திருதராட்டிரன் அவைக்குச் செல்கிறான்.  துரியோதனன் தக்க வரவேற்பு அளிக்கிறான்.  பின்னர் உலூகன் தான் தூது வந்த வரலாற்றைக் கூறுகிறான்.  உடனே துரியோதனன் போரில் ஆண்மை கண்டறியலாம் எனத் தன் முடிவைச் சொல்கிறான்.  ஆனால் துரோணர், விதுரன் முத-யோர் அவனுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.  வீடுமனும் திருதராட்டிரனிடம் நாளை போர் என்று வந்தால் விசயனுக்கு எதிராக யார் வில் வளைக்க முடியும் என்று விசயனின் பலத்தை எடுத்துக் கூறுகிறார்.  உடனே கன்னன் வெகுண்டு பேசுகிறான்.  போரிட்டு வெல்லலாம் என்று வீரம் பேசுகிறான்.  உடனே வீடுமன் வெகுண்டு "ஏற்கனவே திரௌபதித் திருமணத்திற்காக நடந்த திறனாய்வில் கன்னன் தோற்றதையும் - கந்தருவர் ஏற்கனவே துரியோதனனை கடத்திச் சென்ற போது மீட்டுக் கொடுக்கவில்லை - விசயன் கானகத்தில் இருந்தாலும் மீட்டான் - விராடன் நாட்டில் நடந்த போரில் தலைதெறிக்க ஓடிவந்தோம்.  இனி எந்த போரில் நீ வெல்வாய்?'' என்று கேட்கிறார்.  " தூம வெங் கனல் தோன்றிய தோகை அம் தொடையல்  சூட்டிய நாளில்,  நாம வெஞ் சிலை நாண் எடுத்தனை, அடர் நரனொடும் போர் செய்தாய்!  தாம வெண் குடை நிருபனை அந்தர சரிதர் கொண்டு ஏகாமல்  வீமன் வெஞ் சிறை மீட்ட நாளினும், திறல் வினை புரி   முனை வென்றாய்!   ஒரு நல் மா நெடுந் தேரினை அறிவுறா உத்தரன்   விரைந்து ஊர,  நெருநல் ஆன் நிரை கவர்தரு முகத்தினும் நின்றனை,                                 நெடும் போது!  மரு நறா உமிழ் துழாயவன் தேர் விட, மலையும்                                 நாள், வய வாளி  வெருநர்மேல் விடா விசயனை நீ அலால், வெல்ல                                 வல்லவர் உண்டோ? ''. உடனே கன்னனுக்காகத் துரியோதனன் பரிந்து பேசி உலூகனிடம் போர் தான் இறுதி முடிவு எனத் தெரிவிக்கிறான்.  உலூகன் ஐவரிடம் இத்தகவலைத் தெரிவித்து பின்னர் கண்ணனிடமும் தெரிவிக்கிறான்.  உடனே கண்ணன் விசயனைத் தன்னிடம் வரும்படி செய்தி சொல்- அனுப்புகிறார்.  அத்தினாபுரியில் துரியோதனன் மந்திரிகளுடன் கலந்தாலோசித்து எல்லா மன்னர்களுக்கும் செய்தி அனுப்பி தனக்குத் துணை சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான்.  கண்ணனைத் துணை சேர்க்கக் கருதி துரியோதனன் துவாரகைக்குச் செல்கிறான்.  துரியோதனன் துவாரகைக்கு வருவதை அறிந்தவுடனேயே கண்ணன்,"துரியோதனன் வந்தால் என்னைக் கேட்க வேண்டாம்.  உள்ளே அனுப்புங்கள்'' என்று கூறிவிட்டு மாயத்துயில் கொள்ளப் போய்விட்டான்.  துரியோதனன் வருகிறான்.  கண்ணன் துயின்று கொண்டிருப்பதைக் கண்டான்.  உடனே கண்ணன் தலைமாட்டில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.  பின்னாலேயே விசயனும் வந்து விடுகிறான்.  அவன் கண்ணன் காலடியில் சென்று நிற்கிறான். துயில் கலைந்ததும் முத-ல் கண்ணன் விசயனைப் பார்க்கிறான்.  நலம் விசாரித்து வந்த காரியத்தைக் கேட்கிறான்.  ஆனால் விசயனோ எனக்கு முன்னமே துரியோதனன் வந்து உன் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறான் எனத் தகவல் தருகிறான்.  எனவே துரியோதனனிடம் வந்த காரியத்தைக் கேட்கிறான் கண்ணன்.  இருவரும் போர்த்துணை கேட்க வந்தது அறிந்து நான் ஏற்கனவே தருமரிடம் துணை புரிவதாக வாக்களித்துள்ளேன்.  எனவே வாக்கு தவற முடியாது என்று கூறி தன் படைபலம் முழுவதையும் துரியோதனன் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். "உதிட்டிரன்தனக்கு முன்னே சொற்றனம், ஆங்கண்; இங்கும், துயில் உணர் பொழுதத்து, இன்று, வில்-திறல் விசயன் முந்த விழிக்கு இலக்கு ஆனான்' என்று, பற்று அறத் துணிந்து சொன்னான்-பாண்டவர் சகாயன் ஆனான்.''   