Monday, October 11, 2010

TEACHING SOURASHTRA,TAMIL AND ENGLISH TO CHILDREN

இன்று காலையில் என் பேத்தியுடன் நான் வலைத் தளங்களில் உலா வந்து கொண்டிருந்தேன்.  அவள் படிப்பது முதலாம் வகுப்பு.  ஆனால் கணினியில் தினசரி ஆங்கிலத்தில் நூல்களை படிப்பது ஒரு வழக்கம்.  அதை ஏற்படுத்திக் கொடுப்பது நமது கடமை.  வீட்டில் கணினி இருக்கும்.  இணைய தள வசதி இருக்கும்.  அதற்கான தொழில் நுட்ப அறிவும் இருக்கும்.  ஆனால் இணையத்தை திரைப்படம் பார்க்க, உறவினர்களுடன் பேச, பாடல்கள் கேட்க,  மின்னஞ்சல் பார்க்க மட்டும் உபயோகப் படுத்துவோம்.  அது தவறு.  நம் சிறார்களுக்கு நாம் நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.  நாம் கோடு போட்டால் அவர்கள் சாலையை அமைப்பார்கள்.  அவ்வளவு திறமை நமது சிறார்களிடம் உள்ளது.   என் தந்தை மூன்றாம் வகுப்பு வரை படித்தவர்.  படிக்க முடியவில்லை என்ற உணர்வு கொண்டவர்.  பல இன்னல்களுக்கு இடையில் அவர் என்னை இளங்கலை வரை படிக்க வைத்தார்.  என் படிப்புக்கு உதவியவை நம் சமூகத்தினர் அமைத்துக் கொடுத்த பள்ளிகள்.  கீழ வெளி வீதியில் அமைந்த சௌராட்டிர  ஆரம்பப் பாடசாலை.   பின்னர் ஜான்சி ராணி பூங்கா என்று முன்னர் இருந்த  இடத்திற்கு எதிரில் அமைந்த சௌராட்டிர நடுநிலைப் பள்ளி.  பின்னர் சௌராட்டிர மேல் நிலைப் பள்ளி.   பின்னர் கல்வி வள்ளல் தியாகராசர்  செட்டியார் நடத்திய  தெப்பகுளம் அருகில் அமைந்த தியாகராசர் கலைக் கல்லூரி.  அங்கு இருந்த ஆசிரியர்கள் எல்லாம் கற்றுக் கொடுப்பதை ஒரு பணியாக மேற்கொண்டார்கள் என்று சொல்வதை விட ஒரு கடமையாகக் கருதி கண்ணும் கருத்துமாகக் கற்றுத் தந்தார்கள்.  அதனால் தான் கற்றவர்கள் குறைந்து - தறி நேய்வதிலும் சாயம் போடுவதிலும் - துணிக்கடைகள் நடத்துவதிலும் மூழ்கி இருந்த நமது முன்னோர்கள் அடுத்த தலைமுறையை  ஒரு கற்ற தலைமுறையாக உருவாக்க முடிந்தது. வீட்டுக்கு வீடு பணம் வசூலித்து - பணம் படைத்தவர்கள் தாராளமாக கொடுத்த நிதி உதவியுடன் தான் பள்ளிகள் அமைந்த இடங்கள் வாங்கப்பட்டன.  கட்டிடங்கள் கட்டப்பட்டன.  பின்னாளில் KLN குடும்பத்தினர் தொடர் முயற்சி மேற்கொண்டதால் பொறியியல் கல்லூரி வந்தது.  பல வழிகாட்டிகளினால் சௌராட்டிரக் கலைக் கல்லூரி வந்தது.   அதனால் அடுத்த தலைமுறையினர் பொறியியல் படிப்பு  எளிதாகப்  படிக்க முடிந்தது.  இதில் பொருள்  ஈட்டுவது ஒரு குறிக்கோளாக இருக்கவில்லை.   அதனால் தான் ஆண்களும் பெண்களும் படிக்க முடிந்தது.  அதற்கான பள்ளிகளை - கல்லூரிகளைத் துவக்க முடிந்தது.  நமது சமூகத்தினரின் தொண்டு உணர்வு பல பேருக்குக் கல்வியைத் தந்தது என்பது உண்மை.  இதல் மதிய உணவு வழங்கிய கொடையாளர்கள் பலர்.  பசியைப் போக்கி கல்வி கற்க உதவியர்கள் அந்த வள்ளல்கள்.  அப்படிப் படித்ததனால் தான் இன்றும் பள்ளி செல்லும் பல மாணவர்களுக்கு வேண்டிய குறிப்பேடுகள்,  நூல்கள் ஆகியவற்றை வாங்கித் தர வேண்டும் என்னும் எண்ணம் அடியேன் மற்றும் பல பழைய மாணவர்கள் இடையில் நிலவுகிறது.  நான் தியாகராசர் கலைக் கல்லூரியில் ஓராண்டு 1967-68 படிப்பதற்குள் தமிழ் மொழி மேல் - ஓராண்டிற்குள் ஒரு பற்றை - ஏன் வெறியை விதைத்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.  அதனால் தான் PRAVESHIKA என்னும் நான்காம் நிலை ஹிந்தி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நான் அந்த மொழியைக் கற்பதை நிறுத்தி விட்டேன்.   தமிழ் மொழியில் அன்று அவர்கள் ஊட்டிய ஆர்வம் - பேராசிரியர்கள் தமிழண்ணல், சுப.அண்ணாமலை, சிதம்பரம் செட்டியார்,  பேராசிரியர் சுந்தரம், பேராசிரியர் கதிர் மகாதேவன்,  பேராசிரியர் சங்கர நாராயணன் போன்றோர் அருமையாகத் தமிழ் உணர்வை ஊட்டினார்கள்.  அப்போது எங்கள் முன்னோடி தா.கு.சுப்ரமணியமும் எங்கள் கல்லூரியில் படித்தார்.  அவர் கட்டிய பதில் இன்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம், பன்னிருதிருமுறை, திருவிளையாடற்புராணம், தாயுமானவர் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பாரதி தாசன் பாடல்கள்,  கண்ணதாசன் பாடல்கள்,  இப்படிப் பயணம் இன்று வரை தொடருகிறது.  முன்னோடி தா.கு.சுப்பிரமணியம் அவர்கள் காட்டிய பாதியில் நாயகி அடிகளார் பாடல் தொகுப்பை வாங்கிப் படித்தேன்.  மிக அருமையான நமது மொழிப் பாடல்கள்.  கருத்தாழம் மிக்கவை.  அதே போன்று நிலையூர் வித்தகர் ஒருவர் எழுதிய நாயகி பற்றிய அருமையான பாடல்களைப் படித்தேன்.  பின் மனு நீதியைப் பற்றி ஒரு நூலை நமது மொழியில் எழுதி இருந்தார்.  அதைப் படித்தேன்.  அப்போது தான் இதற்கு இணையான தமிழ் நூல் ஒன்றையும் வாங்கி இரண்டையும் இணைத்துப் படித்து பல நம் மொழிச் சொற்களைத் தெரிந்து கொண்டேன்.  வாழும் வள்ளுவர் என்றே அவரைக் கருதலாம்.   இது தவிர மேலும் பல நூல்கள் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.   மதுரை திரும்பியதும் அந்த நூல்களை வாங்கி படிக்க வேண்டும் என்பது என் அவா.     என் மொழி ஆர்வம் இந்த திசையில் தான் பயணிக்க வைக்கும்   .
 ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் எனக்கு இல்லை.  காரணம் சுருக்கெழுத்தில் உயர் வேகம் - தமிழிலும் ஆங்கிலத்திலும் நிமிடத்திற்கு நூற்று ஐம்பது வார்த்தைகள் வேகம் - எழுதும் தகுதியைப் பெற்று இருப்பதால் அதைத் தக்க வைத்துக் கொள்ள தினமும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பயிற்சி பெற வேண்டும்.  இந்த பயிற்சி இருப்பதால் தான் மாண்புமிகு மனிதரான திருமிகு பழ.நெடுமாறன் அவர்களிடம் குறிப்பு எடுத்து இந்த வயதில் கூட அவர் மூலம் பல அறிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.  காலம் தவறாமை -ஒருவரால் ஒரு சிறு நன்மை வந்திருந்தாலும் அவரை மறக்கக் கூடாது என்னும் உயரிய பண்பு - தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் இன்னல்களில் பங்கு கொள்ளவேண்டும் - அவர்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும்  - இது போல பல நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.  எனவே சுருக்கெழுத்தில் என் கவனம் சிதறக் கூடாது .அதனால் என் பேத்தியைத் தேர்ந்தெடுத்தேன்.  முடிந்த அளவுக்கு தமிழ் பாடல்களும் நாயகி பாடல்களும் கற்பதற்கு வசதி செய்து கொடுத்தேன்.   என் மகளும் உறுதுணையாக நின்று அவள் கற்பதற்கு துணை புரிந்தாள்.  என் பேத்தி படிப்பது சென்னையில்.  நான்காம் வகுப்பு.    ஆனால் நாயகி பாடல்களில் நாற்பது பாடல் வரை சொல்லத் தெரியும்.  திருவாசகத்தில் இருபது பாடல்கள் சொல்லத் தெரியும்.  திருப்பாவை முழுவதும் சொல்லத் தெரியும்.  இப்போது அடுத்த முயற்சியாக நமது மொழி எழுத்துகளைக் கற்றுத் தர சில நூல்களைத் தந்து உள்ளேன்.  ஏன் என்றால் ஐந்தில் வளையும்.  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.  நான் படிக்க முயற்சித்தால் பலன் குறைவு.
இன்னொரு பேத்தி - அமெரிக்கத் திருநாட்டில் முதல் வகுப்பில் படிக்கிறாள்.  என் மகனுக்கு அவனை விட அதிகமாக தன குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என ஆர்வம்.   என் மகன் படித்து இருப்பது பொறியியல் படிப்பு. முதல் வகுப்பில் படிக்கும் அவள் தினசரி பார்க்கும் வலைத் தளம் பார்க்கும் வழக்கத்தை உடையவளாக இருக்கிறாள்.  கால நிலையை தினமும் பார்க்கிறாள்.  இன்று குளிராக இருக்குமா - வெய்யில் வருமா மழை வருமா என்றெல்லாம் வலைத் தளத்தைப் பார்த்து தினமும் எனக்குச் சொல்கிறாள்.  அது போக  starfall  என்னும் தளம்.  இந்த தளத்தைத் திறந்தால் அது எழுத்துகளைக் கற்றுத் தருகிறது.  வார்த்தைகளைக் கற்றுத் தருகிறது.  கதை படிக்கும் வழக்கத்தை உருவாக்குகிறது.  நாள்காட்டி உருவாக்கி பிறந்த நாள், விடுமுறை நாள், முக்கிய விடுமுறை நாள் பற்றிய தகவலைத் திரட்டக் கற்றுத் தருகிறது.  எழுத்துகளைச் சேர்த்தால் வரும் சொல் என்ன என்பதற்குப் பயிற்சி தருகிறது, அதை உச்சரிக்கும் முறையைச் சொல்லித் தருகிறது.  அதிலே கவனம் செலுத்துகிறாள்.
கணினி மற்றும் இணைய இணைப்பு இருந்தால் - தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன் குடும்பத்துடன் அமர்ந்து - பொழுதை போக்குவதை விட்டுவிட்டு - பொழுதைக் குழந்தைகளுக்காக நாம் செலவிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.  இதோ அந்த வலைத் தளத்தின் தலைப்புப் பக்கம்.  அது தனது கொள்கையாக பெருமையுடன் அறிமுகப் படுத்திக் கொள்வதைப் படியுங்கள்.
Starfall.com opened in September of 2002 as a free public service to motivate children to read with phonics. Our systematic phonics approach, in conjunction with phonemic awareness practice is perfect for preschool, kindergarten, first grade, second grade, special education, homeschool, and English language development (ELD, ELL, ESL). Starfall is an educational alternative to other entertainment choices for children.
அருமையாகத் தலைப்புகள் உள்ளன.   அதன் உப தலைப்புகள் மிக அழகாக நம்மை வழி நடத்திச் செல்கின்றன.
let get ready to read
calender, ginger bread,grandparent, pumpkin
learn to read
turkey, snowman,100thday, groundhog
it is fun to read
clover, valentine, wordhunt, skype
i am reading
flower





