நான் இன்று KANNANSONGS.BLOGSPOT.COM என்று ஒரு வலை தளத்தில் கண்ணனில் பல அருமையான திரைப்படப் பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், பிற மொழிப் பாடல்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள், கேட்கும் வசதியுடன் கூடிய பல பாடல்களை படித்தும் - கேட்டும் - கண்டும் மகிழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது நமது சமூகத்தினர் எமநேஸ்வரத்தில் கொண்டாடும் ஒரு திருவிழாவின் புகைப்படங்கள், பெருமாள் பாடல்கள் ஆகியவற்றைக் கண்டேன். நமது சமூக மக்கள் எல்லோரும் கண்டு களிக்க வேண்டும் என்னும் பேராசையினால் அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். படித்து - படங்களைக் கண்டு மகிழுங்கள்.
ஆடி வரார்.. ஓடி வரார் வரதராஜப் பெருமாள்
என்ன இது.. இத்தனை பேரு மஞ்சள் ஆடை உடுத்தி எம்பெருமான் திருச்சின்னங்களை கையில் ஏந்திக் கொண்டு.. பாத்தா கோவில் வாசல்ல யாருக்கோ வரவேற்பு கொடுப்பதற்காக நிக்கிறாங்களோன்னு நினைக்கிறீங்களா ?
அதான் இல்லை.. இவங்கெல்லாம் ஒரு ஐந்து நாள் எமனேஸ்வரம் ஊரை விட்டு ஊர் சுத்தப் போறாங்க.. யாரோட சுத்தப் போறாங்கன்னு கேக்குறீங்களா.. இதோ கீழ இருக்கார் பாருங்க.. அவரோட தான்
பெருந்தேவி மணாளன்.. தேவர் பிரான்.. பேரருளாளன்.. ஸ்ரீவரதராஜன்..
எங்க ஊர் வரதராஜனை பற்றி எழுதலாம்னு உக்காந்தப்போ சில நாள் முன்பு கேட்ட திருச்சின்னமாலை ஞாபகம் வந்தது..
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், பேரருளாளனை அழகுற வர்ணித்திருப்பார். பேரருளாளனை உடனே தரிசிக்கணும்னு மனதில் ஆசை.. அப்புறம் என்ன.. உடனே பஸ்ஸை பிடிச்சு கிளம்பிட்டோம்ல.. அந்த திவ்யமான அனுபவம் இன்னொரு நாள் சொல்லுறேன்.
சாமிக்கு கோவில் கட்டி, நித்யப்படி பூஜையும் செஞ்சு.. முக்கிய தினங்களில் வீதி உலாவும் பண்ணுறோம்.. இருந்தும் ஸ்ரீவரதராஜன், ஒரு 5 நாள் சேந்தாப்புல ஊர் சுத்தணும்கிறார்.. எதுக்காம்??
காரணன்.. காரியம் இரண்டுமாகி இருப்பவன் ஆயிற்றே..
காரணமில்லாமலா, வெளியில் கிளம்புவார்.. துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு மண்டூகமாக மாறி இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் தர வேண்டியே இந்த விஜயம்
எமனேஸ்வரத்தில் மிகச் சிறப்பான திருவிழா.. திருவிழா நடக்கும் 18 நாட்களும் ஊரே கொண்டாட்டமா இருக்கும். அழகரை “அழகரப்பன்” என்று செளராஷ்ட்ர மக்கள் அழைப்பர்.
புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள், பயணத் திட்டம் யார் யாருக்கு என்ன பொறுப்பு எல்லாம் விஷ்வக்ஷேனர் ஆகிய சேனை முதலி தயாரா வைச்சிருக்கார்.
பயணத்திட்டத்தின் படி.. அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன்.. புஷ்பப் பல்லக்கில் ஏறி.. பெருந்தேவி தாயாரிடமும், சக்கரத்தாழ்வானிடமும் மற்றும் முக்கியமாக காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியிடமும் விடை பெற்றுக் கொண்டு,
பக்தர்கள் தீவட்டி ஏந்திக் கொண்டும்.. தோளுக்கினியானை தோளில் சுமந்தபடி. ஆடியும் பாடியும் ஓடியும் ஆரோகணித்துக் கிளம்புகின்றார்.
