முன்னோர்களுக்கு வழிபாடு தாய்மொழியில் நடத்தவேண்டும் என்று நான் முன்னர் ஒரு கட்டுரையில் கூறியிருந்தேன். அதை எப்படி செய்யலாம் என கீழே விபரமாகக் கூறி உள்ளேன்.
முன்னோர்களுக்குப் பூசை என்பது நாம் செய்ய வேண்டிய இன்றியமையாத பணிகளில் ஒன்று. இதை அவர்கள் இறந்த தேதி அல்லது திதியைத் தெரிந்து கொண்டு அன்றைக்குச் செய்வது நலம்.(இவை எல்லாம் என் சொந்த கருத்தக்கள். ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். மறுப்பவர் ஐயரை வைத்து அவர் கூறும் வழிமுறைப்படி மிகச் சிரத்தையாக இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.) ஆனால் ஒருமுறை அருள் கூர்ந்து இப்பணியை எப்படி சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னோர் வழிபாடு
கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெளிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் - ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழி போல்
எண்ணிடப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ
பூசையும் பூசைக்கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும்
ஈசனும் ஆகிப் பூசை யான் செய்தேன் எனும் என் போத
வாசனையதுவுமான மறை முதல் அடிகள் போற்றி
தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
மனிதனாகப் பிறவி எடுத்த நாம் எவ்வளவோ இடர்ப்பாடுகளை அனுபவிக்க நேரிடுகிறது. இறைவன் எல்லோரையும் ஒன்றாகவே படைத்தான் என்றால் நமது இடர்ப்பாடுகளுக்கு என்ன தான் காரணம்? சிலர் சொல்கிறார்கள் நம் முன்வினைப் பயன் தான் காரணம் என்று. ஆம் அதுவும் ஒரு காரணம். வினைப்பயனின் கொடுமையைத் தணிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? படைத்த நம் இறைவனின் துணையையும் நம் முன்னோர்களின் துணையையுமே நாட வேண்டும். இறைவனின் துணையை நாடினால் அவர் தாய், தந்தை, குரு ஆகியோரை நாம் எப்படிப் போற்றியிருக்கிறோம் என்பதைப் பார்ப்பார். எனவே நாம் நமது பெற்றோரையும் ஆசிரியரையும் தினசரி வணங்க வேண்டும். போற்ற வேண்டும். அன்பு செலுத்த வேண்டும். கிருத்துவத்திலே கூட இறந்தவர்களுக்காக பல நாடுகளிலே ஒரு நாளை ஒதுக்கி வைத்து அதை அரசு விடுமுறையாக வைத்துள்ளார்கள். அதை சில பகுதிகளிலே கல்லறைத் திருநாள் எனக் கொண்டாடுகிறார்கள். சில பகுதிகளிலே மரித்தோர் நாள் என்று கொண்டாடுகிறார்கள். அன்று மக்கள் எங்கிருந்தாலும் தனது சொந்த ஊருக்கு வந்து பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் கல்லறையைச் சுத்தம் செய்து வழிபாடு செய்கிறார்கள். (விக்கிபீடியா என்ற வலைத்தளத்தில் மரித்தோர் நாள் என்பதை ஆங்கிலத்தில் அடித்துத் தேடினால் விபரம் கிடைக்கும்)
சிவராத்திரி அன்று மக்கள் எங்கு பணி புரிந்தாலும் தனது சொந்த ஊருக்கு வந்து அங்கு நடைபெறும் தனது குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள். குலதெய்வ வழிபாடு முன்பு முன்னோர்கள் வழிபாடாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
இப்பிறவியில் ஒரு பெற்றோருக்கு மகனாகப் பிறக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாயிற் சிறந்த கோயில் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை வேத வாக்கியமாகக் கொண்டு பெற்றோர் இருக்கும் வரையில் மனம் கோணாமல் மகன் எனப்பட்டவன் அவர்களுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும். தாயும் தந்தையும் இல்லையென்றால் இந்த வாழ்க்கை நமக்கு இல்லை என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் நமது ஆசிரியர் வருகிறார். நமது பெற்றோர் நாம் நல்ல அறிவினைப் பெற வேண்டும் என்பதற்காக கல்வி நிறுவனங்களில் இந்த காலத்தில் சேர்த்து விடுகிறார்கள். முன்னால் தனிப்பட்ட ஆசிரியர்-குரு- துறவி போன்றவர்களிடம் தமது குழந்தைகளை ஒப்படைத்து கல்வியைப் புகட்டினார்கள். நாம் இதிகாசங்களைப் படித்தாலும் சரி - சரித்திரத்தைப் படித்தாலும் சரி இது நமக்குப் புலப்படும். அவர் கற்றுக் கொடுத்து தான் நாம் உலகத்தைத் தெரிந்து கொண்டோம். வாழும் வழியைக் கற்றுக் கொண்டோம். இக்காலத்தில் குரு தவிர நாம் தினசரி படிக்கக்கூடிய நாளிதழ்கள் மற்றும் வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி, வலைப்பின்னல்கள், போன்றவற்றிலிருந்து நாம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். நாம் இவைகளில் நல்லவற்றையே கருத்தில் கொள்ள வேண்டும். இவ் விஷயத்தில் அன்னப்பறவையைப் பின்பற்ற வேண்டும். ஏன் என்றால் நமக்கு கிடைக்கக் கூடிய- நாம் படிக்கக் கூடிய - நாம் தெரிந்து கொள்ளக் கூடிய செய்திகளிலிருந்து தான் நம் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே ஒருவகையில் நாம் சிறப்பாக வாழ்ந்தாலும் சரி - சீரழிந்தாலும் சரி அதற்கு நாம் தான் காரணம் ஆகின்றோம். நாம் தெய்வத்தைத் தொழுவதற்கு முன் மாதா, பிதா மற்றும் குரு ஆகியோருக்கு நமது கடமைகளைச் செவ்வனே ஆற்ற வேண்டும். அவர்கள் மனம் புண்படாதபடி நமது கடமைகளை ஆற்ற வேண்டும்.
அப்போது தான் நாம் இந்த பிறவிச் சுழலிலிருந்து விடுபட முடியும்.