குழந்தைகளுக்கு ஆங்கில அறிவை ஊட்ட இந்த தளத்தைப் பெற்றோர்கள் பயன்படுத்தலாம்.
இது போலவே
என்னும் தளம் தமிழ் மொழியை எழுத்து, சொல், இலக்கணம் எனறு வகைவகயாகச் சொல்லித் தருகிறது.
நம் மொழியைக் உபமன்யு என்னும் பெயரில் ஒருவர் ஒரு அருமையான தளத்தை வைத்து எழுத்துகளைச் சொல்லிக்கொடுக்கிறார்.   மொழி பற்றிய மேலும் சில தளங்களைப் பற்றி என் பதிவுகளில் நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன். இன்னும் மேலே குறிப்பிட்ட தளங்களைப் போல உதாரணங்களுடன் ஓசையுடன் சௌராட்டிர மொழி சொற்கள், வாக்கியங்கள், இலக்கணம் போன்றவையுடன் இளைய சமுதாயம் விழித்து எழும் நாள் தொலைவில் இல்லை என்பது இப்போது தெரிகிறது.  இலக்கணத்தை வைத்து பெயர்ச்சொல், வினைச்சொல், வேற்றுமை உருபுகள் இவற்றை வைத்து விளக்கினால் இன்னும் எளிதில்   நம் மொழியை நாம் பரப்ப முடியும் எனறு நம்புகிறேன்.
வணக்கம்.

No comments:

Post a Comment