எந்த வருடமும் தவற விடாத.. என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும்.. ஊரார் அனைவரும் மிக்க சந்தோஷத்துடனும்.. பக்தியுடனும் எம்பெருமான்.. பேரருளாளன்.. வரதனை.. அழகனை கொண்டாடும்.. இப்பாடலை கண்டு களிப்போமா..
புஷ்பப் பல்லக்கு அசைந்தாடி வர.. குதூகலத்துடன்.. கோவிந்தா.. ஹரி என்ற கோஷம் முழங்க.. ஒரு துள்ளலுடன் எழுந்தருளுகிறார் வரதன்.
புஷ்பத்தின் மணங்களுடன்.. காலை குளிரில் பக்தர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு.. ஆற்றில் இறங்க தயாராகிறார்..
சரி.. இனி பாடலுடன் எம்பெருமான் ஆடலையும் பாப்போமா..
ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..
கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..
வைகாசி மாசத்திலே பிரம்மோத்ஸவம் பாரு
அந்த வைபவத்தில் காட்சி தரும் வாகனங்கள் பாரு..
கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
நாம் வடம்பிடித்து வலம் வருகின்ற தேரோட்டம் பாரு
ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..
கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..
வஸந்தோத்ஸவ வைபவத்தில் வாண வேடிக்கை பாரு..
பூ பல்லாக்கிலே பவனி வரும் கள்ளழகரை பாரு..
கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..
அதிர்வேட்டு சத்தத்திலே தீவட்டி வெளிச்சத்திலே
அதிர்வேட்டு சத்தத்திலே தீவட்டி வெளிச்சத்திலே
ஐந்தடுக்கு வாத்தியங்கள் இஷ்டத்துக்கு முழங்குது பார்..
ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..
கருப்பண்ண சுவாமியிடம் காவல் காக்க சொல்லி
தான் கைபிடித்த தேவியிடம் தைரியத்தை சொல்லி
வைகையிலே இறங்குகிறார் வட்ட நிலா ஜொலிக்க
வைகையிலே இறங்குகிறார் வட்ட நிலா ஜொலிக்க
அவர் கள்ளழகர் கோலத்திலே தல்லாகுளம் போய் அமர்வார்..
ஆடி வரார்..
தங்க நிற குதிரையிலே கள்ளழகரை பாரு
அவர் தங்கமென ஜொலித்து நிற்கும் வண்ணவராம் பாரு
சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு
சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு
நம்ம வரதராஜப் பெருமாளும் வண்டியூரில் அமர்வாரு..
ஆடி வரார்..
மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தரார் பாரு
அந்த மண்டகப்படியில் எழுந்தருளி தசவதாரம் பாரு..
கோவிந்தா கோவிந்தா... கோவிந்தோவ்..
நகரெங்கும் வலம் வருகின்ற நாராயணனை.. நம் வரதராஜனை தரிசித்து மகிழுங்கள்.
பேரருளாளன் அருள்வானாக.. மூன்று அழகர்களை பற்றி சொல்லலாம் என்று நினைத்துள்ளேன்.. அடுத்ததா.. பரமக்குடி சுந்தரராஜனையும்.. இறுதியாக.. சோலைமலை அழகனையும் வரும் வாரங்களில் பார்ப்போம்.
பாடல் எழுதி பாடியவர்: திரு. குங்கா. கே. நாகநாத அய்யர் அவர்கள் குழு, எமனை.
நமது சமுதாய மக்கள் எப்படி இறைவனைக் கொண்டாடுகின்றனர் - என்பதை இந்த பதிவு மிக அருமையாக விளக்குகிறது. நான் இப்போது வெளிநாட்டில் இருந்தாலும் நேரில் பரமக்குடி சென்று அங்கிருந்து வகை நதியைக் கடந்து எமனை சென்று வந்தது போல் ஒரு உணர்வு வருகிறது. பாடலை எழுதிப் பாடிய அன்பர் திரு குங்கா.கே.நாகநாத அய்யர் அவர்களுக்கும் கண்ணனில் பல பாடல்களை மிக அருமையாக தொகுத்து வழங்கும் KANNANSONGS.BLOGSPOT.COM. வலைத் தளத்திற்கும் சமுதாயத்தின் சார்பில் மிக்க நன்றி.
No comments:
Post a Comment