இப்போது துரியோதனன் கண்ணன் ஆயுதத்தைப் பிரயோகிக்கக் கூடாது என வேண்டுதல் ஒன்று விடுக்கிறான்.  உடனே கண்ணன் விசயனைப் பார்த்து அப்படியென்றால் நான் என்ன பணி செய்ய முடியும்? என்று கேட்கிறார்.  உடனே விசயன், "கண்ணா - நீ எனக்குத் தேர் ஓட்டினால் இந்த உலகத்தில் எவர் என்னை எதிர்த்தாலும் நான் வெற்றி பெறுவேன்'' என்று கூறுகிறான்.  கண்ணனும் ஒத்துக்கொண்டு ஆயுதம் ஏந்துவதில்லை என உத்தரவாதம் வழங்குகிறான்.  துரியோதனன் பலராமனிடம் தகவலைக் கூறி அத்தினாபுரி திரும்புகிறான்.  பின்னர் கண்ணனும் விசயனும் உபப்பிலாவியத்தை அடைகிறார்கள்.  திருதராட்டிரன் துரியோதனனிடம் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு ஐவருக்கும் நாடு தராமலும்  போரைத் தவிர்க்கவும் எண்ணம் கொண்டு சஞ்சயன் என்பவரைத் தூது அனுப்பி அறத்தை எடுத்துச் சொல்லும்படி பணிக்கிறார்.  சஞ்சயனும் ஐவர் இருந்த இடத்திற்குப் போனார்.  பாண்டவர்கள் அவரை வரவேற்று தக்க ஆசனம் கொடுத்து வந்த காரியம் குறித்து வினவுகிறார்கள்.  அவரோ, " நீங்கள் இந்த புடவி (நிலவுலகத்தை) ஆள்வதை விட்டு விட்டு அடவி(காடு) ஆளவும் வல்லவர்கள் ஆகிவிட்டீர்கள்.  இது நன்மையான காரியமே.  நிலையற்ற செல்வத்தைப் பெறுவதை விட வனத்தில் தவம் புரிந்து நிலையான  செல்வத்தைப் பெறத் தகுதி படைத்து வீட்டீர்கள்.  எழுவகைப் பிறப்பில் மீண்டும் வந்து உழலாமல் இருக்கும் வழிவகையைப் புரிந்து கொண்டீர்கள்.  தத்துவஞானிகள் ஆகிவிட்டீர்கள்.  இந்த மானிடப் பிறப்பு மூலம் இம்மை - மறுமை - வீடுபேறு மூன்றில் எதையும் அடையலாம்.  மற்ற பிறப்புகளில் அவ்வாறு நினைத்ததை அடைய முடியாது.  அப்படிப்பட்ட பிறவிப்பயன் என்ன என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள்.  நீங்கள் நிலையில்லாத அரசாட்சியை விரும்பி ஆளக் கருதினாலும் துரியோதனன் விட்டுத் தரமாட்டான்.  செருக்கு கொண்ட அவன் உங்களுடன் கூடி வாழ உடன்படமாட்டான்.  பராசரன் என்னும் பரமமுனிவன் குலத்திலே வந்திருந்தாலும் நல்ல எண்ணங்கள் துரியோதனனிடம் இல்லை. எனவே நீங்கள் போரைத் தவித்து நிலையான வீடுபேற்றை அடையவேண்டும்.  நீங்களும் வியாசமுனிவர் பரம்பரையில் வந்தவர்கள் தாம்.  எனவே வியாசமுனிவரின் மகன் சுகன் போல உலகப்பற்றை ஒழித்து உயர்பதம் பெறவேண்டும்.  அதுவே நல்லது.  மண் - பெண் - பொன் மீதுள்ள பற்றை ஒழித்துவிடுங்கள்.
பாரிலாசையுநின்னிராசபதத்திலாசையுமன்னுவெம் போரிலாசையுநேயமங்கையர்போகமன்பொடுபுதிதுணுஞ் சீரிலாசையும்விட்டுநன்னெறிசேரவுன்னுதிநீயெனத் தூரிலாசையறத்துறந்தருள்சுருதிமாமுனிசொல்லவே.
என்றெல்லாம் கூறி அவர்கள் நாடாளுவதற்குப் பதிலாக காடாண்டு வீடுபேற்றினை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சூர்யா:  தாத்தா நானும் ஒரு திரைப்படத்திலே கேட்டுள்ளேன். "அரியது கேட்கின் வரிவடிவேலோய - அரிது அரிது மானிடர் ஆதல் அரிது - மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது - பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது - ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்  தான் செயல் அரிது - தானமும் தவமும் தான் செய்வாராயின் - வானவர் நாடு வழி திறந்திடுமே என்று அந்தத் திரைப்படத்தில் ஔவையார் பாடுவார் தாத்தா.  அதைத் தான் இந்த சஞ்சயர் சொல்கிறாரா?