வழிபாட்டினைச் செய்யும் போது நான்- எனது என்ற தன்னுணர்வின்றி தியாக உணர்வுடன் வழிபாட்டினைச் செய்ய வேண்டும். உலக மக்களிலே ஒவ்வொருவருக்குமே குறைந்தது ஏழு தலைமுறைகளைத் தாண்டியவர்களாகத் தான் உத்தம மூ£தையர்கள் பெரும்பாலும் வந்தமைகின்றார்கள். அதாவது கடந்த 7 தலைமுறைகளாகவே கலியுகத்திலே சரியான முறையிலே நல் ஒழுக்கஇ நல்ல பண்பாடு உள்ள மக்களாக வாழமுடியாமல் சமுதாய வாழ்க்கை அமைந்து விட்டது. ஆனால் நாம் பெறுவதற்கு அரிய மானிடப் பிறவியைப் பெற்று உள்ளோம். எனவே எட்டுத் தலைமுறைகளுக்குத் தாண்டி இருக்கின்ற பித்ருக்களை மனதார, வாயார, உரக்கக் கூவி அழைத்து பித்ருக்களே, எங்களைக் காப்பாற்றுங்கள் என்று துதிக்க வேண்டும் நமது முன்னோர்களில் சிலர் முறையான வழிபாட்டின் காரணமாக அல்லது சந்ததிகள் செய்த பித்ருபூசை போன்ற நற்செயல்கள் மற்றும் முன்னோர் வழிபாட்டின் காரணமாக பித்ரு என்று அழைக்கப்படும் நிலையை அடைந்திருப்பர். ஆனால் பலர் அவர்கள் செய்த வினைகள் காரணமாக வினைப் பயனைத் துய்க்கும் பொருட்டு பல இடங்களில் பல வடிவங்களில் பல பிறவிகளில் இருப்பர். இவர்களும் பித்ரு என்ற நிலையை அடைய நாம் செய்யும் இந்த முன்னோர் வழிபாடு மிகவும் உதவும். முன்னோர்களுக்கு மட்டுமல்ல - நாம் நேசித்த நண்பர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்குக் கூட நாம் இவ்வகை வழிபாட்டின் மூலம் ஏற்றத்தைத் தர முடியும். இதற்குக் காருண்ய தர்ப்பணம் என கூறுவர்.
தந்தை இறைவனடி எய்திய பிறகு ஒரு மகனின் கடமை என்ன?
தந்தைக்கும் அவருடைய முன்னோர்களுக்கும் நீர்க்கடன் என்பதை முழு உணர்வோடு விருப்பத்தோடு செய்ய வேண்டும். தந்தை இப்படிப்பட்ட வழிபாட்டை மேற்கொள்ளவில்லை அல்லது முன்னோர்களில் எவரும் செய்து பழக்கமில்லை என்று அலட்சியமான பதிலை நாம் சொல்லக் கூடாது. காரணம் நாம் இன்று நன்றாக இருந்தாலும் அது பித்ரு என்று அழைக்கப்படும் நமது முன்னோர்களின் நல்லாசியே காரணம். நாம் பல்வேறு வகையான இடர்ப்பாடுகளில் சிக்கிக் கொண்டிருந்தாலும் அதற்குக் காரணமும் நாம் முறையாக முன்னோர்களை வழிபடாததே அல்லது நமது முன்னோர்கள் முறையாக வழிபாட்டினை மேற்கொள்ளாததே. இப்படி இருப்பதால் பித்ரு தோஷம் உண்டாகிறது.
பித்ரு தோஷம் என்றால் என்ன?
நாம் இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து முறையாக பித்ரு பூசை என்னும் வழிபாட்டினை முறையாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நம்முடைய குலம் தழைத்தோங்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். பிணிகள் வரா. வந்தாலும் விரைவில் நீங்கும். புகழ், நீண்ட நாள் வாழ்வு, நல்ல மகப்பேறு, வீடு-வாகன வசதி, பதவி உயர்வு, இறுதியில் வீடு பேறு தானாக தேடி வரும். குடும்பம் தழைத்தோங்கும். இதை நாம் படித்தால் மட்டும் போதாது. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகை நமக்கு அறிவுறுத்தியது போல் கசடறக் கற்க வேண்டும். கற்றபடி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.
சிரார்த்த தினத்திலும், தர்ப்பண தினத்திலும் இறந்தவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கலந்து நீர்க்கடன் செய்து, அன்றைய தினம் இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, காக்கைக்கு உணவிட்டு, பசுவுக்குத் தீவனம் கொடுத்து, புத்தாடைகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இப்படிச் செய்வதால் நாம் முன்னோர்களின் அருளாசியைப் பெறலாம்.
நாமும் நம் குடும்பத்தினரும் நலமாக- வளமாக வாழ இக்கடமையைத் தவறாமல் நாம் செய்தே ஆக வேண்டும். முன்னோர்களுக்குச் செய்யும் கடமைகளை நல்ல ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். இன்றியமையாத பணிகளை ஒதுக்கிவிட்டு இப்படிப்பட்ட பணிகளுக்காக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறதே - பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே இந்தப் பணிகளைச் செய்யக் கூடாது. இந்தக் கடமையைப் பற்றிப் படிக்க வேண்டும். அதன்படி நடக்க வேண்டும். பிறரிடம் கூடி இதன் இன்றியமையாததை நாம் எல்லோருக்கும் உரைக்க வேண்டும். அப்பொழுது தான் நம் பண முற்றுப் பெறும். இது வீடு போன்ற அமைப்பில் உள்ள ஒரு பணி. படி - நடை - கூடம் - முற்றம். இது தான் வாழ்க்கைமுறை.
முன்னோர்களைத் திருப்திப்படுத்துவதையே பித்ரு பூசை - பித்ரு தர்ப்பணம் என்று கூறுகிறார்கள். தர்ப்பணம் என்றால் திருப்திப்படுத்துவது என்று பொருள். முன்னோர்களைத் திருப்திபடுத்துவது என்பது தகப்பனார் வழியிலே இறந்த ஆறு பேருக்கும், தாய் வழியிலே ஆறு பேருக்கும் செய்ய வேண்டும்.
