ஒரு நண்பர் அருமையான ஒரு செய்தியை அனுப்பி இருந்தார். நீங்கள் உபதேசம் செய்கிறீர்கள். கடைப்பிடப்பது இல்லை என்ற தொனியில் இருந்தது அவர் எழுதிய வாசகங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதை மேம்படுத்தி சமுதாயப் பயனுள்ள வழியில் இட்டுச் செல்ல அவர்கள் தங்கள் திறமையைப் பயன் படுத்த வேண்டும்.
இப்போது தான் இணையம் என்னும் புது ஊடகம் வளர்ச்சி பெற்று வருகிறது. இருந்தாலும் நமது சமூகத்தில் கோடிகணக்கான மக்கள் இருந்தாலும் இணையத்தில் வந்து நம் மொழி பற்றி பேசும் அன்பர்கள் சிலரே. இணைய தளத்தை பயன் படுத்தத் துவங்கினாலே பாதி வெற்றி கிடைத்த மாதிரி. படித்தவர்கள் எல்லாம் இணைய தளத்தில் உலா வருவது இல்லை. அப்படியே வருபவர்கள் மொழி பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை. இந்திப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவது இல்லை. நான் இந்த இரண்டையும் தேடியதால் தான் - இரு மாதங்களுக்கு முன் வரை - இணைய தள உலா என்றால் என்ன என்று தெரியாத நான் - BLOG என்றால் என்று ஒரு கட்டுரையில் படித்து இப்படி ஒரு தளத்தைத் துவக்கி என் கருத்தை எடுத்துரைக்க முடிகிறது. இந்த இணைய தளத்தில் உலா வருவதால் பல பயன்கள் உள்ளன என்பதை எடுத்துக் கூற வேண்டும் - இதன் மூலம் இணையதள உலா வருபவர்கள் அதிகமாக வேண்டும் என்பது என் முதல் குறிக்கோள். அப்படி வந்தால் மொழி கற்க தளங்கள் உள்ளன என்பதை எடுத்துச் சொல்வது அடுத்த குறிக்கோள்.
என்னுடய வயது அறுபது. இப்போது நான் கற்றுக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுவதை விட இளைய தலைமுறையினர் - பள்ளிக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி உண்மையில் விருப்பம் உள்ள பத்து பேருக்கு - தேவையான நூல்கள் வாங்கித் தர வேண்டும். ஊக்குவிக்க வேண்டும் என்பது என் அவா. அதைச் செய்தும் வருகிறேன்.
தினசரி காலையிலும் மாலையிலும் நமது மொழி பக்திப் பாடல்களைக் கேட்கிறேன். கிருத்துவ சமயமாக இருந்தாலும் அதில் சில பகுதிகளை - அது நமது மொழியில் உள்ளது என்பதால் - கேட்கிறேன். இதனால் பல சொற்களைக் கேட்கும் அனுபவம் எனக்குக் கிடைக்கிறது. (ஆனால் அந்த சமயத்தின் பால் எனக்கு ஈடுபாடு வராது. காரணம் நான் தினமும் பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய்ப்பரபந்தம் ஆகியவற்றைப் படித்து தித்திக்கும் தீந்தமிழையும் சுவைப்பவன். எனவே இறைவன் திருநாமத்தைச் சொல்லிப் - புகழ் பாடி - துதி பாடி - ஆனந்தக் கண்ணீர் வரும் அளவுக்கு அனுபவிப்பவன்.).
என்னுடைய ஆசை எல்லாம் எனது உறவினர் கிருத்துவத்தில் ஈடுபாடு கொண்டு அவர்கள் மறையை குறுந்தகடாக வெளியிட்டது போல் நமது மொழி வாக்கியங்களை உரக்கப் படித்து - பதிவு செய்து - இலவசமாக இணைய தளம் மூலம் - இணைய தள உலா வர முடியாதவர்களுக்கு இலவசமாகக் குறுந்தகடு கொடுக்க வேண்டும் என்பதே. விரைவில் வழி பிறக்கும்.
No comments:
Post a Comment