தாத்தா:  ஆமாம்டா. பற்றை விடச் சொல்- பல பெரியோர்கள் கூறி உள்ளார்கள்.  அற்றது பற்று எனில் உற்றது வீடு என்பார் ஒருவர். "பற்றற்றகண்ணே பிறப்பறுக்கும்'' "அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை'' என்றும் கூறுவார்கள்.  யார் கேட்கிறார்கள். தருமரும் கேட்டார்.  அவர் அறக்கடவுளின் மகன்.  அவருக்கு அறம் பற்றித் தெரியாதா?  குறுநகை புரிகிறார் சஞ்சயரின் பேச்சுகளைக் கேட்டு.  "நான் ஒரு அரச குலத்தில் வந்தவன்.  அரசகுலத்திற்கென ஒரு நீதி உள்ளது.  அதைத் தான் நான் பின்பற்ற வேண்டும்.  போர்புரிய நான் அஞ்சக்கூடாது.  போரில் இருந்தாலும் புகழ்.  இறந்தாலும் புகழ்.  போரில் நான் எதிரிகளை வென்றாலும் அவர்கள் வீரசுவர்கம் புகுவார்கள்.  நான் வெல்லப்பட்டாலும் நானும் வீரசுவர்கம் புகுவேன்.  போரின் மூலம் சுவர்கம் என்பது உறுதி.  எனவே ஏழ்நரகு கிடைக்கும் என்று அச்சுறுத்தினாலும் போரில் வெற்றி பெற்று நல்லாட்சி நடத்துவதைத் தான் நான் விரும்புகிறேன்.
சூர்யா: ஏழ்நரகு என்றால் என்னங்க தாத்தா?
தாத்தா: சிலர் அள்ளல், ரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி என்று சொல்லுவார்கள்.  ஒன்றும் விளங்காது.  சிலர் தமப்பிரபை, இமப்பிரபை, தூமப்பிரபை, வாலுகப்பிரபை, சாகரப்பிரபை, இரத்தப்பிரபை, அழற்பிரபை என்று கூறுவார்கள்.  ஆனால் நல்ல தமிழில் இருள், குளிர், புகை, மணல், துயிலாமை, குருதி, தீ என்று கூறுவார்கள்.  இப்படி ஏழு வகை இடங்களில் தவறு செய்தவர்கள் இறப்பின் பின்னால் வருந்தவேண்டி வரும் என்று சொல்கிறார்கள்.  கதைக்கு வருவோம். வீமனும் போரே தனகு உரிய தவம் என்று உரைக்கிறான்.  கண்ணன் இடைமறித்து இவர்கள் இந்த நிலவுலகத்தை ஆளுதலும் அவர்கள் அமரர் உலகம் ஏறுதலும் நடக்கப் போகிற செயல் என்று முன்கூட்டியே தெரிவிக்கிறார்.  சஞ்சயன் திரும்ப வந்து திருதராட்டிரனிடம் நடந்ததை உரைக்கிறான்.  இதன்பின் தருமர் கண்ணனைத் துரியோதனிடம் தூது அனுப்ப வேண்டும் எனத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார்.  உடனே கண்ணன் பிறர் கருத்தையும் கேட்கிறார்.  வீமன் உடனே "பாஞ்சா- துரியோதனன் சபையில் அவமானப்படுத்தப்பட்ட போது அமைதியாக இருக்கச் சொன்னீர்கள்.  உங்கள் பேச்சைக் கேட்டு அமைதி காத்து - நம் மரபுக்கே தீராத களங்கத்தை உண்டாக்கி விட்டோம்.  பின்னர் காட்டுக்குப் போனோம் - மறைந்திருந்து ஓர் ஆண்டும் கழித்தோம்.  இன்னும் பகையை ஒடுக்க நீங்கள் எண்ண மாட்டேன் என்கிறீர்களே? அண்ணனே துரியோதனன் கொடுமையில் உன் செயல் பெருங்கொடுமை.  உன் அருளைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம்'' என்றான்.
விரி குழல் பைந்தொடி நாணி வேத்தவையில் முறையிடுநாள், 'வெகுளேல்!' என்று,
மரபினுக்கும் நமக்கும், உலகு உள்ள அளவும், தீராத வசையே கண்டாய்!
எரி தழல் கானகம் அகன்றும், இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய்!
அரவு உயர்த்தோன் கொடுமையினும், முரசு உயர்த்தோய்! உனது அருளுக்கு அஞ்சினேனே!
விசயனும் சமாதானம் தேவையில்லை என்று கூறி ,"கற்புடைய செழுந்திருவை அரசவையில் துகில் உரிந்தபோது செயல் ஒன்றும் இன்றி நாம் அமர்ந்திருந்தோம்.  அவள் இறுதியில் "நீண்டானே - கரியானே - நிமலா - அச்சுதா - கோவிந்தா - கண்ணா' என்று முறையிட்டாள்.  அந்த அவையில் நாம் மாண்டார் போல நின்றோம்.  அந்த மாசு தீரவேண்டும் என்றால் போர் தான் வழி'' என்று முடித்தான்.  நகுலனும்  உவர்நிலத்தில் நல்விதையை நட்டால் முளைக்காது அதுபோல துரியோதனனிடம் நீதி கிடைக்காது எனவே போர் தான் சிறந்தது எனத் தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.  இப்போது தான் நாம் ஒரு அதிசயத்தை - மகாபாரதக் கதையின் மையக் கருத்தைப் பார்க்கப் போகிறோம்.  இறுதியில் சகாதேவனிடம் கருத்தைக் கேட்டார் கண்ணன்.  சகாதேவன் சிரித்துக் கொண்டே, " அரசு வழங்குவானா துரியோதனன்?- யாருக்கும் தெரியாது.  பாஞ்சா- குழல் முடிப்பாளா? - யாருக்கும் தெரியாது.  ஆனால் கண்ணா உனக்கு எல்லாம் தெரியும்.  ஆதிமூர்த்தியே-துளபமுடியானே - சிறுவயதில் பல திருவிளையாடல்கள் புரிந்த உனக்கு எல்லாம் தெரியும்.  