தந்தை வழியில் ஆறு பேர் யார்?
தந்தை-தாய்
தந்தையின் தந்தை- தந்தையின் தாய்
தந்தையின் தாத்தா-தந்தையின் பாட்டி
தந்தையின் முப்பாட்டன் - தந்தையின் முப்பாட்டி
தாய் வழயில் ஆறு பேர் யார்?
தாயின் அப்பா- அம்மா
தாயின் தாத்தா-பாட்டி
தாயின் முப்பாட்டன்-தாயின் பாட்டிக்கு முப்பாட்டி
(எந்தை தந்தை தந்தை தந்தை தன் மூத்தப்பன் எனப் பெரியாழ்வார் கூறுவார்)
இது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாவிட்டால் ஒரு பேனாவை எடுத்து கீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி பெயர்களை எழுதிக் கொள்ளவும். பலருக்கு முன்னோர்களின் பேர்கள் தெரிய வாய்ப்பு இருக்காது. காரணம் இன்றைய நாகரிகம்.
தந்தை வழி முன்னோர்கள்
த.- தந்தை
தத- தந்தையின் தந்தை
ததத- தந்தையின் தந்தையின் தந்தை
தததத- தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தை
ததததத- தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தை
அ- அன்னை
தஅ- தந்தையின் அன்னை
ததஅ-தந்தையின் தந்தையின் அன்னை
தததஅ- தந்தையின் தந்தையின் தந்தையின் அன்னை
ததததஅ-தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தையின் அன்னை
அன்னை வழி முன்னோர்கள்
அத- அன்னையின் தந்தை
அதத-அன்னையின் தந்தையின் தந்தை
அததத-அன்னையின் தந்தையின் தந்தையின் தந்தை
அதததத-அன்னையின் தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தை
அததததத-அன்னையின் தந்தையின் தந்தையின் த்ந்தையின் தந்தையின் தந்தை
அஅ- அன்னையின் அன்னை
அதஅ- அன்னையின் தந்தையின் அன்னை
அததஅ-அன்னையின் தந்தையின் தந்தையின் அன்னை
அதததஅ-அன்னையின் தந்தையின் த்நதையின் தந்தையின் அன்னை
அததததஅ-அன்னையின் தந்தையின் தந்தையின் தந்தையின் தந்தையின் அன்னை
இதை நன்கு கவனித்து பேர்களைக் குறித்துக் கொள்ள வேண்டும் ஒருவேளை பெயர்
தெரியவில்லை என்றால் இறைவனின் அல்லது இறைவியின் பெயரைக் குறித்துவைத்துக் கொள்ளவெண்டும்.
அதே போல் காருண்ய தர்ப்பணம் செய்ய விரும்புவோர் மறைந்து போன நண்பர்கள், உறவினர்கள்- அதாவது மேலே உள்ள பட்டியலில் இல்லாத தாய்-தந்தையின் முன்னோர் அல்லாதோர், மறைந்து போன நமது ஆசிரியர்கள், நாம் யாரை எல்லாம் மதித்தோமோ அவர்களில் இறந்திருந்தால் அவர்கள் பட்டியல், நாம் நேசித்த உயிரினங்கள் இவற்றை எல்லாம் பட்டியல் இட வேண்டும். இதே போல பேரிடர்களின் போது அதாவது சுனாமி, விமான விபத்து, இரயில் விபத்து போன்று பலவகை விபத்துகளில் இறந்தவர்களுக்கும் நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
உளத் தூய்மையுடனும் உள்ள உறுதியுடனும், நல்ல உணர்வுடனும் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது மிக இன்றியமையாதது.
முன்னோர் வழிபாட்டின் போது ஐவகையில் மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே நாம் தூய்மையாக இருக்க வேண்டும்
1. உடல் தூய்மை
2. உளத் தூய்மை
3. உணவுத் தூய்மை
4. சொல் தூய்மை
5. செயல் தூய்மை
இப்பணிக்கு இன்றியமையாதவை ஆறு பொருட்கள்
அமர்வதற்கு புல்லினால் ஆக்கப்பட்ட பாய் அல்லது தூய்மையான பருத்தி ஆடை
தாமிரம் அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட தட்டு ஒன்று
தூய்மையான நீருடன் கூடிய தாமிர பாத்திரம்
தூய்மையான - கசடுகள் நீக்கப்பட்ட எள்
தர்ப்பைப் புல்
தர்ப்பையினால் செய்யப்பட்ட மோதிரம்
நாம் யாருக்காக வழிபாடு செய்கிறோமோ அவர்களின் பட்டியலை நாம் தயாராக வைத்திருக்க வேண்டும்
காருண்ய வழிபாட்டிற்காக நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், நாம் நேசித்த பிற உயிரினங்கள் பட்டியல்
பணியைத் துவக்குவோமா?