உன் கருத்து என்னவோ அது தான் என் கருத்து'' என்று சொன்னான்.  அதை வில்-யால் சொல்-லே பார்ப்போம் இப்போது. "முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று அலகை முலைப்பால் உண்டு,  மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,   பொதுவர் மனை வளர்ந்த மாலே!  ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்   அறிவேன், உண்மையாக;  திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!''  என்றான், தெய்வம் அன்னான்.''  அதிர்ந்தான் கண்ணன்.  தனியாக அழைத்துப் போனான் சகாதேவனை.  போரைத் தடுக்கும் வழியைச் சொல் சகாதேவா என்றார்.  அவனோ மீண்டும் வாய்விட்டுச் சிரித்தான். "நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,  பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!  கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,  மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?'' என்றான். " உன்னைக் கட்டிப்போட்டு விட்டால் இந்தப் போரை நிறுத்தலாம்'' எனத் தன் கருத்தைச் சகாதேவன் சொல்ல கண்ணன் "என்னைக் கட்டிப்போட உன்னால் இயலுமா?'' என்று கண்ணன்  கேட்கிறார்."உன் வடிவு காட்டின் இயலும்!' என்றான் சகாதேவன்.  கண்ணன் பல வடிவு கொண்டான்.  ஆனால் சகாதேவன் கருத்துடன் கண்ணனின் மூலவடிவை முடிவு செய்து பிணித்துவிடுகிறான்.  உடனே கண்ணன், " என் பாதப் பிணிப்பை விடுக'' என்று முறையிடுகிறான்.  அப்போது சகாதேவன், "நடக்கப் போகும் போரில் நாங்கள் ஐவரும் இறக்கக் கூடாது.   எங்களை நீ தான் காக்க வேண்டும் கண்ணா.  உன்னால் தான் எங்கள் ஐவரையும் காக்க முடியும்.  பூமியின் பாரத்தை நீக்க நீ அவதாரம் எடுத்து வந்துள்ளாய்.  ஆனால் எங்களையும் பூமிபாரத்தில் இணைத்து விடாதே.  நாங்கள் ஐவரும் உயிருடன் இருக்க நீ உத்தரவாதம் வழங்கவேண்டும்'' என்றான்.  சரி என்று உடன்பட்டார் கண்ணன்.  கால்கட்டை அகற்றினான் சகாதேவன்.  தனியிடத்தி-ருந்து வந்த கண்ணன் "சந்து செய்தல் இனிது' என்று முடிவைச் சொல்கிறார்.  சந்து என்றால் சமாதானம். உடனே பாஞ்சா- ஓடோடி வந்து கண்ணனிடம் முறையிட்டு போர் நடந்தே தீரவேண்டும்.  பழிவாங்கப்பட வேண்டும் என்று முறையிடுகிறாள்.
"கற்றைக் குழல் பிடித்து, கண் இலான் பெற்று எடுத்தோன்
பற்றித் துகில் உரிய, பாண்டவரும் பார்த்திருந்தார்;
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி,
அற்றைக்கும் என் மானம் ஆர் வேறு காத்தாரே?''
உடனே கண்ணன் "நானே உன் குழல் முடித்து வைப்பேன்'' என்று உறுதி கூறி பாஞ்சா-யைச் சமாதானப்படுத்துகிறான்.  இதி-ருந்து என்ன தெரிகிறது.  போர் நடக்கும் என்பது கண்ணனின் வாக்கி-ருந்து தெரிகிறது.  வெற்றி பெறப் போவது ஐவர் என்பதும் நமக்குப் புரிகிறது.  எல்லாம் இந்தக் கண்ணனின் திருவிளையாடல் தான். வில்-யார் கூறும் போது - அதைச் செந்தமிழில் படிக்கும் போது புல்லரிக்கும். "தொல் ஆண்மைப் பாண்டவர்க்குத் தூது போய் மீண்டதற்பின், நல்லாய்! உன் பைங் கூந்தல் நானே முடிக்கின்றேன்; எல்லாரும் காண'' என்றான் கண்ணன்.  கண்ணன் தூதனாக அத்தினாபுரி நோக்கிப் பயணமாகிறான்.  நாளை  தொடருவோமா?

==================================================================================================================================


தாத்தா: கண்ணன் தூதுவனாக ஏகி அத்தினாபுரி அடைந்தான். நகரின் தென்பாலுள்ள ஒரு சோலையில் கண்ணன் சிறிது நேரம் அமர்கிறார்.  காவலர்கள் துரியோதனிடம் போய் கண்ணன் நகர் எல்லையில் உள்ள செய்தியைக் கூறுகிறார்கள். துரியோதனன் உடனே எதிர்கொள்ளப் புறப்படுகிறான்.  சகுனி உடனே தடுத்து நிறுத்துகிறான்.  வீடுமர் முத-யோர் சென்று எதிர்கொள்கிறார்கள்.  கண்ணன் விதுரன் இல்லத்திற்குச் சென்று தங்குகிறார்.  விதுரன் கண்ணனைக் கண்டதும் மிக்க மகிழ்கிறான்.
உள்ளினான்; உணர்ந்து, உள்ளமும் உருகினான்; எழுந்து
துள்ளினான்; விழுந்து, இணை அடி சூடினான்; துயரைத்
தள்ளினான்; மலர்த் தடக் கையால் தத்துவ அமுதை
அள்ளினான் எனக் கண்களால் அருந்தினான்-அளியோன்.