குறைந்தபட்சம் இரண்டு விளக்குகளை ஏற்றுக
கிழக்கு நோக்கி நாம் அமர வேண்டிய பாயை விரிக்க அல்லது தூய துணியை விரிக்க
இறைவனே நல்ல சிந்தனை ஏற்படவும் கெட்ட எண்ணங்கள் இருந்தால் விலகவும்
தங்களை வேண்டி இந்த தண்ணீரை வழிகாட்டும் இறைநூலாகக் கருதி உட்கொள்கின்றேன் எனக் கூறி தாமிர பாத்திரத்தில் உள்ள நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்
என்னுடைய அறிவையும் ஆற்றலையும் தூய்மைப்படுத்துவதற்காக
இந்த நீரை அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்
நான் செய்யும் செயலைத் தூய்மைப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும் தீய செயல்களைத் தடுத்து நிறுத்தவும் இந்த நீரை இறை நெறியாகக் கருதி அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்
நல்லவையே நடக்க வேண்டும் என்பதற்காகவும் தீய எண்ணங்கள் வராமல் தூய்மையான மனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காவும்
என வேண்டி இந்த நீரை இறை மொழியாகக் கருதி அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்
பூணூல் அணிந்தவர்கள் மட்டும் பூணூலில் உள்ள முடிச்சு வலது உள்ளங்கையில் வானத்தை பார்ப்பது போல் வைத்துக் கொண்டு, மற்றொரு பாகத்தை இடது கையில் தண்ணீர் பாத்திரத்தை மூடியவாறு வைத்துக்கொண்டு
இந்த ஒளிமயமான பூணூலை - தூய்மையாக இருக்கவும், ஆயுள்-ஆரோக்யம்-தைர்யம் ஏற்படவும் குலம் தழைத்தோங்கவும்
அணிந்து கொள்கிறேன் எனக் கூறி அணிந்து கொள்ள வேண்டும்
மூன்று தர்பைப் புல்களால் செய்த மோதிரத்தை அணிய வேண்டும். மூன்று புல்லை அமரும் இடத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். மோதிரத்தை அணியும்போது தர்பைப் புல்லினால் செய்யப்பட்ட மோதிரத்தை -
வருண விரலில் மோதிரத்தைப் போட்டுக்கொள்கிறேன். பாபத்தை நீக்க, நீண்ட ஆயுள் பெற, உடல் வளம் பெற, ஒளிமயமான எதிர்காலத்திற்காக, என் முன்னோர்கள் திருப்தி அடைய நான் இப்போது அர்ப்பணிக்கும் இப்பணிக்காக புல்லினால் செய்யப்பட்ட இம்மோதிரத்தை நான் அணிகிறேன் எனக் கூறி மோதிரத்தை அணிய வேண்டும்
குருவையும் குருவின் குருவையும் உலகங்களுக்கு எல்லாம் தலைவராய் விளங்கும் இறைவனை அறியும் பொருட்டு நான் வணங்குகிறேன்.
குருவே போற்றி
குருவின் குருவே போற்றி
இறைவா போற்றி
முதலில் கணபதியை பூசை செய்க
எங்கும் நிறைந்த இறைவனே - எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கும் இறைவனே - கணபதியே இடையூறுகள் நீங்க உங்களை வணங்குகிறேன்.
ஐந்து கரத்தனே யானை முகத்தனே
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனே
நந்தி மகனே ஞானக் கொழுந்தே
அல்லல் அகற்றுபவனே
தடைகளைத் தகர்ப்பவனே
கணபதியே உன் தாளிணையைப் பணிந்து
இப்பணியை மேற்கொள்கின்றேன்
இப்பணி இனிதே நிறைவேற
தடைகள் அகன்றிட
தாங்கள் இங்கு எழுந்தருளி அருளாசி வழங்க வேண்டும்
இப்படிக் கூறியவுடன் வலது கையால் இடது பக்க நெற்றியிலும் இடது கையால் வலது பக்க நெற்றியிலும் ஐந்து முறை குட்டிக் கொள்ளவும்
மூன்று புல்களை ஆசனமாக வைக்க வேண்டும்
பின்னர் பித்ருக்களுக்கு இறைவனான சூரியநாராயணரைப் பூசை செய்க
பூமியிலும் மற்ற உலகத்திலும் சூரியனின் ஒளி பிரகாசிப்பது போல எனது ஆத்மா தூய்மையடைந்து ஒளி வீசட்டும். தங்களை நான் பூசை செய்கிறேன். வாழ்வில் எனக்கு எல்லா வளங்களையும வழங்கி இப்பணி நிறைவேற அருளாசி வழங்குங்கள்.
பகலவனே
கதிரவனே
உலகுக்கு ஒளி வழங்கும் வள்ளலே
வழி காட்டும் வள்ளலே
இறைவனே ஈசனே எந்தையே
தொடங்கும் இப்பணி இனிதே நிறைவேற
தாங்கள் எழுந்தருளி அருளாசி வழங்க வேண்டும்
அனைத்து இடையூறுகளும் தடைகளும் விலகி
இறைவன் மனம் உவந்து
நல்லதாலும் கெட்டதாலும் தாக்குதல்கள் வராமல் இடையூறுகள் வராமல்
இறைவரே உளம் கனிந்து அருளாசி வழங்க வேண்டும்
இறைவனின் ஆணையால் - சான்றோர்கள், ஆன்றோர்கள், அந்தணர்கள் அருளாசியுடன்
இந்தியத் திருநாட்டில் - திராவிட தேசத்தில் - ................ஆண்டில்............ஊரில்
இன்று திதி ............................... நட்சத்திரம் ............................கூடிய அமாவாசைத் திதியில் எனது பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களான தந்தைவழி மற்றும் தாய்வழி பித்ருக்களும் திருப்தி அடையும் வண்ணம் எள்ளும் தண்ணீரும் சேர்த்து தர்ப்பணம் செய்கிறேன். அருள்கூர்ந்து அருளாசி வழங்க வேண்டும் எனக் கூறி
அனைவரையும் எழுந்தருளச் செய்ய வேண்டி இருப்பதால்
பூணூல் உள்ளவர்கள் வலமாக மாற்றிக் கொண்டு - நீரினால் கையைத் தூய்மையாக்கிக் கொண்டு
தெற்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
அனைத்து இடையூறுகளும் நீங்க
இறைவனே நீங்கள் திருப்தியடைய
இடையூறுகள் இனி வராமல் இருக்க
எல்லா நன்மைகளும் என்னை வந்தடைய
தோஷங்கள் பாபங்கள் விலக
இறைவனின் ஆணையால்
சான்றோர்கள் ஆன்றோர்கள் அந்தணர்கள் அருளாசியுடன்
எனது பெற்றோர்கள் மற்றும் மூதாதியர்களான அன்னை மற்றும் தந்தை ஆகிய இரண்டு வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்களும் திருப்தி அடையும் வகையில் எள்ளும் தண்ணீருமாக சேர்த்து இறைக்கிறேன். அர்ப்பணிக்கிறேன் எனக் கூறி.
3 தர்பைப் புல்களை நேர்கோடாகவும்
3 தர்ப்பைப் புல்களை செங்குத்தாகவும் வைக்கவும்
இப்பொழுது புல் நான்கு புறங்களில் மூன்று மூன்றாக மொத்தம் 12 நுனிகள் உள்ளன
மேல்புறம் உள்ள மூன்று நுனிகளும் சமீபத்தில் தந்தை வழியில் இறந்த 3 ஆண் முன்னோர்களைக் குறிக்கிறது
கீழ்புறம் உள்ள மூன்று நுனிகள் சமீபத்தில் தந்தை வழியில் இறந்த 3 பெண் முன்னோர்களைக் குறிக்கிறது
வலது புறம் உள்ள 3 நுனிகள் சமீபத்தில் இறந்த 3 அன்னையின் வகையில் இறந்த ஆண் பெருமக்களைக் குறிக்கிறது
இடதுபுறம் உள்ள 3 நுனிகள் சமீபத்தில் இறந்த 3 அன்னையின் வகையில் இறந்த பெண் பெருமக்களைக் குறிக்கிறது
இதைப் புரிந்து கொண்டு நாம் பட்டியல் தயார் செய்ய வேண்டும்.
உயிருடன் இருப்பவர்களைப் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
முன்னோல் வழிபாட்டினையொட்டி பூணூலை இடப்பக்கமாக மாற்றிக் கொள்ளவும்
இறைவனே போற்றி ஈசனே போற்றிஎந்தையே போற்றி எனக் கூறிக் கொண்டே
ஒன்றுபட்ட மனத்துடன் மன நிறைவுடன்
மறைந்த நமது முன்னோர்களிடம் அவர்களுக்கு ஆசனம் அளித்திருப்பதாகவும் அதில் வந்து அமரும்படியும் வேண்ட வேண்டும்
பித்ரு லோகத்தில் உள்ள எனது தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களே
தாய் மற்றும் தாய்வழி முன்னோர்களே
இரு வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்களே
அனைவரும் இந்த தர்ப்பைப் புல்லினால் உள்ள ஆசனத்தில் எழுந்தருள வேண்டும். இதோ இந்த எள்ளைச் சமர்ப்பிக்கிறேன். என் மேல் கருணை கொண்டு பஞ்சு போல் விரிக்கப்பட்ட இந்த தர்ப்பைப் புலலின் மேல் எழுந்தருள்வீர்களாக.
இப்பொழுது தான் நாம் தர்ப்பணத்தை துவக்கப் போகிறோம்.
இப்பொழுது வலது உள்ளங்கையில் கட்டைவிரல் மோதிரவிரல் நுனிகளால் எள்ளை எடுத்துக் கொண்டு முன்னோர்களில் மூத்தவரின் பெயரைக் கூறி
எங்கள் பூசையை ஏற்க வந்திருக்கும்
எமது தந்தை வழி முன்னோர்களே
தாய் வழி முன்னோர்களே
மனங்குளிர வார்த்த எள் நீர் ஏற்று
மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர்
என்ற பாடலைப் பாடிக் கொண்டே
அனைவருக்கும் எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணம் செய்கிறேன்
எனக் கூறிக் கொண்டே எள்ளும் நீரும் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு மூன்று முறை மந்திரத்தை ஓத வேண்டும்
நீரானது வலது பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் எள்ளும் நீரும் வர வேண்டும்
வரிசையாக மேல்புறம் உள்ள மூன்று நுனிகளும் சமீபத்தில் தந்தை வழியில் இறந்த 3 ஆண் முன்னோர்களைக் குறிக்கிறது
கீழ்புறம் உள்ள மூன்று நுனிகள் சமீபத்தில் தந்தை வழியில் இறந்த 3 பெண் முன்னோர்களைக் குறிக்கிறது
வலது புறம் உள்ள 3 நுனிகள் சமீபத்தில் இறந்த 3 அன்னையின் வகையில் இறந்த ஆண் பெருமக்களைக் குறிக்கிறது
இடதுபுறம் உள்ள 3 நுனிகள் சமீபத்தில் இறந்த 3 அன்னையின் வகையில் இறந்த பெண் பெருமக்களைக் குறிக்கிறது
12 நுனிகளுக்கும் உரிய பெயர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக
மூன்று முறை எள்ளும் நீரும் விட வேண்டும்
அதாவது 36 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பித்ரு லோகத்தில் உள்ள எனது தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களே
தாய் மற்றும் தாய்வழி முன்னோர்களே
இரண்டு வம்சத்தைச் சேர்ந்த மூதாதியர்கள் அனைவருக்கும்
பாத்யத்திற்காக நீரை வழங்குகிறேன்
அர்க்கியத்திற்காக நீரை வழங்குகிறேன்
ஆசமநீயத்திற்காக
மதுபர்க்கத்திற்காக
ஸ்நானத்திற்காக
வஸ்த்திரத்திற்காக
உபவீதத்திற்காக
ஆபரணங்களுக்காக
எள் சமர்ப்பிக்கிறேன்
கந்தம் சமர்ப்பிக்கிறேன்
சூர்ணம் சமர்ப்பிக்கிறேன்
தில அட்சதான் சமர்ப்பிக்கிறேன்
புஷ்பமாலை சமர்ப்பிக்கிறேன் எனக்கூறி பூவை இட வேண்டும்.
என வேண்டி இந்த எள்ளும் நீரும் சமர்ப்பிக்கிறேன் எனக் கூறி
ஆசனம் வழங்குவதாகவும்
கைகழுவ
கால் அலம்ப
முகம் கழுவ
உடல் தூய்மை செய்ய
நீர் தருவதாகக் கூறி சிறிது சிறிதாக நீர் விட வேண்டும்.
பிறகு உடை வழங்குவதாகக் கூற வேண்டும்
கந்தம் வழங்குவதாகக் கூற வேண்டும் சந்தனத்தை இட வேண்டும்
மஞ்சள் வைப்பதாகக் கூற வேண்டும்
அட்சதை சமர்ப்பிப்பதாகக் கூற வேண்டும்
பூக்களை சமர்ப்பிக்கிறேன் எனக் கூறி பூக்களைத் தூவ வேண்டும்.