கண்ணனும் ஏனையோரும் விதுரன் மனையில் விருந்துண்டு மகிழ்ச்சியோடு அமர்கிறார்கள்.  விதுரன் கண்ணன் வந்த காரணத்தை வினவுகிறான்.  தான் ஐவருக்காகத் தூதுவனாக வந்துள்ளதாகத் தெரிவிக்கிறான் கண்ணன்.  துரியோதனன் அரசு கொடான் என்கிறார் விதுரர்.   கொடாவிடின் பாண்டவர் பொருது பெறுவர் என்று நடக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிக்கிறான் கண்ணன்.  மறுநாள் கண்ணன் அரசவை நோக்கிப் போகிறார். அவை புகுந்து ஆசனத்தில் அமர்கிறார்.  "நேற்நே இந்நகர் வந்தும் எங்கள் அரண்மணைக்கு ஏன் வரவில்லை? விதுரன் வீட்டில் ஏன் தங்கினீர்கள்?'' என்று கேட்டான் துரியோதனன்.  கண்ணன், "பஞ்சவருக்காக நான் தூதுவனாக வந்துள்ளேன்.  ஒருவர் மனையில் தங்கி - இன் அடிசில் உண்டு - பின்னர் அவரை வெறுக்க எண்ண முடியுமா? அது நீதியா?'' என்று கூறி அதனால் தான் அரண்மனைக்கு வரவில்லை என்று கூறுகிறார கண்ணன்.  பொருதல் உறுதி என்பது அவரது பதி-ல் வெளியாகிறது.
"என் இல் நின் இல் ஒரு பேதம் இல்லை; இது என் இல்;
                நின் இல் அது; என்னினும்;
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன்
                வந்து எதிர் விளம்பினான்;
உன்னில், இன்னம் உளது ஒன்று; பஞ்சவர் உரைக்க
                வந்த ஒரு தூதன் யான்;
நின் இல் இன் அடிசில் உண்டு, நின்னுடன் வெறுக்க
                எண்ணுவது நீதியோ?
ஒருவர் வாழ் மனையில் உண்டு, பின்னும், அவருடன்
                அழன்று பொர உன்னினும்,
இரவி உள்ளளவும், மதியம் உள்ளளவும், இவர்களே
                நரகில் எய்துவார்.''
தூதனாக வந்த காரியத்தை விளம்பும்படி துரியோதனன் கேட்க, ஐவருக்கும் உரிய நாட்டைக் கொடுக்கும்படி கேட்கிறான் கண்ணன்.  "ஈ இருக்கும் இடம் கூட தரமுடியாது' என்று இரக்கமில்லாமல் பதில் சொல்கிறான் துரியோதனன்.  "ஐந்து ஊர்களையாவது கொடு' என்கிறார் கண்ணன். மறுக்கிறான் துரியோதனன்.  "உன் முன்னவன் தந்தை ஒரு பெண்ணை காத-க்கிறார் என்பதற்காக தனக்கு அரசாளும் உரிமையே வேண்டாம் என்று கூறினார்.  அவ்வளவு பெருந்தன்மை அவருக்கு இருந்தது. (ஆம் வீடுமர் தான் அவர்)  நீயோ முறை உள்ளவனுக்கு ஐந்து மாநகரங்களைக் கூட கொடுக்க மறுக்கிறாயே.'' என்றார் கண்ணன். துரியோதனன் சுடுமொழி பேசுகிறான்.  கண்ணன் போர் தான் இறுதி முடிவு என எச்சரிக்கிறார்.  சரி என்கிறான் துரியோதனன்.  அப்படியானால் போருக்கு ஒப்புக்கொண்டதாகச் சத்தியம் செய் என்கிறார் கண்ணன். "வெஞ் சமர் விளைக்கவே கை வழங்குக!' என, துரியோதனன் சினந்து தகாத வார்த்தைகள் கூறி கண்ணனைப் பழிக்கிறான்.  பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் அரசு தருவதாக ஒப்புக் கொண்டு இப்போது மறுப்பதால் போர் நடத்த ஒப்புக்கொண்டதை சத்தியம் செய்து கூறும்படி கண்ணன் கூறுகிறான்.  துரியோதனன் வெகுண்டு கூறிய வார்த்தை கேட்டு கண்ணன் அமைதியாக அவையை விட்டு வெளியேறினான்.  விதுரன் கண்ணனுக்கு விருந்து வழங்கியதைக் குத்திக் காட்டி தகாத வார்த்தைகளால் விதுரனின் தாயை பொதுமடந்தை எனக் கூறி அவமதிக்கிறான் துரியோதனன்.  விதுரன் சினந்து மறுமொழி கூறியதோடு நில்லாமல் தன் வில்லை முறித்து இனி போர் செய்ய மாட்டேன் வெங்கணை தொடுக்க மாட்டேன் என்ற சபதத்தோடு வெளியேறுகிறான்.  வீடுமன் விதுரனுடைய வில்வித்தையின் பெருமையைக் கூறி இவன் இல்லாமல் எப்படி விசயனை எதிர்க்க முடியும்.  விதுரனின் வில் சிறப்பு மிக்கது.  அரன் வில்லைப் போல - அரியின் வில்லைப் போல சிறப்பான வில் அது.  வில்வித்தையில் விதுரன் மிகச் சிறப்பானவன்.  அவனை இழந்து விசயனை எப்படி வெல்லப் போகிறோம் என்று தன் கவலையை வீடுமன் தெரிவிக்க வெகுண்டு எழுகிறான் கன்னன். "விசயன் வந்து அமரில் முடுகினால், எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி, இனி!'' என்பது வில்-யாரின் வாக்கு.  உடனே துரியோதனன் கன்னன் இருக்க பயமேன் என்று பதிலுரைக்கிறான்."உதார சீலன், உயர் அங்கர் கோன், வரி வில் ஒன்றுமே அமையும், உற்று எழும் பதாதியோடு அமரில் ஐவரும் பட மலைந்திட,  பரணி பாடவே.''.  கன்னனும் உடன் எழுந்து தன் வீரப்பிரதாபத்தை எடுத்துரைக்கிறான்.  ஏற்கனவே தோற்ற கதைகளை வீடுமன் எடுத்துரைத்து வீண்வார்த்தை வேண்டாம் என்று எச்சரிக்கிறார் கன்னனை.  கன்னனோ "இப்போது என்னிடம் நாகக்கணை உள்ளது.  நச்சென்று அடித்து வீழ்த்துவேன் அந்த விசயனை.  நாகக் கணையி-ருந்து விசயனால் தப்ப முடியாது.  விசயனை வீழ்த்தவே நாகக்கணை'' என்று கொக்கரிக்கிறான்.  விதுரன் வீடு திரும்பியதும் அங்கே அமர்ந்திருந்த கண்ணன் ஏன் சிறப்பு மிக்க தங்கள்வில்-னை ஒடித்தீர்கள் என்று கேட்கிறார். அப்போது விதுரன் "என்ன நடக்கும் என்ப்து யோசிக்கத் தெரியவில்லை துரியோதனனுக்கு.  அமைச்சர்கள் சொன்னாலும் கேட்பதில்லை.  அவர்களை மதிப்பதில்லை.  நாவடக்கமும் இல்லை.  இப்படிப்பட்டவனுக்காக போர் புரிந்து அதில் மாள்வது மடத்தனம்'' என்று முத்தாய்ப்பு வைக்கிறான் விதுரன்.  இதற்காகத் தானே கண்ணன் இவனது வீட்டில் வந்து தங்கி திருவிளையாடலை நடத்தி முடித்துள்ளார். "ஆவது கருதான் ஆகில், அமைச்சர் சொல் கேளான் ஆகில், வீவது குறியான் ஆகில், விளைவதும் உணரான் ஆகில், நாவது காவான் ஆகில், அவனுக்கா நடந்து போரில் சாவது, பழுது!' என்று அன்றோ சகத்துளோர் சாற்றுகின்றார்? செல்வம் வந்து உற்ற காலைத் தெய்வமும் சிறிது பேணார்; சொல்வன அறிந்து, சொல்லார்; சுற்றமும் துணையும் நோக்கார்; வெல்வதே நினைவது அல்லால், 'வெம் பகை வலிது" என்று எண்ணார்; வல் வினை விளைவும் ஓரார்'' என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறான் விதுரன்.  பின்னர் அங்கிருந்து குந்தி தங்கியிருந்த இடத்திற்குச் சென்ற கண்ணன் குந்தியின் முதல் மைந்தனைப் பற்றித் தனக்குத் தெரியும் என்று தகவல் தருகிறார்.  மிரள்கிறாள் குந்திதேவி.  பின்னர் நடந்த கதை முழுவதையும் கூறிய கண்ணன், "காதல் நின் புதல்வன்தன்னைக் கண் இலா அரசன்  பொன்-தேர்ச் சூதன் வந்து எடுத்துக்கொண்டு, சுதன் என வளர்த்த காலை,
ஆதபன், 'இவனை யாரும் கன்னன் என்று  அழைக்க' என்றான்; தாதையும், 'விசும்பில் சொன்ன நாமமே  தக்கது'  எனக் கூறி தேர்ப்பாகன் கன்னனைக் கண்டெடுத்து வளர்த்து வரும் கதையை விபரமாகக் கூறுகிறான் கண்ணன்.  தான் வந்துள்ள காரணத்தை விளக்கி விட்டு தூது வந்ததால் பயனில்லை எனவும் போர் உறுதி எனவும் சொல்- "எப்படியாவது கன்னனை ஐவருடன் கூட்ட வேண்டும் - ஒருவேளை கன்னன் மறுத்தால் அவனிடம் நாகக் கணையை ஒரு முறைக்கு மேல் மறுமுறை தொடுக்கக்கூடாது என உத்தரவாதம் பெற வேண்டும்'' என்று புகலுகிறான்.
இதற்குள் துரியோதனன் ஒரு திட்டம் தீட்டுகிறான்.  தனியாக வந்த கண்ணனைப் பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறான் துரியோதனன்.  அவன் தந்தை திருதராட்டிரனோ கண்ணனைக் கொல்லவேண்டும் என்று வழிகாட்டுகிறார்.  இதைக் கேட்ட நூற்றுவரில் ஒருவனான விகருணன் தூதனைக் கொல்வது பாவம் என்கிறான்.  கொல்லத்தகாதோர் யார் யார் என்று பட்டிய-டுகிறான்.