உயிருடன் இருப்பவர்களை இந்த வழிபாட்டிற்கு அழைக்கக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இறை மண்டலத்தில் உள்ள எந்தன் தந்தையே உங்களைப் போற்றி வழிபடுகிறேன்
இறை மண்டலத்தில் உள்ள தந்தையின் தந்தையான பாட்டனாரே உங்களைப் போற்றி வணங்குகிறேன்
இறை மண்டலத்தில் உள்ள தாத்தாவின் தந்தையாகிய முப்பாட்டனாரே உங்களைப் போற்றி வணங்குகிறேன்
இறை மண்டலத்தில் உள்ள முப்பாட்டனாரின் தந்தையே உங்களைப் போற்றி வணங்குகிறேன்
(தாய்-தந்தை உள்ளவர்கள் தந்தையே-தாயே என வணக்கம் சொல்லக் கூடாது)
இறை மண்டலத்தில் உள்ள தந்தையின் தாயே அப்பத்தாப் பாட்டியே வணக்கம். போற்றி வணங்குகிறேன்
இறை மண்டலத்தில் உள்ள தந்தையின் பாட்டியே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள தாத்தாவின் பாட்டியே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள அம்மாவின் தந்தையே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள என் அம்மாவின் தாத்தாவே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள அம்மாவின் முப்பாட்டனாரே தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள அம்மாவின் முப்பாட்னாரின் தந்தையே நான் தங்களைப் போற்றி வணங்குகிறேன். வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள அம்மாவின் அம்மாவாகிய பாட்டியே வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள அம்மாவின் பாட்டியே வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள முப்பாட்டியின் அம்மாவே வணக்கம்
இறை மண்டலத்தில் உள்ள எனது மூதாதையர்களின் உடன்பிறப்புகளை போற்றி பூசை செய்கிறேன்
இறை மண்டலத்தில் உள்ள எனது உளள எனது மற்ற உறவினர்களையும் நண்பர்களையும்
நான்கு வகை இலைகளாலும் மலர்களாலும் போற்றி பூசை செய்கிறேன்
தூபம் ஏற்றுகிறேன்
தீபம் ஏற்றி வழிபடுகிறேன்
உணவு படைக்கிறேன்
தேங்காய், பழவகைகள், அரிசி, பருப்பு வெல்லம், கீரை, காய்கறி வகைகள் அனைத்தையும் தங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய எனது தந்தையே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்வீரகளாக
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய எனது தாத்தாவே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்வீரகளாக
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய எனது முப்பாட்டனாரே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன்
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய அம்மாவே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன், ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய என் தந்தையின் அம்மாவே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய என் தந்தையின் பாட்டியே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய என் தாத்தாவின் பாட்டியே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய அம்மாவின் தந்தையே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய அம்மாவின் தாத்தாவே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய முப்பாட்டனாரின் தந்தையே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய அம்மாவின் அம்மாவான பாட்டியே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய முப்பாட்டியே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்
இறை மண்டலத்தில் உள்ள வணக்கத்துக்குரிய முப்பாட்டியின் மாமியாரே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்
அம்மாவின் முப்பாட்டியின் மாமியாரே தங்களுக்கு எள்ளும் நீரும் கலந்து தர்ப்பணம் என்ற பெயரில் அர்ப்பணிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்
எள் நீர் ஊற்றியாகிவிட்டது
இப்பொழுது பூணூல் போட்டவர்கள் வலமாக மாற்ற வேண்டும்
இந்த தர்ப்பைப் புல்லின் மீது எழுந்தருளியுள்ள
தாய் மற்றும் தந்தை ஆகிய இரு வம்சத்தில் உள்ள மூதாதியர்களை நான் வணங்குகிறேன். வலம் வந்து வணங்குகிறேன்.
என்னுடைய அன்பான வணக்கத்தைத் தாங்கள் அருள் கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்
அன்புள்ளம் கொண்ட தந்தையை தாயே வணங்குகிறேன்
தாத்தாவே பாட்டியே வணங்குகிறேன்
முப்பாட்டனாரே முப்பாட்டியே வணங்குகிறேன்
நீர், நெருப்பு காற்று, உலகம், கோபம், வெறுப்பு மற்ற உறவினர்கள் ஆகியவர்களால் தாங்கள் அதிருப்தி அடையாமல் இருக்கும்படி வேண்டியும் திருப்தி அடையும்படி வேண்டியும் தங்களை மீண்டும் வணங்குகிறேன்.
இப்பணி முடிந்தவுடன் முன் நிலைக்கு எல்லோரையும் கொண்டு செல்லவேண்டும். நமது வீட்டில் வந்து நம்முடனேயே அவர்கள் இருக்க முடியாதல்லவா அதனால் அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்ப வேண்டும்.
பித்ருலோகத்தில் உள்ள எனது தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்கள் மற்றும் தாய் அவர்வழி முன்னோர்கள் மூதாதியர்கள் இந்த தர்ப்ப ஆசனத்தில் எழுந்தருளி இருக்கிறீர்கள். நான் தங்களை வழிபட்டேன். வழிபாடு நிறைவு பெற்றதால் அனைவரும் பித்ருலோகத்தில் அவரவர்களுடைய இருப்பிடத்திற்கு எழுந்தருள வேண்டும்.
தர்ப்பைப் புல் ஆசனத்தைக் கலைக்க வேண்டும்
தாய்-தந்தை இரு வம்சத்திலும் பிள்ளை இல்லாதவர்கள்
பிள்ளை பெற்றும் இல்லாதவர்கள்
சரியான வகையில் மரணமடையாதவர்கள் இவர்களுக்கு எல்லாம்
பின்னர் காருண்ய தர்ப்பணம் என்ற பெயரில்
இதே போல பெயர்களைக் கூறி கீழ்க்கண்ட பாடலைப் பாடிக் கொண்டே
எம் உற்றாரே உறவினரே
நண்பர்களே
அறிந்தோ அறியாமலோ
உணவுக்காகவும் பிற பணிகளுக்காகவும்
பயன்படுத்தப்பட்ட தாவரங்களே- மலர்களே-உயிரினங்களே
மனங்குளிர வார்த்த எள் நீர் ஏற்று
மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர்
எள்ளும் நீரும் விட வேண்டும்
தர்ப்பண வேலைகள் முடிந்தவுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து புல் மோதிரத்தைக் கழற்றி பிரித்துப் போடவும்
இறைவனே நல்ல சிந்தனை ஏற்படவும் கெட்ட எண்ணங்கள் இருந்தால் விலகவும்
தங்களை வேண்டி இந்த தண்ணீரை உட்கொள்கின்றேன் எனக் கூறி தாமிர பாத்திரத்தில் உள்ள நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்
என்னுடைய அறிவையும் ஆற்றலையும் தூய்மைப்படுத்துவதற்காக
இந்த நீரை அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்
நான் செய்யும் செயலைத் தூயமைப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும்
இந்த நீரை அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்
நல்லவையே நடக்க வேண்டும்
என வேண்டி இந்த நீரை அருந்துகிறேன் எனக் கூறி நீரைக் கரண்டியால் எடுத்து அருந்தவும்
பின்னர் 12 முறை தென்முகமாக முன்னோர்களையும் இறைவனயும் வணங்க வேண்டும்.
பிறகு பொட்டு, சந்தனம், குங்குமம் பூசிக் கொண்டு அட்சதையைப் போட்டுக் கொண்டு மூதாதையர்களையும், குலதெய்வத்தையும் பிரார்த்திக்க வேண்டும்.
குருக்களுக்கு தட்சணை தந்து மரியாதை செய்ய வேண்டும்
நீங்களே மனதார மேர்கண்டவைகளைக் கூறி செய்திருந்தால்
நான் செய்த பூசையில் வழிபாட்டில் குற்றம் குறைகள் இருந்தால் என்னை மன்னித்து அருள் புரிய வேண்டும் முன்னோர்களே மற்றும் பிற உறவினர்களே - உயிரனங்களே என்று கூற வேண்டும்.
பின்னர் இவ்வாறு ஊற்றிய எள்ளையும் நீரையும் ஓடும் ஆற்று நீரில் அல்லது கடலில் அல்லது குளத்தில் அல்லது கண்மாயில் விடலாம்
அல்லது
எள்ளை மட்டும் பிரித்து அதை காக்கைக்கும் மரங்களுக்கும் இடலாம்
நீரை மட்டும் மரத்திற்கு ஊற்றலாம்
சரி இந்த தர்ப்பணத்தை நாம் எப்போது செய்ய வேண்டும். சூரிய உதயத்தில் செய்ய வேண்டும்.
எங்கு செய்யலாம். வீட்டிலேயே செய்யலாம். ஆற்றோரம், கடலோரம் என்றால் மிகவும் சிறப்பு வசதி வாய்ப்பு இருந்தால் காசி, இராமேஸ்வரம், கயா, பிரயாகை, அரித்துவாரம், திருவள்ளூர், கும்பகோணம், செங்கல்பட்டு அருகே மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமான சீவரம், திருவிடைமருதூர், முறப்பநாடு, பாபநாசம் போன்ற காவிரி, கங்கை, தாமிரபரணி போன்ற நதிக்கரைகளில் செய்வது மிகவும் உத்தமம்.
தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே இந்த பித்ரு பூசைகளைச் செய்ய அதிகாரம் பெற்றர்கள் ஆவர். ஆனால் தந்தையானவர் உயிருடன் இருந்தும இப்படிப்பட்ட பூசைகளை செய்யவில்லை என்றால் குடும்பமே கலங்கும். கஷ்டங்களை அனுபவிக்கும். அதை சந்ததியினர் அனுமதிக்க முடியுமா? முடியாது. எனவே, தந்தை உயிருடன் இருக்கும் போது தனயன் இந்த வழிபாட்டினைச் செய்யலாமா? என்று நாம் யோசிக்கக் கூடாது. இது தேவையில்லாத சிந்தனை. தாராளமாக தனயன் இவ்வழிபாட்டினைச் செய்யலாம். முன்னோர்களை வழிபடும் உரிமை எல்லோருக்கும் உண்டு.
ஆணுக்குப் பெண் சமம் என்று வந்த பிறகு பெண்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்யலாம். (வேதம் என்பது வாழ்க்கைக்கான ஒரு நெறிப்படுத்துதல் தான். இப்போது உள்ள நடைமுறையில் அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணமாக முற்காலத்தில் நான்கு வர்ணங்கள்-சாதிப் பிரிவுகள் இருந்தன. இப்போது அது தேவையில்லை என்று போராடுகிறோம். தவறு. இப்போதும் பிரிவுகள் இருக்கத்தான் செய்கின்றன. முதல் அமைச்சர் அரசுச் செலவில் விமானத்தில் போவது போல் அரசாங்கத்தில் பணியாற்றும் ஓர் எழுத்தரோ அல்லது கடைநிலை ஊழியர் விமானத்தில் செல்ல முடியுமா? முடியாது. காரணம் அரசாங்கம் பணியாளர்களை பல வகைகளாக - நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அது போலத்தான் வாழ்க்கை நெறிமுறைக்கு வழிகாட்டக்கூடிய தன்மைகள் காலத்துக்கு ஏற்றவாறு மாறத்தான் செய்யும். நாம் மாற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும். உடையலங்காரம் அல்லது உணவு வகைகளை வேதகாலத்தில் உள்ளது போல் நாம் இப்போது வைத்துள்ளோமா? இல்லை. இவற்றை எல்லாம் மாற்றமுடியும் என்றால் தேவைக்கேற்றபடி பிற பணிகளிலும் மாற்றம் செய்து கொள்ளலாம்.)
கடல் கடந்து சென்று திரும்பினால் முன்னாள் கோவிலுக்கும் விடமாட்டார்கள். ஆனால் இப்போது அப்படியா? மேரி இருக்கிறோம் அல்லவா?
வீட்டில் மகனே இல்லை என்றால் முன்னோர் முக்தி அடைய வழி என்ன?