"மூத்தவர் - இளையோர் - வேதமுனிவரர் - பிணியின் மிக்கோர்
தோத்திரம் மொழிவோர் - மாதர் - தூதர் என்று இவரைக் கொல்-ற்
பார்த்திவர் தமக்கு வேறு பாவம் மற்று இதனின் இல்லை''
அப்படி கொன்றால் நரகம் நிச்சயம் என்றும் எச்சரிக்கிறான் விகருணன்.  துச்சாதனன் விகருணன் புகன்றதைக் கேட்டு வெகுண்டு விகருணனை போருக்கு அழைக்கிறான்.  கன்னனோ அம்பால் கொன்று விடுவேன் என்று அச்சுறுத்துகிறான்.  சகுனியோ சூழ்ச்சியால் கண்ணனை சிறைப்படுத்தலாம் என்று தன் உபாயத்தைக் கூறுகிறான்.  சகுனியின் பேச்சைத் தட்டமாட்டானே துரியோதனன்.  இதற்கு ஒப்புதல் வழங்குகிறான். உடனே ஒரு நிலவறை அமைக்கப்படுகிறது.  அதில் அரக்கர் முத-யோரை மறைத்து வைக்கின்றனர்.  அதன் மேல் ஒரு இருக்கையைப் பொருத்தி அதில் கண்ணனை அமர வைப்பது எனத் திட்டமிடுகின்றனர்.  தூதன் மூலம் கண்ணனுக்குத் தகவல் அனுப்பி போர் குறித்துப் பேச அழைப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.  உடனே கண்ணனும் அரசவைக்குச் செல்கிறார்.  இருக்கையில் அமரச் சொல்கின்றனர்.  சிரித்துக் கொண்டே அமர்கிறார்.  உடனே இருக்கை நிலவறை நோக்கி வீழ்கிறது.  உள்ளே அரக்கர்கள்.  வீரர்கள்.  கண்ணனைச் சூழ்ந்து கொல்லப் பார்க்கிறார்கள்.  உடனே பேருருவம் எடுக்கிறார் கண்ணன்.  வெகுண்டு எழுகிறார். அனைவரையும் மாய்க்கிறார்.  கண்இமைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு பதறுகிறார் வீடுமன், துரோணர், கிருபன் ஆகியோர்.  கண்ணனின் பெருவடிவு கண்டு மகிழ்ந்து கண்ணனைத் துதிக்கின்றனர்.  தங்களை அறியாமல் இது நடந்தது எனக் கூறுகின்றனர்.  தேவரும் மலர் தூவி போற்றுகின்றனர்.  பெருவடிவின் வெப்பத்தால் தகித்த தேவர்கள் வடிவைச் சுருக்கிக் கொள்ளும்படி வேண்டுகின்றனர்.  கண்ணனும் தன் வடிவைச் சுருக்கிக் கொள்கிறார்.
ஆரணனே, அரனே,
புவனங்கள் அனைத்தையும் அன்று உதவும்  காரணனே,
கருணாகரனே, கமலாசனி காதலனே,
வாரணமே பொதுவே ஒரு பேர் இட வந்தருளும் புயலே,
நாரணனே! முனியேல், முனியேல்!' என, நாகர் பணிந்தனரே

மாதவனே, முனியேல்!
எமை ஆளுடை வானவனே, முனியேல்!
யாதவனே, முனியேல்!
இதயத்தில் இருப்பவனே, முனியேல்!
ஆதவனே, முனியேல்!
மதி வெங் கனல் ஆனவனே, முனியேல்!
நீதவனே, முனியேல்! முனியேல்!' என நின்று பணிந்தனரே.

 "கண்ண, பொறுத்தருள்!
வெண்ணெய் அருந்திய கள்வ, பொறுத்தருள்!
கார்வண்ண, பொறுத்தருள்!
வாம, பொறுத்தருள்!
வரத, பொறுத்தருள், நீ!-
திண்ணம் மனத்து உணர்வு ஒன்றும் இலாதவர் செய்த பெரும் பிழை'
என்று அண்ணல் மலர்க்கழல் சென்னியில் வைத்து, துதித்தனரே.  

திருமேனி ஒடுங்கிய பின் துரியோதனை நோக்கி, "வீமன் சபதம் காரணமாக இப்போது நீ என் கையால் இறக்கவில்லை.'' என்று கூறி உடன் வந்த மன்னர்களிடம் கன்னனின் பிறப்பு வரலாற்றை உணர்த்தி அவனை ஐவருடன் சேர இணங்க வைக்கும்படி கூறுகிறார்.  ஆனால் கன்னனோ ஐவரை இன்று அடுப்பின் - அது நெய்ந்நன்றி கொன்றதாகும் என்று மறுக்கிறான்.  பின்னர் அசுவத்தாமனால் ஏற்படப் போகும் ஆபத்துகளை முன்கூட்டி உணர்ந்து துரியோதனன் வேண்டினாலும் நீ சேனாதிபதி ஆகக்கூடாது எனக்கூறி தன் மோதிரத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறார்.  அவன் அதை எடுக்கும் போது சூரியனைச் சுற்றி வளையம் இருப்பதாகக் கூற அசுவத்தாமனும் சூரியனை நோக்குகிறான்.  இதை நூற்றுவர் தவறாகப் புரிந்து கொண்டு அசுவத்தாமன் கண்ணன் பக்கம் சாய்ந்துவிட்டான் எனவும் இனி அசுவத்தாமனை நம்பக்கூடாது எனவும் முடிவெடுக்கின்றனர்.  அவனைப் போரில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என முடிவெடுக்கின்றனர்.  கண்ணன் விரைவாகக் காய்களை நகர்த்துகிறான்.  இந்திரனை அழைக்கிறான்.  கன்னனிடம் சென்று கவச குண்டலங்களைப் பெற்றால் தான் விசயனைக் காக்க முடியும் என்ற உண்மையைக் கூறி கவச குண்டலங்களை யாசகமாகப் பெற்று வருமாறு அனுப்புகிறான்.  இந்திரன் சிறிது யோசித்தபோது,
"வல்லார் வல்ல கலைஞருக்கும், மறை நூலவர்க்கும்,
               கடவுளர்க்கும்,
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தோர்தமக்கும்,
               துறந்தவர்க்கும்,
சொல்லாதவர்க்கும், சொல்பவர்க்கும், சூழும்
               சமயாதிபர்களுக்கும்,
அல்லாதவர்க்கும், இரவி மகன் அரிய தானம்
               அளிக்கின்றான்.