ஆண் சந்ததி இருந்தும் முன்னோர் வழிபாட்டினைச் செய்யவில்லை என்றால்
அதைப் பெண்கள் செய்து முன்னோர்களை அமைதிப்படுத்த வேண்டும். அவர்கள் ஆசியினைப் பெற வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட நாம் உணவாக உட்கொண்ட- வாழ்க்கையில் பல வேலைகளுக்குப் பயன்படுத்திய
ஒரறிவு ஈறறிவு, முன்று அறிவு, நான்கு அறிவு, ஐந்தறிவு உயிரினங்களுக்கும் நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
வழிபாடு முடிந்தவுடன் நாம் அன்னதானம் போன்ற தானங்களைச் செய்ய வேண்டும். இதை விளக்க மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. போரில் கர்ணன் மாண்ட பிறகு அவன் மேலுலகம் சென்றான். அங்கு அவனுக்கு உணவாகக் கிடைத்தவை தங்கத்தாலான உணவுப் பண்டங்களே. ஏன் என்று கேட்டதற்கு தர்ம தேவதை பதில் சொல்கிறது நீ ஏழைகளுக்கு உணவு அளிக்கவில்லை தங்கத்தால் பரிசே கொடுத்திருக்கிறாய். அன்னதானம் செய்யாததால் உனக்கு இங்கு அன்னம் கிடைக்கவில்லை என்று பதில் உரைக்கப்பட்டது. அதன் பின்னர் 16 நாள் அவகாசம் கேட்டு பூவுலகம் வந்து அன்னதானம் போன்ற பிற தானங்களைச் செய்து பரிகாரம் தேடினான் என்று கதை நீள்கிறது. எனவே மானுடப் பிறவி கிடைக்கும் போதே அன்னதானம் போன்ற பிற தானங்களைச் செய்து மகிழ வேண்டும்.
. பாரதமெங்கும் குறிப்பாகத் தமிழகமெங்கும் எண்ணற்ற சித்தர்கள் மற்றும் மாமுனிகள் சீவசமாதிகள் உள்ளன. இப்படிப்பட்ட சத்குருக்களை யதீந்ந்திரர்கள் என்பர். இங்கே பௌர்ணமி, துவாதசி போன்ற திதி நாட்களில் சாம்பிராணி தூபமிட்டு, மந்தாரை இலைகளில் முழுமையுமாக உணவு வகைகளை வைத்து குறைந்தது 12 பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ஆசிகள் பெற்றிட வேண்டும். இவற்றை யதிமாளயத் திருநாளில் செய்வது மிக உத்தமம்.
இது தவிர பிந்து தர்ப்பண பூசை என்பதை நம் முன்னோர்களாகிய சித்தர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளனர். பிந்து என்பது சீவனின் கரு ஆகும். சீவனின் கரு என்பது நமது சூக்கும சரீரங்களின் பிறப்புகளுக்குக் காரணமாக அமைகிறது. முற்காலத்தில் சந்தியாவந்தனம், அமாவாசை பூசை முதலியவற்றில் பித்ரு பூசை ஓர் அங்கமாக இருந்திருக்கிறது. இதனால் பித்ரு என்னும் தெய்வீக நிலை அடைந்த நம் முன்னோர்கள் உளம் மகிழ்ந்து தம் குலத்தினருக்கு அருளாசியை வழங்கினார்கள். மேல்நிலை அடைந்த நம் முன்னோர்கள் நாம் மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை நாம் உணர்ந்து வாழ வேண்டும் என்று கருதுகிறார்கள். எனவே தான் அக்காலத்திலே பலவிதமான தானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் ஓமங்கள் செய்யும் போது தானங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆடை அளித்தல், உணவு அளித்தல், குடை அளித்தல், காலணி அளித்தல், பசுவினை வழங்குதல், செல்வத்தை-தங்கத்தை வழங்குதல், பாத்திரங்கள் வழங்குதல், விளக்கு வழங்குதல், படுக்கை வழங்குதல் போன்ற பலவித தானங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. தனமுள்ளவன் தானம் செய்யவேண்டும் என்பது விதி. அப்போது தான் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் தலைமுறை சிறப்பாக இருக்க வேண்டும். தனம் உள்ளவன் தானம் செய்யாமல் தனக்கே ஒதுக்கி மகிழ்ந்தால் அவனுடைய வரப்போகின்ற தலைமுறை அல்லலுக்கு ஆளாக நேரிடும் என்பது நிதர்சனமான உண்மை. இதை நாம் பல குடும்பங்களின் தலைமுறைகளை ஆராய்ந்தால் புலப்படும்.
இது தவிர நித்ய தர்ப்பணப் பூசை என்பதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது என்ன தினசரி செய்ய வேண்டிய முன்னோர் பூசை?
தினமும் காலையில் எழுந்து இறைவனைத் துதித்து சிறிது நீர் அருந்தி பின்னர் தேனில் ஊறிய இஞ்சியை எடுத்து இறைவா இதை என் முன்னோர்களைத் திருப்திப்படுத்த உட்கொள்கிறேன் எனக் கூறி உட்கொள்ள வேண்டும். முன்னோர்களே இதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறி உட்கொள்ள வேண்டும். சில பொருட்களை நாம் பூசைக்கு உகந்தவையாக ஏற்றுக் கொள்கிறோம். அவை வாடினாலும் பூசைக்காக ஏற்றுக் கொள்ளப்படும். துளசி, வில்வம், விபூதி, தேன், இஞ்சி போன்றவை இவற்றில் அடக்கம். இவற்றை நீங்கள் வெளியூருக்குச் சென்றாலும் எடுத்துச் சென்று தடையில்லாமல் முன்னோர்களை வழிபடலாம்.
இவையெல்லாம் சரி - எனக்கு இப்போது இதைப் படித்த பிறகு முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. மனம் இருக்கிறது. செய்வதற்குத் தேவையான பணமும் உள்ளது. உளப்பூர்வமாக இவ்வழிபாட்டினைச் செய்ய விரும்புகிறேன். அக்கறையுடன் இப்பணியை ¢ஆற்ற விரும்புகறேன். என்னுடைய சந்ததியினர் வளமாக - நலமாக - இறைப்பணியில் நாட்டம் உள்ளவர்களாக - நல்லவர்களாக - கல்வியில் சிறந்தவர்களாக - வல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். என் கட்டுரை அந்த நினைப்பை உண்டாக்கினால் நான் மிக்க மகிழ்வேன்.
No comments:
Post a Comment