அந்தக் கவச குண்டலங்கள் அளிப்பாய்' என்றால்,
               அவன் ஒன்றும்
இந்தப் புவியில் மறுத்து அறியான்; உயிரே எனினும்,
               ஈந்திடுவான்!''
என்று கூறி இந்திரனை அனுப்புகிறான்.  இந்திரன் கிழவடிவம் தாங்கி தானம் கேட்கும் போது ஓர் அசரீரி மாயவன் கண்ணன் இவனை ஏவிஉள்ளான். வழங்காதே எனத் தடுத்தது.  ஆனால் சிந்தையில் ஓர் கலக்கமற்று கவசகுண்டலங்களை தானமாகக் கொடுத்தான் கன்னன்.  இதைக் கண்டு அதிசயம் கொண்ட இந்திரன் தன் உண்மை வடிவை வெளிக்காட்டி கன்னனுக்கு வேல் ஒன்று பரிசாகக் கொடுத்தான்.  எந்தக் கணைக்கும் மாயாத கடோற்கசன் இதனால் மாய்வான் எனக் கூறி அதற்கான மறையையும் சொல்- மறைகிறான்.  கன்னன் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்கிறான்.  இந்திரன் நடந்த விபரத்தை கண்ணனிடம் கூறி அமராவதி திரும்புகிறான்.  கண்ணன் பின்னர் குந்தியைக் கண்டு கன்னனிடம் சென்று பேசி வரும்படி அனுப்புகிறான்.     கன்னனிடம் வந்து குந்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது கன்னன் ஒரு துகிலைக் கொடுத்து அதை உடுத்திக் காட்டும்படி கொடுக்கிறான். "படாமது என் கையில் தருக!' என, வருதலும், பயந்திலேன்எனில் எனை முனி' என்று, எடா, விரித்து, அலைத்து, உடல் படப் போர்த்து, எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள். குந்தி வந்து தான் தாய் என்பதை மெய்ப்பிக்கிறாள். மனம் கசிகிறார்கள் இருவரும்.  "நான் அன்றே உனை வளர்த்து எடுக்கப் பாக்கியம் செய்திலேன்'' என்று மனம் வருந்திக் கூறுகிறாள் கண்ணன்.  பின்னர் இளைஞர் ஐவருடன் சேர்ந்து அரசாளும்படி வேண்டுகிறான்.  மறுக்கிறான் கன்னன்.  "எனக்கு அரசு கிடைத்தால் உடனே துரியோதனனுக்குத் தந்து விடுவேன்.  என்னை ஆதரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவன் அவனே. எனவே நான் ஐவருடன் வருவது அவர்களுக்கும் நல்லதல்ல - எனக்கும் நல்லதல்ல'' என்று கூறுகிறான் கன்னன்.  குந்தி பின்னர் இரண்டு வரங்கள் கேட்கிறாள்.  நாகக் கணையை ஒரு தடவைக்கு மேல் தொடுக்கக் கூடாது எனவும் விசயன் தவிர மற்ற நால்வரையும் எக்காரணம் கொண்டும் கொல்லக் கூடாது என்றும்  வரம் கேட்கிறாள்.  அவனும் மனமுவந்து வழங்குகிறான்.  கொடுத்துச் சிவந்த கையாயிற்றே கன்னனின் கை. "தெறு கணை ஒன்று தொடுக்கவும், முனைந்து செருச் செய்வோன் சென்னியோடு இருந்தால் - மறு கணை தொடுப்பது ஆண்மையோ' வலியோ மானமோ மன்னவர்க்கு அறமோ - உறு கணை ஒன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் -ஒழிந்துளோர் உய்வர்'' என்று உரைத்தான்.  பின்னர் கன்னனும் குந்தியிடம் இரண்டு வரம் கேட்கிறான். விசயனால் வெல்லப்பட்டு வீழ்ந்தால் உலகறிய மகனே என்று போர்க்களத்தில் வந்து கதறி முலைப்பால் அளிக்க வேண்டும் என்று ஒரு வரமும் - போர் முடியும் வரை ஐவரிடமும் உண்மையைக் கூறக்கூடாது என்றும் ஒரு வரமும் வேண்டினான்.  குந்தியும் ஒப்புதல் அளித்தாள்.  பின்னர் குந்தி வந்து கண்ணனிடம் நடந்ததை அப்படியே கூறினாள்.  கண்ணனும் மகிழ்ந்து பாண்டவர் இருப்பிடம் சென்று நடந்த அனைத்தையும் தெரிவித்தான்.  மீதிக் கதையை நாளை பார்ப்போமா?